Published : 12 Sep 2014 10:59 AM
Last Updated : 12 Sep 2014 10:59 AM

பள்ளி மாணவர்கள் பைக் ஓட்டக் கூடாது: போக்குவரத்து போலீஸ் இணை ஆணையர் அறிவுரை

பள்ளி மாணவர்கள் பைக் ஓட்டக் கூடாது. அவர்கள் தங்களது துணிச்சலை நல்ல விஷயங்களில் காட்ட வேண்டும் என்று போக்குவரத்து போலீஸ் இணை ஆணையர் தினகரன் அறிவுறுத்தியுள்ளார்.

பள்ளி மாணவ, மாணவி களுக்கான போக்குவரத்து விழிப்புணர்வு முகாம், சென்னை திருவான்மியூரில் உள்ள சங்கரா வித்யாஸ்ரமம் மெட்ரிகுலேஷன் பள்ளியில் வியாழக்கிழமை நடத்தப் பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட போக்குவரத்து போலீஸ் இணை ஆணையர் தினகரன் பேசியதாவது:

போக்குவரத்து போலீஸார் எடுக்கும் நடவடிக்கைகளால் மட்டுமே சாலை விபத்துகளை குறைக்க முடியாது. சாலை விதி களை அனைவரும் பின்பற்ற வேண்டும். சாலை பாதுகாப்பை முதலில் நம்மிடம் இருந்து தொடங்க வேண்டும். தமிழகத்தில் நடக்கும் சாலை விபத்துகளால் ஆண்டு தோறும் சுமார் 16 ஆயிரம் பேர் இறக்கின்றனர். விபத்துகளை தவிர்க்கவும், உயிரிழப்புகளை குறைக்கவும் அனைவரும் ஒத்துழைப்பு தரவேண்டும்.

பள்ளி மாணவர்கள் பைக் ஓட்டக்கூடாது. உங்கள் துணிச்சலை நல்ல விஷயத்துக்கு பயன்படுத்துங்கள். யாரோ ஒருவர் செய்யும் தவறால் விபத்து ஏற்பட்டு அப்பாவிகள் இறக்கின்றனர். சாலை பாதுகாப்பு குறித்து பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். மற்றவர்களுக்கு நீங்கள் முன்னுதாரணமாக இருக்க வேண்டும்.

வெளிநாடுகளில் சாலை விதிகளை மீறுபவர்களுக்கு கடுமை யான தண்டனை தரப்படுகிறது. இந்தியாவில் தண்டனைகளும், அபராதமும் குறைவாகத்தான் இருக்கிறது. இதனால், சில சட்டப் பிரிவுகளில் மாற்றம் செய்ய வேண்டிய தேவை இருக்கிறது. சென்னையில் 2012-ல் சாலை விபத்துகளில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,600. இது கடந்த 2013-ம் ஆண்டில் 1,400 ஆக குறைந்துள்ளது.

வரும் ஆண்டுகளில் இந்த எண்ணிக்கையை குறைக்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தினகரன் பேசினார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 700-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் சாலை பாதுகாப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x