Published : 20 Apr 2019 12:00 AM
Last Updated : 20 Apr 2019 12:00 AM

நூற்றாண்டை கடந்த சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களுக்கு யுனெஸ்கோவின் அங்கீகாரம் கிடைக்குமா? - ஊழியர்கள், பயணிகள் மத்தியில் எதிர்பார்ப்பு

நூற்றாண்டை நிறைவுசெய்து பல ஆண்டுகளை கடந்து கம்பீரமாக நிற்கும் சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களுக்கு உலக புராதன சின்னமாக யுனெஸ்கோவின் அங்கீகாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென ரயில்வே ஊழியர்கள், பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்திய ரயில்வே 166 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. சிலிகுரி - டார்ஜிலிங் ரயில் பாதையை 1999-ம் ஆண்டும், மும்பை சத்ரபதி ரயில் நிலையத்தை 2004-ம் ஆண்டும், ஊட்டி மலை ரயில் பாதையை 2005-ம் ஆண்டும் உலக புராதன சின்னங்களாக யுனெஸ்கோ அமைப்பு அறிவித்தது. மாதேரன் மலைப்பாதையையும், கங்கரா பள்ளத்தாக்கு பாதையையும் இந்த பட்டியலில் சேர்க்க இந்தியா வலியுறுத்தி வருகிறது.

இந்தியாவில் டெல்லி, மும்பை, மைசூரு, நாக்பூர், சென்னை உட்பட மொத்தம் 34 இடங்களில் ரயில்வே அருங்காட்சியகங்கள், கலைக்கூடங்கள் மற்றும் காட்சி பூங்காக்கள் மூலம் பாரம்பரிய ரயில்வே பொருட்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக 230 நீராவி இன்ஜின்களை ரயில்வே துறை பாதுகாத்து வருகிறது. 1855-ம் ஆண்டு தயாரிக்கப்பட்டு கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த ‘ஃபேரி குயின்’ இன்ஜினும், ஹாலிவுட் படங்களில் இடம்பெற்ற ‘அக்பர்’ இன்ஜினும் இயங்கும் நிலையில் உள்ளன.

இதுதவிர பாம்பன் பாலம் உள்ளிட்ட 25 பாலங்கள் மற்றும் சென்னை சென்ட்ரல், எழும்பூர், ராயபுரம் ரயில் நிலையங்கள், தெற்கு ரயில்வே தலைமை அலுவலக கட்டிடம் உட்பட 70 கட்டிடங்களை பாரம்பரிய சின்னங்களாக ரயில்வே வாரியம் அதிகாரப்பூர்வமாக அடையாளப்படுத்தி இருக்கிறது. மேலும், பாரம்பரிய சின்னங்கள் சிறப்பு குழுக்கள் அமைத்து, ஆண்டுக்கு ரூ.40 லட்சம் வரை நேரடியாக செலவிடவும் ரயில்வே வாரியம் உத்தரவிட்டது.

கடந்த 2008-ம் ஆண்டில் ரயில்வே வாரிய பாரம்பரிய பிரிவின் நிர்வாக இயக்குநராக இருந்த ராஜேஷ் அகர்வால், மும்பை ரயில் நிலையத்தைப் போல் சர்ச்கேட் பழைய டெல்லி ரயில் நிலையம், சென்னை சென்ட்ரல் மற்றும் ஹவுரா ரயில் நிலையங்களை உலக பாரம்பரிய அடையாளங்களாக யுனெஸ்கோ பிரகடனப்படுத்த பரிந்துரைக்கலாம். அதற்கான தகுதி அவற்றுக்கு உள்ளன என ரயில்வே அமைச்சகத்திடம் தெரிவித்தார். ஆனாலும், மேற்கண்ட ரயில் நிலையங்களுக்கு இன்னும் யுனெஸ்கோ அங்கீகாரம் கிடைக்கவில்லை. ரயில்வே வார விழாவை கொண்டாடி வரும் நிலையில் ரயில்வே ஊழியர்கள், பயணிகள் நல சங்கங்கள், பொதுமக்கள் மத்தியில் இனியாவது இந்த அங்கீகாரம் கிடைக்க ரயில்வே வாரியம் நடவடிக்கை எடுக்குமா? என, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதுதொடர்பாக ரயில்வே அதிகாரிகள் கூறும்போது, “ரயில்வே பாரம்பரியங்களை பாதுகாக்க தற்போதுள்ள சில சட்ட விதிகளின்படி பாரம்பரிய கட்டிடங்களில் எந்த மாற்றமும் செய்ய இயலாது. இதில், சில திருத்தங்கள் செய்தால் மட்டுமே யுனெஸ்கோவின் பரிந்துரைக்கு அனுப்ப முடியும். தெற்கு ரயில்வேயில் ராயபுரம், சென்னை சென்ட்ரல் (எம்ஜிஆர் ரயில் நிலையம்), எழும்பூர் ரயில் நிலையங்களுக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் கிடைக்க வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக ரயில்வே வாரியம்தான் முடிவு செய்யும்’’ என்றனர்.

இதுதொடர்பாக டிஆர்இயு துணை பொதுச் செயலாளர் மனோகரன் கூறும்போது, “தெற்கு ரயில்வேயில் 146 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள சென்னை சென்ட்ரல், 111 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள எழும்பூர் ரயில் நிலையங்கள், புராதன சின்னமாக யுனெஸ்கோ அங்கீகரிக்க தகுதிஉள்ளவை. சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களுக்கு யுனெஸ்கோவின் அங்கீகாரம் கிடைக்கும்போது உலக அளவிலான அங்கீகாரம் கிடைக்கும். சர்வதேச சுற்றுலா பட்டியலில் இணைந்து விடும். மேலும், இந்த கட்டிடங்களை பாதுகாக்கவும், மேம்படுத்தவும் ஆண்டுதோறும் கோடிக்கணக்கில் நிதி கிடைக்கும். எனவே, பாரம்பரிய ரயில் நிலையங்களை யுனெஸ்கோவின் அங்கீகாரத்துக்கு ரயில்வே வாரியம் பரிந்துரை செய்ய வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x