Published : 28 Sep 2014 01:35 PM
Last Updated : 28 Sep 2014 01:35 PM

ஜெயலலிதா சந்தித்த முக்கிய வழக்குகள்

கடந்த 1996-ல் திமுக ஆட்சிக்கு வந்ததும், முந்தைய அதிமுக ஆட்சியில் பல துறைகளில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி ஜெயலலிதா மற்றும் முன்னாள் அமைச்சர்கள் பலர் மீது வழக்குகளை தொடர்ந்தது. ஜெயலலிதா எதிர்கொண்ட சில முக்கியமான வழக்குகள் பற்றிய விவரம்:

டான்சி வழக்கு

அரசுக்கு சொந்தமான டான்சி நிறுவனத்தின் நிலத்தை தான் பங்குதாரராக உள்ள ஜெயா பப்ளிகேஷன்ஸ் மற்றும் சசி எண்டர்பிரைசஸ் ஆகிய நிறுவனங்களுக்கு குறைந்த விலைக்கு விற்பனை செய்ததாக ஜெயலலிதா, சசிகலா மீது சிபிசிஐடி போலீஸார் 2 வழக்குகள் தொடர்ந்தனர். இந்த வழக்குகளில் ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை வழங்கி 9.10.2000 அன்று சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை பின்னர் ரத்து செய்த உயர் நீதிமன்றம், ஜெயலலிதாவை வழக்கிலிருந்து விடுதலை செய்தது. உச்ச நீதிமன்றமும் இதை உறுதி செய்தது.

ப்ளசன்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கு

கொடைக்கானலில் ப்ளசன்ட் ஸ்டே ஹோட்டலுக்கு கட்டிடம் கட்ட விதிமுறைகளை மீறி அனுமதி அளிக்கப்பட்டதாகக் கூறி தொடரப் பட்ட வழக்கில், ஜெயலலிதாவுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து 2.2.2000 அன்று சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை 4.12.2001 அன்று ரத்து செய்த உயர் நீதிமன்றம், வழக்கிலிருந்து ஜெயலலிதாவை விடுதலை செய்தது.

கலர் டி.வி. வழக்கு

உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்குவதற்காக கலர் டி.வி. வாங்கியதில் முறைகேடு நடந்த தாக ஒரு வழக்கு ஜெயலலிதா மீது தொடரப்பட்டது. 1996-ம் ஆண்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இந்த வழக்கில்தான் ஜெயலலிதா கைது செய்யப்பட்டார். எனினும் அந்த வழக்கிலிருந்து சிறப்பு நீதிமன்றமே அவரை விடுதலை செய்து 30.5.2000 அன்று தீர்ப்பளித்தது. அதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

ஸ்பிக் பங்குகள் வழக்கு

அரசுக்கு சொந்தமான ஸ்பிக் நிறுவன பங்குகளை விற்பனை செய்ததில் முறைகேடு நடந்ததாகக் கூறி தொடரப்பட்ட வழக்கில் 23.1.2004 அன்று ஜெயலலிதாவை சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்தது.

நிலக்கரி இறக்குமதி வழக்கு

தரமற்ற நிலக்கரி இறக்குமதி செய்ததால் மின்சார வாரியத்துக்கு இழப்பு ஏற்பட்டதாக தொடரப்பட்ட வழக்கிலும் சிறப்பு நீதிமன்றத்தால் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டார்.

லண்டன் ஓட்டல் வழக்கு

ஜெயலலிதா உள்ளிட்டோ ருக்கு எதிராக தொடரப்பட்ட லண்டன் ஓட்டல் வழக்கு, உச்ச நீதிமன்ற அனுமதியுடன் பின்னர் திரும்பப் பெறப்பட்டது.

பிறந்த நாள் பரிசு வழக்கு

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அவருக்கு 3 லட்சம் அமெரிக்க டாலருக்கான வரைவோலை பிறந்தநாள் பரிசாக வந்ததாகவும் அதை ஜெயலலிதா தனது வங்கிக் கணக்கில் வரவு வைத்ததாகவும் கூறி, அவர் மீது சிபிஐ சார்பில் வழக்கு தொடரப்பட்டது இந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் 30.9.2011-ல் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து சிபிஐ தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

வருமான வரி வழக்கு

இதுதவிர, சில ஆண்டுகளுக்கான வருமான வரி கணக்கை சசி எண்டர்பிரைசஸ் நிறுவனம் தாக்கல் செய்யவில்லை எனக் கூறி அதன் பங்குதாரர் என்ற முறையில் ஜெயலலிதாவுக்கு எதிராக வருமான வரித் துறையினர் தாக்கல் செய்த வழக்குகள், சென்னை எழும்பூரில் உள்ள கூடுதல் பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கின் விசாரணைக்காக வரும் அக்டோபர் 1-ம் தேதி ஜெயலலிதா நேரில் ஆஜராக வேண்டும் என்று எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்து ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், அக்டோபர் 1-ம் தேதி ஜெயலலிதா நேரில் ஆஜராக விலக்கு அளித்து உத்தரவிட்டது.

துணிச்சலும், நம்பிக்கையும்

இவ்வாறு ஏராளமான வழக்குகள் தனக்கு எதிராகத் தொடரப்பட்டாலும் அவற்றை துணிச்சலுடன் ஜெயலலிதா எதிர்கொண்டார். டான்சி நில வழக்கில் வழங்கப்பட்ட தண்டனையால் 2001-ம் ஆண்டு அவர் முதல்வர் பதவியை இழக்க நேர்ந்தது. அப்போதும் அவர் மனம் தளரவில்லை. “இது தற்காலிக பின்னடைவுதான்; சட்டப் போராட்டத்தில் வெற்றி பெற்று மீண்டும் முதல்வராக பொறுப்பேற்பேன்” என்று கூறினார். சொன்னது போலவே டான்சி வழக்கிலிருந்து விடுதலை ஆகி, அடுத்த சில மாதங்களில் மீண்டும் முதல்வர் பதவியில் ஜெயலலிதா அமர்ந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x