Last Updated : 08 Apr, 2019 11:40 AM

 

Published : 08 Apr 2019 11:40 AM
Last Updated : 08 Apr 2019 11:40 AM

அறந்தாங்கியில் பெரியார் சிலை உடைப்பு: குற்றவாளிகளை கைது செய்யக்கோரி காத்திருப்பு போராட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் பெரியார் சிலை உடைக்கப்பட்ட நிலையில், குற்றவாளியை கைது செய்யக்கோரி சாலை மறியல் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு மருத்துவமனை அருகே அழியாநிலை பிரிவு சாலை பகுதியில் 1998-ல் பெரியாருக்கு முழு உருவ சிமெண்ட் சிலை அமைக்கப்பட்டது. அப்போது இந்த சிலையை திராவிடர் கழகத்தின் தலைவர் வீரமணி திறந்து வைத்துள்ளார். இந்நிலையில் இந்த சிலையின் தலையை மர்ம நபர்கள் நேற்று இரவு உடைத்து சேதப்படுத்தி உள்ளனர்.

சிலையை சேதப்படுத்தியவர்களை உடனே கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இன்று (திங்கள்கிழமை) திராவிட கழகத்தின் மண்டலத் தலைவர் ராவணன் தலைமையில்  சிலை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

குற்றவாளிகளை விரைவில் கைது செய்து நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.செல்வராஜ் உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

அதுமட்டுமல்லாமல், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியை சேர்ந்த ஏராளமானோர் சிலை முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், சிலையை மூடுவதற்கு போலீசார் ஏற்பாடு செய்தனர். இதைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டோர் கோஷங்கள் எழுப்பியதால் போலீஸார் அத்தகைய முயற்சியைக் கைவிட்டனர். 

தொடர்ந்து இப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருவதால் ஏராளமான போலீசார் சிலையை சுற்றிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், மாவட்டத்தின் பிற பகுதிகளில் உள்ள பெரியார் சிலையையும் கண்காணிக்குமாறு போலீஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து ஆலங்குடி சட்டப்பேரவை உறுப்பினர் மெய்யநாதன் கூடியது:

"திரிபுரா மாநிலத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிடம் இருந்து பாஜக ஆட்சியைக் கைப்பற்றியது. அதன்பிறகு அம்மாநிலத்தில் பிரதான இடத்தில் இருந்த லெனின் சிலை அகற்றப்பட்டது. இந்த சம்பவம் நாடு முழுக்க மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தனது சமூக வலைதளத்தில் 'தமிழகத்தில் உள்ள பெரியார் சிலையை உடைக்கப்படும்' என கருத்து பதிவிட்டு இருந்தார். அதைத் தொடர்ந்து, வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் இருந்த பெரியார் சிலை உடைக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே புதுக்கோட்டைவிடுதியில் இருந்த பெரியார் சிலை கடந்த ஆண்டு இதே மாதத்தில் உடைத்து சேதப்படுத்தப்பட்டது.

இதேபோன்று தொடர்ச்சியாக பல்வேறு இடங்களில் பெரியார் சிலைக்கு அவமரியாதை செய்யப்பட்டு வருகிறது. தற்போதும் ஆலங்குடி தொகுதியை உள்ளடக்கியுள்ள சிவகங்கை மக்களவைத் தொகுதியில் பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா போட்டியிடுகிறார்.

தேர்தல் பிரச்சாரத்தில் அவர் இவ்வழியே அடிக்கடி சென்று வருவதால் அவரது ஆதரவாளர்களால் இத்தகைய சிலை உடைக்கப்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது. இதனால் ஹெச்.ராஜாவை போலீஸார் விசாரணை மேற்கொள்ள வேண்டும். இந்த சிலையை சேதப்படுத்தியவர்களை கைது செய்ய வேண்டும். கைது செய்யும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை" என்றார்.

சந்தேகத்தின் பேரில் சிலரை அறந்தாங்கி போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x