Last Updated : 28 Sep, 2014 11:04 AM

 

Published : 28 Sep 2014 11:04 AM
Last Updated : 28 Sep 2014 11:04 AM

மாநில சுகாதாரத் துறையுடன் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தை இணைக்க திட்டம்?: சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு

தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் வரும் டிசம்பர் 1-ம் தேதி முதல் மாநில சுகாதாரத் துறையுடன் இணைக்கப்படும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க திட்ட இயக்குநர் பதவி கலைக்கப்பட்டு, சங்கத்தின் அனைத்து செயல்பாடுகளும் சுகாதாரத் துறையின் மூலமே நடக்கும் நிலை ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய பாஜக அரசு நிதி சேமிப்புக்காகவும், வேலை பளுவை குறைக்கவும் பல துறைகளை ஒன்றிணைக்கப்போவதாக கூறியி ருந்தது. அதன்படி தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் மத்திய சுகாதாரத் துறையின் தேசிய கிராமப்புற சுகாதாரத் திட்டத்தின் கீழ் சமீபத்தில் இணைக்கப்பட்டது. தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் 1992 ம் ஆண்டு உருவாக்கப்பட்டு, அதற்கென தனியாக செயலர் ஒருவர் நியமிக்கப்பட்டு இருந்தார். தற்போது இச்சங்கம் தனியாக செயல்படாது என்பதால், இந்த பதவி இனி இருக்காது.

தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் கலைக்கப்பட்டுவிட்டதால், அந்த திட்டங்களை மாநில அளவில் நடைமுறைப்படுத்தி வரும் மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கங்களுக்கும் அதே நிலை ஏற்படும் என்று அஞ்சப் படுகிறது. தமிழ்நாட்டில் 1993-ம் ஆண்டில் மாநில எய்ட்ஸ் திட்ட மையம் உருவாக்கப்பட்டது. பின்னர், அது 1994-ம் ஆண்டு தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கமாக உருவாக்கப்பட்டு, திட்ட இயக்குநராக நியமிக்கப்படும் ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் இயங்கி வந்தது. இது சுகாதாரத் துறையுடன் இணைக்கப்பட்டால், இதன் நடவடிக்கைகளுக்கான அனுமதி, நிதி என அனைத்துமே சுகாதாரத் துறையின் மூலம் பெறவேண்டி யிருக்கும்.

இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரி கூறுகையில், “தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தை சுகாதாரத் துறையுடன் இணைப்பதற்கான திட்டம் உள்ளது. ஆனால், இதற்கான அதிகாரப்பூர்வமான உத்தரவு இன்னும் வரவில்லை” என்றார்.

ஆனால், இந்த முடிவு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் நடவடிக் கைகளை தாமதப்படுத்தும் என்று சமூக ஆர்வலர்கள் கருதுகின் றனர். இது குறித்து எய்ட்ஸ் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் திருநங் கைகளுக்கான சவுத் இந்தியா பாசிடிவ் நெட்வொர்க் அமைப்பின் தலைவர் எஸ்.நூரி கூறுகையில், “எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட திருநங் கைகளுக்கு உதவி செய்வது, விழிப்பு ணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவது, தேவையானவர்களுக்கு ஆணுறை வழங்குவது உள்ளிட்ட செயல்களை நேரடியாக திட்ட இயக்குநரின் அனுமதி பெற்று செய்து வந்தோம். இது அரசு துறையோடு இணைக்கப்பட்டால், ஒரு கோப்பு நகரவே பல நாட்களாகும். எய்ட்ஸ் போன்ற உயிர் கொல்லி நோய் குறித்த செயல்பாடுகள் தாமதமாகாமல் இருக்க வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x