Published : 23 Apr 2019 04:54 PM
Last Updated : 23 Apr 2019 04:54 PM

தமிழகம் முழுவதும் அங்கீகாரம் இல்லாத 709 தனியார் பள்ளிகள்: மாணவர் சேர்க்கைக்குத் தடை விதிக்க முடிவு

தமிழகத்தில் 709 தனியார் பள்ளிகள் அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டு வருவது கண்டறியப்பட்டுள்ளது. இந்த கல்வியாண்டு முதல் அந்தப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடத்தத் தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

தமிழகத்தில் 4,500க்கும் அதிகமான தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இவை பள்ளிக் கல்வித்துறையின் கீழ் வருகிறது.  இவற்றில் பல பள்ளிகள் உரிய அங்கீகாரமன்றி செயல்பட்டு வருவது தொடர்பாக பல்வேறு புகார்கள் அவ்வப்போது கூறப்பட்டு வந்தன.

இதனால் அங்கீகாரம் இல்லாத பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கல்வி வெகுவாகப் பாதிக்கப்பட்டது. இந்த நிலையை மாற்றவும், அங்கீகாரம் இல்லாத பள்ளிகளைக் கண்டுபிடித்து அதில் மாணவர் சேர்க்கைக்குத் தடை விதிக்கவும் பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

தமிழகத்தில் வரும் கல்வியாண்டில் அங்கீகாரம் இல்லாத பள்ளிகளில் மாணவர் சேர்க்கையினைத் தடுக்கும் பொருட்டு அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் குறித்து கண்டறிய பள்ளிக் கல்வித்துறை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு கடந்த 9-ம் தேதி சுற்றறிக்கை அனுப்பியது. 

ஏற்கெனவே பள்ளிக் கல்வித்துறை அதில் அங்கீகாரம் இல்லாத பள்ளிகளைக் கண்டறிந்து சம்பந்தபட்ட பள்ளிகளிடம் விளக்கம் கேட்க உத்தரவிடப்பட்டிருந்தது. நாளைக்குள் அந்தப் பள்ளிகள் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும்  விளக்கம் அளிக்கத் தவறும்  பள்ளிகள் அங்கீகாரம் இல்லாத பள்ளிகளாக முடிவெடுக்கப்பட்டு, அந்தப் பள்ளிகள் குறித்து  நாளிதழ்களில் விளம்பரம் செய்திடவும் சம்பந்தப்பட்ட பள்ளிகளின் வெளியே இந்தப் பள்ளி அங்கீகாரம் இல்லாத பள்ளி என்கிற பதாகை வைக்க வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 709 பள்ளிகள் அங்கீகாரம் இல்லாமல் இயங்குவது கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மதுரையில்106 பள்ளிகள், திருப்பூரில் 86 பள்ளிகள், சேலத்தில் 53 பள்ளிகள், திருவள்ளூரில் 48 பள்ளிகள், சென்னையில் 7 பள்ளிகள் உட்பட 709 பள்ளிகள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x