Published : 03 Apr 2019 02:38 PM
Last Updated : 03 Apr 2019 02:38 PM

குஜராத் கலவரத்தில் சிறையிலிருந்த அமித் ஷாவை தலைவராகப் பெற்ற பாஜகவினர் வெட்கப்பட வேண்டும்: கே.எஸ்.அழகிரி தாக்கு

குஜராத் கலவரத்தில் சிறையில் அடைக்கப்பட்ட அமித்ஷாவை தலைவராகப் பெற்ற பாஜகவினர் வெட்கப்பட வேண்டும் என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக கே.எஸ். அழகிரி இன்று (புதன்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாஜக தலைவர் அமித் ஷா தூத்துக்குடியில் உரையாற்றும் போது நாடாளுமன்றத் தேர்தலில் 30 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம் என்று பேசினார். தமிழகத்தைப் பொறுத்தவரை வெற்றி வாய்ப்பு குறித்து கனவு காண்பதற்கு அவருக்கு உரிமை இருக்கிறது. ஆனால், அதேநேரத்தில் உண்மைக்குப் புறம்பான ஆதாரமற்ற கருத்துகளை, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு எதிராகக் கூறியிருப்பதை வன்மையாக கண்டிக்க விரும்புகிறேன்.

இக்கூட்டணியில் போட்டியிடுகிற சிலர் ஊழல்வாதிகள் என்று கூறியிருக்கிறார். இவரது வாதத்தின்படி யார் ஊழல்வாதிகள்? 2ஜி ஒதுக்கீட்டில் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் மத்திய அரசுக்கு இழப்பீடு ஏற்பட்டதாக கடுமையான பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பிரச்சாரத்தை அடிப்படையாக வைத்து பாஜக கூட்டணியினர் தேர்தலில் அரசியல் ஆதாயம் அடைந்ததையும் எவரும் மறந்திட இயலாது.

ஆனால், 2ஜி வழக்கை விசாரித்த மத்திய புலனாய்வுத்துறையின் சிறப்பு நீதிமன்றம் குற்றத்தை நிரூபிக்க ஆதாரங்களைக் கேட்டு நீதிபதி ஓ.பி. சைனி மாதக்கணக்கில் காத்திருந்ததாகவும், எந்த ஆதாரமும் இல்லாத காரணத்தால் குற்றம் சாட்டப்பட்ட கனிமொழி, ஆ. ராசா போன்றவர்களை நிரபராதிகள் என அறிவித்து விடுவிப்பதாக தீர்ப்பு வழங்கினார்.

அதேபோல, சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தை பற்றியும் அமித்ஷா அவதூறான கருத்தைக் கூறினார்.

அரசியல் ரீதியாக நரேந்திர மோடி அரசை கடுமையாக விமர்சனக் கணைகளை ஏவுகணைகளாக ஏவி வருகிற முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் கூறும் குற்றச்சாட்டுகளை மறுக்க முடியாத பாஜகவினர் அவதூறு சேற்றை அள்ளி வீசி வருகிறார்கள். இத்தகைய துல்லியத் தாக்குதலைத் தாங்க முடியாத பாஜகவினர் இதற்காக கார்த்தி சிதம்பரம் மீது வழக்கு தொடுத்திருக்கிறார்கள். கார்த்தியைக் கைது செய்ய மத்திய அரசு துடித்தது.

ஆனால், அவரைக் கைது செய்வதாக இருந்தால் ஆதாரங்களை வழங்குங்கள் என்று நீதிபதி பலமுறை கூறியும் மத்திய அரசின் வழக்கறிஞரால் ஆதாரத்தை வழங்க முடியவில்லை. அதனால் தான் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்வதற்கு நீதிமன்றம் தடை விதித்திருக்கிறது.

எனவே, கார்த்தி சிதம்பரம் மீது இருப்பது மத்திய பாஜக அரசு தொடுத்திருக்கும் குற்றச்சாட்டே தவிர, வழக்கல்ல. இந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையில் எந்த நீதிமன்றத்திலும் விசாரணையும் நடைபெறவில்லை.

