Last Updated : 16 Apr, 2019 09:01 PM

 

Published : 16 Apr 2019 09:01 PM
Last Updated : 16 Apr 2019 09:01 PM

சேலத்தில் கொளுத்தும் வெயிலில் வீதி வீதியாக நடந்து சென்று வாக்கு சேகரித்த முதல்வர் பழனிசாமி

சேலம் மாநகரில் கொளுத்தும் வெயிலில் வீதி வீதியாக ஒரு கி.மீ. நடந்து சென்ற தமிழக முதல்வர்  எடப்பாடி பழனிசாமி, பொதுமக்களிடம் நோட்டீஸ் விநியோகித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

சேலம் மக்களவைத் தொகுதி தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கேஆர்எஸ் சரவணனை ஆதரித்து நேற்று பகல் 10.30 மணிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீதி வீதியாக நடந்து சென்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

சேலம் பட்டைக்கோயில் பகுதியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி காரில் இருந்து இறங்கி கடை வியாபாரிகளிடம் பிரச்சார துண்டுப் பிரசுரங்களை அளித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.  சின்னக்கடை வீதி, தேர் வீதி, பெரியக்கடை வீதி  வழியாக சேலம் டவுன் கன்னிகா பரமேஸ்வரி கோயில் வரை  ஒரு கி.மீ தூரம் நடைபயணமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்று, வாக்கு சேகரித்தார்.

வீதிகளின் இருபுறங்களிலும் உள்ள கடைகளுக்கு நேரடியாகச் சென்று வியாபாரிகளிடம் பேசி வாக்கு சேகரித்தார்.  கடை கடையாக ஏறி இறங்கி துண்டுப் பிரசுரம் கொடுத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியை ஆர்வமுடன் பொதுமக்கள் வரவேற்றனர். கடைகளில் வியாபாரத்துக்காக  வந்திருந்த பொதுமக்களைச் சந்தித்து  முதல்வர் எடப்பாடி பழனிசாமி உரையாடினார். பொதுமக்கள் பலரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர். தங்களது குழந்தைகளை அவரது கையில் கொடுத்து, ஃபோட்டோ எடுத்து மகிழ்ந்தனர்.

சின்னக்கடை வீதி ராஜாஜி காதிபவன் எதிரே உள்ள டீக்கடையில்  மக்களோடு சேர்ந்து  டீ சாப்பிட்டார்.  கடை வீதியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சாதாரண மக்களைப் போல  நடந்து சென்று பிரச்சாரம் செய்தார்.

சின்னக்கடை வீதி வேணுகோபால சுவாமி கோயிலில் அர்ச்சனை பிரசாதத்தை ஏற்றுக் கொண்டார். பழக்கடைகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு, பெண் வியாபாரி ஒரு சீ ப்பு வாழைப்பழத்தை வழங்கி மகிழ்ந்தார். அதேபோல, பூ மார்க்கெட் சார்பில் ஆள் உயர மாலையை முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அணிவித்தனர். கொளுத்தும் வெயிலில் வீதி வீதியாக ஒரு கி.மீ. தொலைவு நடந்து சென்று, கடை கடையாக துண்டுப் பிரசுரம் விநியோகித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி,  டவுன் காவல் நிலையம் அருகில்  உள்ள கன்னிகா பரமேஸ்வரி கோயில் அருகில் தனது பிரச்சாரத்தை நிறைவு செய்து, காரில் ஏறி புறப்பட்டுச் சென்றார்.

முதல்வருடன் முன்னாள் அமைச்சர் சி.பொன்னையன், அதிமுக மாநகர் மாவட்டச் செயலாளரும் எம்எல்ஏவுமான  ஜி.வெங்கடாசலம், சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம், சேலம் தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.பி.சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x