Published : 13 Apr 2019 04:46 PM
Last Updated : 13 Apr 2019 04:46 PM

85 வயதில் முதன்முதலாக வாக்களிக்கும் வாக்காளர்; கொத்தடிமையாக இருந்து மீண்டவர்: ஈபிஎஸ், ஸ்டாலினைத் தெரியாத விநோதம்

திருவண்ணாமலையில் கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட குடும்பம் முதன்முதலில் வாக்களிக்க உள்ளது. அதில் ஒரு முதியவர் 85 வயதில் முதன்முதலாக வாக்களிக்க உள்ளார். அவருக்கு திமுக தலைவர் ஸ்டாலினையே தெரியவில்லை.

திருவண்ணாமலை, வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த இருளர் இன மக்கள் கொத்தடிமைகளாக இருந்த 50 பேரை வருவாய்த்துறையினர் கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மீட்டனர். இதில் திருவண்ணாமலை மாவட்டம் மருதநாடு கிராமத்தைச் சேர்ந்த கன்னியப்பன் (85) என்பவரின் குடும்பமும் ஒன்று.

தன்னுடைய இளம்பருவத்தில் மரம் வெட்ட அழைத்துச் செல்லப்பட்ட கன்னியப்பன் அதன்பின்னர் வெளி உலக தொடர்பற்றுப் போனார். இவரைப் போலவே பலரும் மரம் வெட்ட, நிலக்கரி தயாரிக்கப் பணிக்கப்பட்டனர்.

ஆற்றங்கரையோரம், வெட்டவெளி, சிறிய டெண்டுகள் என தங்க வைக்கப்பட்ட இவர்கள் வெளியில் செல்ல அனுமதிக்கப்படவில்லை. இவர்களுக்குச் சிறிய தொகையை கடனாகக் கொடுத்து அதை அவர்கள் கட்டமுடியாமல் மேலும் மேலும் கடன்பட்டு அடிமையாகவே அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்.

இவ்வாறு வாழ்ந்த கன்னியப்பனுக்கு மனைவி ( சில ஆண்டுகளுக்கு முன் மறைந்தார்), கருப்பாயி (60) என்கிற மகள், பாபு (33), பிரபு (20) என்கிற மகன்கள் என 7 பேர் கொண்ட ஒரு குடும்பம் உள்ளது. கொத்தடிமையாக வாழ்ந்த அனைவரும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் வீரம்பாக்கம் என்கிற கிராமத்தில் நிலக்கரி தயாரிக்கும் பகுதியிலிருந்து மீட்கப்பட்டனர்.

தற்போது திருவண்ணாமலை மாவட்டம் மருதாடு கிராமத்தில் ஒரு ஏரிக்கரையில் பனை ஓலையால் வேயப்பட்ட சின்னஞ்சிறு குடிசையில் இவர்கள் குடும்பம் வசிக்கிறது. கொத்தடிமை மறுவாழ்வுக்கான எவ்வித வசதிகளோ, மறுவாழ்வுக்கான எவ்வித உதவிகளும் இவர்களுக்கு செய்து தரப்படவில்லை.

தற்போது மரம் வெட்டி அதன்மூலம் தினம் கிடைக்கும் 150, 200 ரூபாய் சொற்ப வருமானத்தில் கன்னியப்பன் வாழ்க்கை நகர்கிறது. வெளி உலகத் தொடர்பற்று ஏரியிலேயே தற்போதும் வாழும் இவர்கள் திருவண்ணாமலை தொகுதிக்குக் கீழ் வருகின்றனர். இவர்களிடம் இதுவரை வாக்கு கேட்டு எந்தக் கட்சி வேட்பாளரும் வரவில்லை எனத் தெரிவிக்கின்றனர்.

அரசியல் கட்சிகள் வாக்களிக்கப் பணம் தருவார்களாமே என கேட்கிறார் கன்னியப்பனின் உறவினர் ராஜேந்திரன். கன்னியப்பன் மகன் பிரபு ‘வாக்களிப்பது நமது கடமை ஆனால் வாக்குப்பதிவு எந்திரத்தில் எப்படி வாக்களிப்பது என தெரியாதே’ என தெரிவித்துள்ளார்.

முதல்முறையாக அவர்கள் குடும்பத்தில் 7 வாக்காளர்கள் 19 வயது முதல் 85 வயது வரை உள்ளவர்கள் வாக்களிக்க உள்ளனர். இதில் தனது வாழ்வில் முதன்முறையாக கன்னியப்பன் தனது 85 வயதில் வாக்களிக்க உள்ளார் என்பது அரிதான ஒரு விஷயம்தான்.

கன்னியப்பனிடம் அரசியல் தலைவர்கள் குறித்து கேட்டபோது, அவருக்கு எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதாவைத் தெரிகிறது. ஆனால் தற்போது யார் முதல்வர் என்பது தெரியவில்லை. கருணாநிதியின் மகன்தான் முதல்வர் என்று நினைக்கிறேன் என்று கூறியுள்ளார். ஆனால் மு.க.ஸ்டாலின் யார் எனத் தெரியவில்லை.

திருவண்ணாமலையில் கொத்தடிமையாக மீட்கப்பட்ட கன்னியப்பன் குடும்பத்திற்கு மறுவாழ்வு அளிக்கப்படவில்லை. திருவண்ணாமலை ஆட்சியர் கந்தசாமி ஏழை மக்களுக்கு செய்யும் சேவையால் பலராலும் பாராட்டப்படுபவர், தற்போது மாவட்ட தேர்தல் அதிகாரியான அவர் வாக்களிக்க இந்தக் குடும்பத்தினருக்கு பயிற்சியும், மறுவாழ்வுக்கான உதவியும் செய்யவேண்டும் என அவர்கள் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x