Published : 24 Sep 2014 02:22 PM
Last Updated : 24 Sep 2014 02:22 PM

மங்கள்யான் வெற்றி: இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தா.பாண்டியன் வாழ்த்து

மங்கள்யான் விண்கலம் முதல் முயற்சியிலேயே செவ்வாய் சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டிருப்பதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் தா.பாண்டியன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ மங்கள்யான் விண்கலத்தை இயக்கியது, முன்னூறு நாட்களுக்கு மேலாக நெடுந்தொலைவு பயணத்தை வெற்றிகரமாக முடித்து செவ்வாய் கிரகத்துக்குள் நுழைந்துவிட்ட அற்புத சாதனையை, அதுவும் முதல் முயற்சிலேயே வென்று முடித்துள்ள இந்திய விஞ்ஞானிகள், தொழில்நுட்ப நிபுணர்களை, இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி, முழுமனதோடு வாழ்த்துகிறது.

இந்திய நாடே பெருமைப் பட வைத்துள்ள சாதனை இது. இத்தகைய அற்புத விஞ்ஞான சாதனை வெற்றி பெற, 50 ஆண்டுகளுக்கு முன்பே அணு சக்தியையும், விண்வெளி ஆராய்ச்சியையும் ஆக்கப் பணிகளுக்குப் பயன்படுத்த வித்திட்ட இந்திய பிரதமர் நேருவையும், அவருடன் ஒத்துழைத்து அணு சக்தி ஆய்வு மையத்தை உருவாக்கி வளர்த்த விஞ்ஞானி ஹோமி பாபாவையும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி துறையின் தந்தையாக விளக்கிய விஞ்ஞானி விக்ரம் சாராபாயையும் இந்த நேரத்தில் நினைந்து பாராட்ட வேண்டும்.

மிகக் குறைந்த செலவில், தொழில் நுட்பக் கேளாறு எதுவுமின்றி முதல் முயற்சிலேயே வெற்றி பெற்றுக் காட்டிய விஞ்ஞானிகளைப் பாராட்டும் அதே நேரத்தில், இந்திய மாணவர்கள், விஞ்ஞானிகளைப் போற்றவும், விஞ்ஞானிகளாக வளர்ந்து நாட்டிற்கு வளம் சேர்க்க உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகிறது" என அவர் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x