

திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாளான நேற்று அதி முக, அமமுக, மக்கள் நீதி மய்யம் கட்சி உட்பட 63 பேர் மனுத் தாக்கல் செய்தனர்.
திருப்பரங்குன்றம் தொகுதிக்கான வேட்பு மனுத் தாக்கல் ஏப்., 22-ல் தொடங்கியது. திமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் சுயேச்சைகள் ஏற்கெனவே மனுத் தாக்கல் செய்தனர்.
வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று அதிமுக வேட்பாளர் எஸ். முனியாண்டி நல்ல நேரம் பார்த்து மனு தாக்கல் செய்தார். முனியாண்டிக்கு மாற்று வேட் பாளராக அக்கட்சியின் ஒன்றியச் செயலர் நிலையூர் முருகன் மனுத் தாக்கல் செய்தார்.
இதைத்தொடர்ந்து அமுமக வேட்பாளர் மகேந்திரன் பிற்பகல் 2.05 மணிக்கு மனுத் தாக்கல் செய்தார். இவருக்கு மாற்றாக அவனியாபுரம் பகுதிச் செயலர் ராமமூர்த்தி மனுத் தாக்கல் செய்தார்.
மக்கள் நீதி மய்ய வேட்பாளர் சக்திவேல் பழனிசாமி தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். இவருக்கு மாற்று வேட்பாளராக அக்கட்சியின் நிர்வாகி மணி மனுத் தாக்கல் செய்தார்.
இத்தொகுதிக்கு மொத்தம் 97 மனுக்கள் வழங்கப்பட்டன. இதில் அதிமுக, திமுக, அமமுக, மக்கள் நீதிமய்யம், நாம் தமிழர் கட்சி உட்பட 63 பேர் மனுத் தாக்கல் செய்துள்ளனர். இதில் 41 பேர் சுட்சைகள், எஞ்சியவர்கள் அரசியல் கட்சியினர் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக அதிமுக, அமமுக வினர் திருப்பரங்குன்றம் பாண்டியன் நகரிலுள்ள விநாயகர் கோயிலில் தரிசனம் செய்துவிட்டு, மேள, தாளம் முழங்க ஊர்வலமாக சென்றனர். மனு தாக்கல் செய்யும் தாலுகா அலுவலகத்திற்கு முன்னதாக 100 தூரத்தில் முன்னதாக கட்சியினர் தடுக்கப்பட்டு, வேட்பாளர், மாற்று வேட்பாளர்களுடன் தலா 5 பேர் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். வேட்பு மனு தாக்கல் கடைசி நாளையொட்டி எஸ்பி மணிவண்ணன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
வேட்பு மனு தாக்கலின்போது, விவி.ராஜன் செல்லப்பா எம்எல்ஏ செய்தியாளர்களிடம் கூறும்போது, "துணை முதல்வர் 2ம் தேதியும், முதல்வர் 6ம் தேதியும் இத்தொகுதியில் பிரச்சாரம் செய்கின்றனர். பல்லாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் எங்களது வேட்பாளரை வெற்றி பெறச்செய்வோம்" என்றார்.
தங்கதமிழ்ச் செல்வன் செய்தியாளர்களிடம் பேசும்போது"ஜெயலலிதா ஆன்மா எங்களிடம் உள்ளது. எங்களது வேட்பாளர் மகேந்திரன் வெற்றி பெறுவார். அதிமுக கோட்டை தற்போது, அமமுக கோட்டையாக மாறியுள்ளது.
மனு தாக்கல் செய்யும்போது, அமைச்சரும் வரலாம் என்றாலும், 9 அமைச்சர்கள் மதுரை வந்து இருந்தும், ஒருவர் கூட இங்கு வரவில்லை. அவர்களுக்கு ஒற்றுமையில்லை என்பது வெட்ட வெளிச்சமாகிவிட்டது. ஒரு உறையில் பல கத்தி இருந்தால் உறையே கிழியும். திமுக- அமமுக இடையேதான் இங்கு போட்டி. இந்த தேர்தலை புது மையானதாக கருதி மக்கள் வாக்களித்துள்ளனர். அது எங்களுக்கே சாதகம்" என்றார்.