Published : 14 Apr 2019 12:00 AM
Last Updated : 14 Apr 2019 12:00 AM

சமூக வலைதளங்களில் தேர்தல் பிரச்சாரம் பெருகிவிட்ட காலத்திலும் கிராமப்புறங்களில் தொடரும் சுவர் விளம்பரங்கள்

சமூக வலைதளங்களில் தேர்தல் பிரச்சாரம் பெருகிவிட்ட காலத்திலும், கிராமப்புறங்களில் சுவர்களில் சின்னங்கள் வரைந்து பிரச்சாரம் செய்யும் வழக்கம் தற்போதும் பின்பற்றப்படுகிறது.

தேர்தலுக்கு ஆறு மாதங்களுக்கு முன்னரே சுவர்கள் வெள்ளையடிக்கப்பட்டு, பளிச்சிடும் வகையில் கட்சிகளின் சின்னங்கள் வரையப்படும். இவை, தேர்தல் வருவதை முன்கூட்டியே அறிவிக்கும் ஓவியத் தோரணங்களாக கிராமப்புறங்களில் களைகட்டும். கடந்த காலங்களில் சுவர்களை ஆக்கிரமிக்க கட்சிகளிடையே நடக்கும் போட்டியில் அடிதடி, ரகளை, கைகலப்பு, கொலைகள்கூட நிகழ்ந்துள்ளன. அந்த அளவுக்கு, தமிழக அரசியல் வரலாற்றில் தேர்தல் பிரச்சாரத்தில் சுவர் விளம்பரங்கள் முக்கியப் பங்கு வகித்தன.

காலப்போக்கில் நவீன மாற்றங்கள் ஏற்பட்டதாலும், தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாடு களாலும் சுவர் விளம்பரங்கள் வரைவது மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிப் பகுதியில் வெகுவாக குறைந்துவிட்டது. அதேசமயம், கிராமப்புறங்களிலுள்ள ஊராட்சி களில், தற்போதும் வாக்கு சேகரிக்கும் களமாக சுவர் விளம்பரங்கள் மாறியுள்ளதை மறுக்க முடியாது.

சின்னமே கவுரவம்

இதுதொடர்பாக ஊத்துக்குளி வெள்ளியம்பாளையத்தைச் சேர்ந்த ஓவியர் ரமேஷ் கூறும்போது, ‘20 ஆண்டுகளாக வரைந்து கொண்டிருக்கிறேன். கடந்த காலங்களில் இருந்த வரவேற்பு தற்போது இல்லை. கட்சிகளிடையே சுவர் விளம்பரம் வரையும் மோகம் குறைந்துள்ளது. கிராமப்புறங்களில் வீட்டு உரிமையாளரின் அனுமதி பெற்று வரைய வேண்டும். சில வீட்டு உரிமையாளர்கள் குறிப்பிட்ட அளவு வரையுமாறு கூறுவார்கள்.

அதேசமயம், சில வீட்டின் உரிமையாளர்கள், தங்களுக்கு பிடித்த கட்சியாக இருந்தால் தாராளமாக அனுமதிப்பார்கள். ஊத்துக்குளி, குன்னத்தூர் பகுதிகளில் வரைந்து வருகிறேன். ஏ.பெரியபாளையம், பெரிய பாளையம், காவுத்தம் பாளையம், கருமஞ்சறை, பல்லவராயன் பாளையம், பாப்பம் பாளையம் ஆகிய கிராமங்களுக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் கடந்த ஒரு வாரமாக வரைந்துள்ளேன்.

இப்போதும், கிராமங்களில் வரையப்பட்டுள்ள கட்சி சின்னங்களுக்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்புள்ளது. தேர்தலின்போது ஒரு கிராமத்தில் அதிக சின்னங்கள் வரையப்பட்டிருந்தால், அந்த கட்சி அங்கு வலுவாக உள்ளதாக கிராம மக்களால் நம்பப்பட்ட காலங்களும் உண்டு. கண்களில் பார்க்கும்போது, இயல்பாகவே மனதில் ஒரு அபிப்ராயத்தை ஏற்படுத்தும் வல்லமை சின்னங்களுக்கு உண்டு' என்றார்.

சமூக வலைதள யுகத்திலும்...

கிராம மக்கள் கூறும்போது, ‘இன்றைக்கு தொலைக்காட்சியைக் கடந்து முகநூல், கட்செவி அஞ்சல் (வாட்ஸ்- அப்), ட்விட்டர் என இணையத்தின் பயன்பாடு அதிகரித்துவிட்ட நிலையிலும், தேர்தல் காலங்களில் கிராமப்புறங்களில் சுவர் விளம்பரங்கள் களைகட்டும். தற்போது குறைந்திருந்தாலும், முற்றிலும் இல்லை என மறுக்க முடியாது' என்றனர்.

சுவர் விளம்பரங்கள் வரையும் பணியில் ஈடுபட்டிருந்த சிலர் கூறும்போது, ‘கடந்த காலங்களில் ஒரு வட்டத்துக்கு 1000-க்கும் மேற்பட்ட சுவர் விளம்பரங்கள் வரைவோம். ஆனால், இப்போது 250 முதல் 400 விளம்பரங்கள் வரை வரைகிறோம். ஒரு சின்னம் வரைந்தால் ரூ.25 கூலி கிடைக்கும். மொத்தமாக வரைந்தால் மட்டுமே, போதிய வருவாய் கிடைக்கும்.

அதிலும் சிலர் கட்சிக்காரர்களே வரைபவர்களாக இருந்தால், எங்களது வாய்ப்பும் அவர்களுக்கு சென்றுவிடும். தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளால், இந்த வழக்கம் மெல்ல, மெல்ல குறைந்து கொண்டிருப்பது உண்மைதான்' என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x