Last Updated : 11 Apr, 2019 12:00 AM

 

Published : 11 Apr 2019 12:00 AM
Last Updated : 11 Apr 2019 12:00 AM

சிதம்பரம் மக்களவைத் தொகுதி யாருக்கு?- அதிமுக - விடுதலைச்சிறுத்தைகள் இடையே கடும் போட்டி

சிதம்பரம் மக்களவைத் ( தனி) தொகுதியில் அதிமுக வேட்பாளர் சந்திரசேகருக்கும், திமுக கூட்டணி வேட்பாளர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

கடலூர் மாவட்டத்துக்கு உட்பட்ட சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில் ஆகிய சட்ட மன்ற தொகுதிகள், அரியலூர் மாவட்டத்துக்கு உட்பட்ட அரியலூர், ஜெயங்கொண்டம், பெரம்பலூர் மாவட்டத்துக்கு உட்பட்ட குன்னம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது இந்த சிதம்பரம் தொகுதி.

விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் இந்தத் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடுவதால், அரசியல் நோக்கர்கள் சிதம்பரம் தொகுதியை உற்று கவனித்து வருகின்றனர்.

இந்தத் தொகுதியில் அதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, அமமுக உள்ளிட்ட 13 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஆனாலும் அதிமுக, விடுதலைச்சிறுத்தைகள் வேட்பாளர்களுக்கு இடையில் தான் போட்டியே.

சிதம்பரம் தொகுதியில் 1999ம் ஆண்டு முதல் 4 முறை போட்டியிட்ட விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் 2009ம் ஆண்டு மட்டுமே வெற்றி பெற்றார். இவர் எம்பியாக இருந்த காலகட்டத்தில் இலங்கைத் தமிழர் பிரச்சினை, காவிரி விவகாரம் போன்றவற்றுக்காக மக்களவையில் குரல் கொடுத்தவர். தற்போது இவர் திமுக கூட்டணியில் இத்தொகுதியில் 5 வது முறையாக போட்டியிடுகிறார்.

கடந்த 2016ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் காட்டுமன்னார்கோவிலில் போட்டியிட்ட இவர், வெறும் 87 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் முருகுமாறனிடம் தோல்வியுற்றார். இதே தேர்தலில் திருமாவளவன் என்ற பெயரில் போட்டியிட்ட சுயேட்சை ஆயிரக்கணக்கான வாக்குகளைப் பெற்ற அதிசயமும் நடந்தது.

விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்காக கடலூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எம்ஆர்கே.பன்னீர் செல்வம், அரியலூர் மாவட்ட திமுக செயலாளர் எஸ்.எஸ் சிவசங்கர் மற்றும் கூட்டணிக் கட்சியினர் களத்தில் இறங்கி தீவிரமாக பணியாற்றி வருவது அவருக்கு பலமாக உள்ளது. 'தங்கள் சமூகத்துக்காக குரல் கொடுக்கக் கூடிய தலைவர் திருமாவளவன்' என்ற எண்ணம் தாழ்த்தப்பட்ட மக்களிடம் இருப்பதால் அது அவருக்கு பெரும் பலமாக உள்ளது.

அதிமுக வேட்பாளர் சந்திரசேகர் களத்துக்கு புதியவர் என்றாலும் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி ஆகிய தொகுதிகளில் அறிமுகம் இல்லாவிட்டாலும் அதிமுக, பாமக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் பலம் உள்ளது. வன்னியர்களின் வாக்கு வங்கி இவருக்கு பலத்தை சேர்க்கும்.

போட்டியிடும் 13 வேட்பாளர்களில் இவரைத் தவிர மற்ற வேட்பாளர்களுக்கு அறிமுகம் இல்லாத சின்னம் ஒதுக்கப்பட்டிருப்பது இவருக்கு மேலும் வலு சேர்க்கும்.

இவருக்காக கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் அருண்மொழிதேவன், சிதம்பரம் எம்எல்ஏ பாண்டியன், காட்டுமன்னார்கோவில் எம்எல்ஏவும், அதிமுக அமைப்பு செயலாளருமான முருகுமாறன், அரியலூர் தொகுதி எம்எல்ஏவும் அரசு கொறடாவுமான தாமரை ராஜேந்திரன், ஜெயங்கொண்டம் எம்எல்ஏ ராமஜெயலிங்கம், குன்னம் தொகுதி எம்எல்ஏ ராமச்சந்திரன், பாமக வைத்தி மற்றும் கூட்டணிக் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இரு வேட்பாளர்களுக்கும் முக்கிய தலைவர்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி ஆகியவை வாக்குகளை ஓரளவு பிரிந்தாலும் அதிமுக வேட்பாளர் சந்திரசேகருக்கும், விடுதலைச்சிறுத்தைகள் வேட்பாளர் திருமாவளவனுக்கும் அது பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தாது.

இந்த தொகுதியை பொறுத்தவரை அரசியல் பலத்தைவிட சாதிய பலமே மேலோங்கி நிற்கிறது.

தற்போது உள்ள நிலவரப்படி திருமாவளவன், சந்திரசேகர் இருவரும் சம பலத்துடன் உள்ளனர். வாக்காளர்கள் எடுப்பதே இறுதி முடிவாக இருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x