Published : 11 Apr 2019 01:51 PM
Last Updated : 11 Apr 2019 01:51 PM

வாக்குக்குப் பணம்; விளம்பரப் பலகை வைக்க உத்தரவிடக் கோரி மனு: தேர்தல் ஆணைய விளக்கத்தை ஏற்று உயர் நீதிமன்றம் தள்ளுபடி

பணப் பட்டுவாடாவைத் தடுக்க தேர்தல் ஆணையம் எடுத்து வரும் நடவடிக்கை குறித்த விளக்கத்தை ஏற்று, ஓட்டுக்குப் பணம் வாங்குவது தண்டனைக்குரிய குற்றம் என விளம்பரப் பலகைகள் வைக்கக் கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

வழக்கறிஞர் சூரியபிரகசம் பொது நலவழக்கு ஒன்றை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

“பூந்தமல்லியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தமிழக முதல்வர், தமிழக அரசு அறிவித்த 2000 ரூபாய் பணம் தேர்தலுக்குப் பின்பு வழங்கப்படும் என தெரிவித்திருக்கிறார். இது மறைமுகமாகத் தங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என வாக்காளர்களை மிரட்டுவதற்குச் சமமாக இருக்கிறது.

தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் வாக்குகளைப் பெற வாக்காளர்களுக்கு சட்டவிரோதமாக பணம் வழங்குவது தேர்தல் நடைமுறையை கேலிக்கூத்தாக்கிவிடும்.

தமிழகம் முழுவதும்  வாக்கு சேகரிக்கச் செல்லும் வேட்பாளர்கள் தங்களுக்கு ஆரத்தி எடுக்கும் வாக்காளர்களுக்கு ஒவ்வொரு முறையும் 500 ரூபாய் பணமாக வழங்குகின்றனர். இதுதேர்தல் ஆணையத்துக்கு தெரிந்தே நடைபெறுகிறது.

ஓட்டுக்குப் பணம் கொடுப்பதும், பெறுவதும் தண்டனைக்குரிய குற்றம் என அனைத்து வாக்குச் சாவடிகளிலும் விளம்பரப் பலகைகள் வைக்க ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும்'' என கோரிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அமர்வில் வந்தது, அப்போது இந்திய தேர்தல் ஆணையம் தரப்பில் பதிலளிக்கப்பட்டது.

அதில், ''இதேபோன்ற கோரிக்கைகளுடன் கே.கே. ரமேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கில், பணப் பட்டுவாடாவைத் தடுப்பதற்கும், பணப் பட்டுவாடா குறித்த புகார்களில் தேர்தல் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பது குறித்தும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன'' என தெரிவிக்கப்பட்டது.

மேலும் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தொடர் நிகழ்ச்சிகளை நடத்தி வருவதாகவும், துண்டறிக்கைகள் வழங்கி வருவதாகவும் இந்திய தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தேர்தல் ஆணையத்தின் விளக்கத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கறிஞர் சூரியபிரகாசத்தின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x