Last Updated : 11 Apr, 2019 12:00 AM

 

Published : 11 Apr 2019 12:00 AM
Last Updated : 11 Apr 2019 12:00 AM

‘அமைதியாக’ பிரச்சாரம் செய்யும் வேட்பாளர்கள்- இடைத்தேர்தல் பரபரப்பு இல்லாத பரமக்குடி தொகுதி

மக்களவைத் தேர்தல் பணி போன்றே பரமக்குடி சட்டப்பேரவை தொகுதியில் பணி நடைபெறுவதால் இடைத்தேர்தல் பரபரப்பு இல்லாத நிலை உள்ளது. பரமக்குடி(தனி) சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் எஸ்.சதன்பிரபாகர்(அதிமுக), எஸ்.சம்பத்குமார்(திமுக), ஏ.சங்கர்(மக்கள் நீதி மய்யம்), கே.ஹேமலதா(நாம் தமிழர்), டாக்டர் எஸ்.முத்தையா(அமமுக) மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் உட்பட 13 பேர் போட்டியிடுகின்றனர்.

இத்தொகுதியில் அதிமுக, திமுக, மக்கள் நீதிமய்யம், அமமுக, நாம் தமிழர் என 5 முனைப்போட்டி நிலவுகிறது. மக்களவைத் தேர்தலை விட இடைத்தேர்தல் தான் அதிமுகவுக்கு சவாலாக உள்ளது. 18 தொகுதிகளில் 8 தொகுதிகளில் அதிமுக வெற்றிபெற்றால்தான் ஆட்சியை தக்கவைக்க முடியும். அதே நேரம், அதிமுக வெற்றி பெறக் கூடாது என திமுக நினைக்கிறது. அதற்காக அதிமுகவினருக்கு சமமாக பணத்தைச் செலவு செய்யும் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. ஆளுங்கட்சியான அதிமுகவில் அமைச் சர்கள் பலர் முகாமிட்டு தேர்தல் பணிகளை கவனிப்பர் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், உள்ளூர் அமைச்சரும் மக்க ளவை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுடன் தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகிறார். அதிமுக வேட்பாளருடன் மாவட்டச் செயலாளர் எம்.ஏ.முனியசாமி மட்டுமே பணியாற்றி வருகிறார். அதிமுக தொகுதி தேர்தல் பொறுப்பாளரான ஓ.எஸ்.மணியன்கூட தேர்தல் அறிவிக்கப்பட்டபின் தொகுதிப் பக்கம் வரவில்லை. மேலும் திமுகவிலும் முக்கிய நிர்வாகிகளைக் காண முடியவில்லை. பொதுவாக இடைத்தேர்தல் தொகுதிகளில் வாக்காளர்களுக்கும், கட்சியினருக்கும் சிறப்பான ‘கவனிப்பு’ இருக்கும். ஆனால், பரமக்குடியை பொறுத்தவரை இதுபோன்ற எதுவும் தற் போதுவரை நடக்காததால் கட்சியினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.

அதிமுக, திமுக, அமமுக வேட்பாளர்கள் தினமும் அமைதியாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிரச்சாரத்தின்போதும் அதிக பணம் செலவிடப்படவில்லை. வழக்கமாக மக்களவைத் தொகுதி வேட்பாளர்கள் என்ன செலவு செய் கின்றனரோ, அதேபோன்றுதான் இடைத் தேர்தலில் போட்டியிடும் முக்கியக் கட்சி வேட்பாளர்களும் செலவு செய்து வருகின் றனர். மேலும் வேட்பாளர்கள் கிராமப்புற பகுதிகளிலேயே பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பரமக்குடி நகர் பகுதிக்குள் இன்னும் பிரச்சாரம் செய்யவில்லை. அதனால் பிரச்சாரம் களைகட்டவில்லை என அரசியல் கட்சியினர் கூறுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x