இந்நிலையில் அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறுவதற்கு அமித் ஷாவுக்கு என்ன தகுதியிருக்கிறது? உள்துறை அமைச்சராக அமித் ஷா இருந்த போது குஜராத் கலவரத்தில் சம்பந்தப்பட்டதால் சிறப்பு புலனாய்வுக்குழு அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தது. அதற்குப் பிறகு சில மாதங்கள் கழித்து வழங்கப்பட்ட நிபந்தனை ஜாமீனில் குஜராத்திற்குள் நுழையக் கூடாது, மும்பையில் தங்கி நாள்தோறும் காவல் நிலையத்தில் கையொப்பமிட வேண்டும் என்ற அடிப்படையில் ஆணை பிறப்பிக்கப்பட்டது.

இத்தகைய குற்றப் பின்னணி கொண்ட ஒருவரை தேசியத் தலைவராகப் பெற்றுக் கொண்டதற்காக பாஜகவினர் வெட்கப்பட வேண்டும். அதற்கு மாறாக அப்பழுக்கற்ற காங்கிரஸ் - திமுக கட்சியினர் மீது அவதூறு குற்றச்சாட்டுகள் கூறுவதை இனியாவது நிறுத்திக் கொள்ள வேண்டும்.

பண மதிப்பிழப்பு அமல்படுத்தப்பட்ட போது அமித் ஷா தலைமையில் குஜராத் மாநிலத்தில் இயங்கிய கூட்டுறவு வங்கிகளில் ரூபாய் 780 கோடி டெபாசிட் செய்யப்பட்டது. இதன்மூலம் கருப்புப் பணம் வெள்ளையாக்கப்பட்டது. இத்தகைய ஊழலைச் செய்த அமித் ஷா காங்கிரஸ் கட்சியினர் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறலாமா?

மேலும் கூட்டத்தில் பேசும் போது பாகிஸ்தான் தாக்குதலுக்குப் பழிவாங்க வேண்டுமா? வேண்டாமா? என்று கூட்டத்தைப் பார்த்து அமித் ஷா கேட்டுள்ளார். இந்தியாவை ஆளுகிற கட்சியின் தலைவராக இருக்கிற அமித் ஷா இப்படித் தரம் தாழ்ந்து பேசுவது மிகுந்த கண்டனத்திற்குரியது. இவர் பாகிஸ்தானைப் பழிவாங்க வேண்டுமென்று நினைக்கிறாரா? மாறாக, சிறுபான்மை மக்களைப் பழிவாங்க வேண்டுமென்பதற்காக பாகிஸ்தான் பெயரைக் குறிப்பிடுகிறாரா?

மக்களை மதரீதியாகப் பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் தேடுகிற முயற்சி தமிழகத்தில் எடுபடாது என்பதை அமித் ஷாக்கள் உணர வேண்டும். ஏனெனில் இது பெரியார், காமராஜர் போன்ற தலைவர்களால் பண்படுத்தப்பட்டதால் வகுப்புவாத சக்திகளால் எக்காலத்திலும் இங்கு காலூன்ற முடியாது என்பதை உணர வேண்டும்.

எனவே, இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் பாஜகவோடு கூட்டணி சேர எந்தக் கட்சியும் முன்வராத நிலை இருந்தது. இந்நிலையில் அதிகாரத்தைப் பயன்படுத்தி சாம, பேத, தான, தண்டங்களை கடைப்பிடித்து அதிமுக, பாஜக கூட்டணியில் சேர்க்கப்பட்டது. இப்படி கூட்டணி அமைத்தவர்கள் கொள்கை அடிப்படையில் கூட்டணி அமைத்த காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியைப் பற்றி பேச பாஜகவினருக்கு என்ன உரிமை இருக்கிறது?" என, கே.எஸ். அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x