Published : 14 Apr 2019 10:32 AM
Last Updated : 14 Apr 2019 10:32 AM

தமிழகத்தின் வேலைவாய்ப்புகள் அனைத்தும் தமிழகத்தினருக்கே கிடைக்க வகை செய்வோம்: ராமதாஸ்

தமிழகத்தின் வேலைவாய்ப்புகள் அனைத்தும் தமிழகத்தினருக்கே கிடைக்க வகை செய்வோம் என, பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ராமதாஸ் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலை, 'மாநிலங்களின் உரிமைகளே... மத்திய அரசின் பெருமை' என்ற முழக்கத்துடன் பாமக எதிர்கொள்கிறது. கடந்த 50 ஆண்டுகளில் தாரை வார்க்கப்பட்ட தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுத்தால் மட்டும் தான் தமிழ்நாட்டு மக்கள் கண்ணியமாகவும், கம்பீரமாகவும் வாழ முடியும். தமிழ்நாட்டு மக்களுக்கு அந்த கவுரவத்தை மீட்டுக் கொடுப்பது பாமகவின் நோக்கமாகும்.

காவிரி உரிமை, கல்வி உரிமை, கச்சத்தீவு உரிமை உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து உரிமைகளும் திமுக ஆட்சியில் தான் தாரை வார்க்கப்பட்டன. இவை அனைத்தும் மீட்கப்பட வேண்டியது அவசரமும், அவசியமும் ஆகும். இவற்றைப் போலவே தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உரிமையை வென்றெடுக்க வேண்டியதும் மிகவும் அவசியமாகும்.

மத்திய, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வரும் நிலையில், இருக்கும் வேலைவாய்ப்புகளில் தமிழகத்திற்குரிய பங்கை முழுமையாக பெற்றால் மட்டும் தான் தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு சிறப்பான எதிர்காலத்தை உருவாக்கித் தர முடியும் என்று பாமக உறுதியாக நம்புகிறது.

இந்தியாவிலுள்ள எந்த பொதுத்துறை நிறுவனமும் மத்திய அரசின் முயற்சியில் மட்டும் உருவாகி விடவில்லை. பொதுத்துறை நிறுவனங்களுக்கான நிலங்களை மாநில அரசுகள் தான் வழங்குகின்றன. அதுமட்டுமின்றி, பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்குவதற்கு அனைத்து வகைகளிலும் மாநில அரசுகள் உதவியுள்ளன. அதனால், பொதுத்துறை நிறுவனங்களின் வேலைவாய்ப்புகளை, அவை அமைந்துள்ள மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு வழங்குவது தான் முறையானதாக இருக்கும்.

அதனால் தான், "ஒரு மாநிலத்தில் உள்ள மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் அதிகாரிகள் நிலை பணியிடங்களைத் தவிர்த்து, தொழிலாளர் நிலை பணியிடங்கள் அனைத்தும் அந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களைக் கொண்டே நிரப்பப்படும்" என்று மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையில் பாமக வாக்குறுதி அளித்திருக்கிறது.

அதேபோல், மத்திய அரசுப் பணிகளிலும் மாநிலங்களுக்கு ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டியது அவசியமாகும். "மாநிலங்களில் உள்ள மத்திய அரசு நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களில் இடமாற்றம் செய்யப்படாத இடைநிலை பணியிடங்களில் 50 விழுக்காடும், கடைநிலை பணியிடங்கள் முழுமையாகவும் மாநில ஒதுக்கீடாக அறிவிக்கப்படும். இப்பணியிடங்களில் சம்பந்தப்பட்ட மாநிலத்தவர்கள் மட்டுமே நியமிக்கப்பட வேண்டும்" என்பதும் பாமகவின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாகும். மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு மத்தியில் தொடரவுள்ள ஆட்சியில் இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதை பாமக உறுதி செய்யும்.

அரசுப் பணிகளும், பொதுத்துறை நிறுவனப் பணிகளும் மிகக் குறைந்த எண்ணிக்கையில் தான் உள்ளன. படித்த பட்டதாரி இளைஞர்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்புகளை வழங்குவது அமைப்பு சார்ந்த தனியார் நிறுவனங்கள் தான். எனவே தான், மாநிலங்களில் உள்ள தனியார் நிறுவனங்களில் 80% பணியிடங்கள் அந்தந்த மாநில இளைஞர்களைக் கொண்டு நிரப்பப்பட வேண்டும் என்பதை கட்டாயமாக்கி, புதிய சட்டம் இயற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாமக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, தனியார் நிறுவனங்களில் சமூக நீதியை நிலைநிறுத்தும் வகையில் சமூக அடிப்படையிலான இட ஒதுக்கீட்டையும் நடைமுறைப்படுத்த பாமக நடவடிக்கை எடுக்குமென உறுதியளிக்கிறேன்.

வேலைவாய்ப்புகளைப் போலவே ஐஐடி, ஐஐஎம், தேசிய தொழில்நுட்ப நிறுவனங்கள், ஜிப்மர் மற்றும் எய்ம்ஸ் போன்ற மருத்துவ உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட நிறுவனங்களில், பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் இட ஒதுக்கீடு உரிமை பெறுவதற்கு உள்ள தடைகளை நீக்க பாடுபடுவோம் என்றும் வாக்குறுதி அளித்திருக்கிறோம்.

தமிழக மக்கள் தலைநிமிர்ந்து, கண்ணியமாக வாழ மத்தியில் தமிழகத்தின் உரிமைக்குரலை மதிக்கும் ஆட்சி அமைய வேண்டும். அதனால், தமிழகத்தில் மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல்களில் அதிமுக தலைமையில் பாமக, பாஜக, தேமுதிக, தமாகா, புதிய நீதிக்கட்சி, புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் அங்கம் வகிக்கும் கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்" என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x