Published : 09 Sep 2014 12:41 PM
Last Updated : 09 Sep 2014 12:41 PM

கண் தான விழிப்புணர்வுக்காக ரத்த தானம் செய்த பார்வையற்றோர்

தேசிய கண் தான தினத்தை முன்னிட்டு, கண் தானத்தின் அவசியம் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவதற்காக பார்வையற்றோர் பலர் திருச்சியில் திங்கள்கிழமை சிறப்பு ரத்த தான முகாம் ஒன்றை நடத்தினர்.

புத்தூர் ஒய்எம்சிஏ அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு கண் தான ஊக்குவிப்பாளரான பாய்லர் ஆலை ஊழியர் செல்வராஜ் ஏற்பாடு செய்திருந்தார். இந்திய செஞ்சிலுவைச் சங்க திருச்சி மாவட்ட தலைவர் ராஜசேகரன் முன்னிலை வகித்தார்.

விபத்தில் பார்வையை இழந்த நபர்களுக்கு தானமாக பெறப்படும் கண்கள் மூலம் பார்வை கிடைக்கும். ஆகவே, இறப்புக்குப் பிறகு தீயில் அல்லது மண்ணில் அழிந்து போகும் கண்களை தானமாக வழங்கி பார்வை இழந்தவர்கள் பலரை மீண்டும் இந்த உலகைக் காண வழி ஏற்படுத்துங்கள் என்கிற கோரிக்கையுடன் அங்கு குழுமியிருந்தனர் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள்.

திருச்சி மாநகர குற்றம் மற்றும் போக்குவரத்து காவல் பிரிவு துணை ஆணையர் ஜெயந்தி சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசும்போது, “பார்வை உள்ள வர்கள் வாழ்நாள் முடிந்த பிறகு கண் தானம் செய்ய வேண்டும் என்பதற்காக பார்வை யற்றவர்கள் பலர் தங்களது ரத்தத்தைக் கொடுத்து வேண்டு கோள் விடுப்பது நெகிழச் செய்கிறது.

நம்மிடம் அவர்கள் கண்களைக்கூட இலவசமாக தாருங்கள் எனக் கேட்கவில்லை. அவர்கள் ரத்தத்தை வழங்கி கண்களை கேட்கிறார்கள். வாழ்வு முடிவடைந்த பிறகு இன்னொருவருக்கு பார்வை கிடைக்கச் செய்யும் கண் தானத்தை அனைவரும் செய்ய முன்வரவேண்டும். அதேபோல ரத்த தானம் செய்வதும் மிகச் சிறந்த சேவை. இதனால் பாதிப்பு கிடையாது.

சில மணி நேரங்களில் தானமாக வழங்கப்பட்ட ரத்தம் நமது உடலில் மறுபடி உற்பத்தியாகி உடலுக்கு தேவையான ரத்தத்தில் சமநிலை ஏற்படும். அதனால் பயமின்றி அனைவரும் ரத்த தானம் வழங்குங்கள்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x