Published : 10 Apr 2019 07:24 PM
Last Updated : 10 Apr 2019 07:24 PM

வேலூரில் சிக்கிய ரூ.11.48 கோடி கணக்கில் காட்டாத பணம்: துரைமுருகன் மகன் மீதும் வழக்குப்பதிவு

காட்பாடியில் வருமான வரி சோதனையில் கணக்கில் வராத ரூ.11.48 கோடி ரூபாய் சிக்கிய விவகாரத்தில், திடீரென திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

வேலூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளராகப் போட்டியிடுகிறார் கதிர் ஆனந்த். இவர் திமுக பொருளாளர் துரைமுருகனின் மகன். வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் செய்துவரும் நிலையில் ஊழியர் கூட்டத்தில் சட்டப்பேரவை தொகுதி ஒன்றுக்கு ரூ.50 லட்சம் செலவழிக்கவேண்டும் என துரைமுருகன் பேசியதாக பிரச்சினை எழுந்தது.

இந்நிலையில் துரைமுருகன் இல்லத்தில் இரவு புகுந்த தேர்தல் பார்வையாளர்கள், வருமான வரித்துறையினர் குழு சோதனை நடத்தியது. அதில் கணக்கில் காட்டப்படாத ரூ.10 லட்சம் ரொக்கம் சிக்கியது. இதன்பின்னர் வருமான வரித்துறை பள்ளிக்குப்பத்தில் உள்ள சிமெண்ட் குடோனில் திடீர் சோதனை நடத்தியது. இதில் கட்டுக்கட்டாக கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டதாக  வருமான வரித்துறை தெரிவித்து இருந்தது.

கைப்பற்றப்பட்ட ரூபாய் நோட்டு பண்டல்கள் பேப்பரில் சுற்றப்பட்டு வார்டுகளின் பெயருடன் இருந்தது. அதே நாளில் கதிர் ஆனந்தின் கல்லூரி மற்றும் திமுக பிரமுகர்கள் சிலருக்குச் சொந்தமான வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

நடத்தப்பட்ட மொத்த சோதனையில் கணக்கில் வராத பணம் ரூ.11 கோடியே 63 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டதாக வருமான வரித்துறை தெரிவித்தது. பணம் கைப்பற்றப்பட்டது, யார் யாருக்கு தொடர்பு உள்ளது என்பது குறித்து விரிவான அறிக்கையை வருமான வரித்துறையிடம் தேர்தல் ஆணையம் அளித்தது.

வருமான வரித்துறை அறிக்கை அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்படும் என தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்திருந்தார். கடந்த 8-ம் தேதி வேலூர் மாவட்ட தேர்தல் அதிகாரி சிலுப்பன் என்பவர், மாவட்ட ஆட்சித்தலைவருக்கு அனுப்பியுள்ள புகாரில், ''தாமோதரன் என்பவர் குடியிருப்பில் நடத்திய சோதனையில் ரூ.11 கோடியே 48 லட்சத்து 51 ஆயிரம் கைப்பற்றப்பட்டது. இதில் பூஞ்சோலை சரவணன் என்பவர் தன்னிச்சையாக வருமான வரித்துறையிடம் தொடர்புகொண்டு அந்தப்பணம் தன்னுடையதுதான் என்றும், வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வைத்திருந்ததாகத் தெரிவித்திருந்தார்.  

அதன் அடிப்படையிலும், வருமான வரித்துறை கல்லூரி மற்றும் குடியிருப்பில் சோதனை நடத்த முயன்றபோது தடுக்கப்பட்டு பின்னர் அங்கிருந்த பணம் மற்றும் கண்காணிப்புக் கேமராக்கள் அகற்றப்பட்டு பணம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது எனக் கருதப்படுவதால் தேர்தல் வேட்புமனு தாக்கலின்போது கதிர் ஆனந்த் கொடுத்த வாக்குறுதியை மீறியதன் அடிப்படையில் மேற்கண்ட புகார் மீது உரிய நடவடிக்கை வேண்டும்'' என கேட்டுள்ளார்.

வேலூர் மாவட்ட தேர்தல் அதிகாரி சிலுப்பன் அளித்த புகாரின் அடிப்படையில் காட்பாடி காவல் நிலைய போலீஸார்  துரைமுருகனின் மகனும் திமுக வேட்பாளருமான கதிர் ஆனந்த் , வேலூர் மாநகர திமுக விவசாய அணி துணை அமைப்பாளர் பூஞ்சோலை சீனிவாசன், சிமெண்ட் குடோனுக்குச் சொந்தக்காரரான தாமோதரன் ஆகியோர் மீது  வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பிரிவு 125-A மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951, வருமான வரிச்சட்டம் 171(E)rw 171(B) 2 IPC 2ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x