

சென்னை: நிலுவையில் உள்ள காசோலை மோசடி வழக்குகளுக்குத் தீர்வுகாணும் வகையில், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி வழிகாட்டுதலின்படி உயர் நீதிமன்ற மூத்த நீதிபதியும், மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழு செயல் தலைவருமான நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் அறிவுறுத்தலின்படி மாநிலம் முழுவதும் சிறப்பு லோக் அதாலத் நேற்று நடத்தப்பட்டது.
அதன்படி சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஆர். ராஜேஷ் விவேகானந்தன், எஸ்.கார்த்திகேயன் ஆகியோர் தலைமையிலும், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் சி.திருமகள், பி. முருகேசன் ஆகியோரது தலைமையிலும் சிறப்பு அமர்வுகள் ஏற்படுத்தப்பட்டு காசோலை மோசடி வழக்குகள் விசாரிக்கப்பட்டன. இதேபோல தமிழகம் முழுவதும் உள்ள கீழமை நீதிமன்றங்களிலும் 223 அமர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வழக்குகள் விசாரிக்கப்பட்டன.
இந்த லோக் அதாலத்தில் 1,606 நிலுவை வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.83 கோடியே 2 லட்சத்து 87,581 இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது. சிறப்பு லோக் அதாலத் ஏற்பாடுகளை மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழு உறுப்பினர் செயலரும், மாவட்ட நீதிபதியுமான எஸ். பாலகிருஷ்ணன் தலைமையில் நீதித் துறை அதிகாரிகள் செய்திருந்தனர்.