Published : 29 Apr 2019 06:36 PM
Last Updated : 29 Apr 2019 06:36 PM

ஆண்டாண்டுகளாக நோன்புக்கஞ்சிக்கு வழங்கப்படும் அரிசியை இதுவரை வழங்கவில்லை: தமிழக அரசுக்கு இ.யூ.முஸ்லீம் லீக் வேண்டுகோள்

பன்னெடுங்காலமாக வழங்கப்பட்டு வரும் ரமலான் நோன்பு கஞ்சிக்கான அரிசியை தமிழக அரசு உடனே வழங்க வேண்டும் என இ.யூ. முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம். காதர் மொகிதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான ரமலான் பண்டிகையின்போது நோன்பிருத்தல் முக்கிய கடமையாகும். அவ்வாறு நோன்பிருப்பவர்கள் மாலையில் நோன்பு திறக்கும்போது பள்ளிவாசல்களில் நோன்புக்கஞ்சி ஊற்றுவார்கள்.

இதற்கான அரிசியை தமிழக பள்ளிவாசல்களுக்கு வழங்கி வந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு நோன்பு வரும் மே.5-ம் தேதி ஆரம்பிக்க உள்ளது. இந்நிலையில் இதுவரை பள்ளிவாசல்களுக்கான நோன்பு கஞ்சிக்கு வழங்கப்படும் அரிசியை தமிழக அரசு வழங்கவில்லை.

இதுகுறித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியதலைவர் கே.எம். காதர் மொகிதீன் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“இஸ்லாமியர்களின் ஐந்து கடமைகளில் ஒன்றான நோன்பு கடமையை ரமலான் மாதம் முழுவதிலும் 30 நாட்கள் முஸ்லிம்கள் நோன்பிருந்து கடமையை நிறைவேற்றுவர்.

சுமார் 15 மணி நேரம் உண்ணாமல், பருகாமல், விரதத்தை கடைப்பிடித்து நோன்புக்கஞ்சி அருந்தி விரதத்தை முடிப்பர். நோன்புக் கஞ்சி காய்ச்சுவதற்கு தேவையான விலையில்லா பச்சரிசியை தமிழக அரசு அனைத்து பள்ளிவாசல்களுக்கும் பன்னெடுங்காலமாக வழங்கி வருகின்றது.

இவ்வருடம் நோன்பு கஞ்சிக்கு தேவையான பச்சரிசியை தமிழக அரசு இதுவரை வழங்கவில்லை என்பதை பல பள்ளிவாசல் நிர்வாகிகள் தொடர்பு கொண்டு தெரிவித்து வருகின்றனர். காலதாமதத்திற்கு தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக இருக்கக்கூடும்.

நோன்புக் கஞ்சிக்கு  பச்சரிசி வழங்குவது தமிழக அரசின் புதிய அறிவிப்பு இல்லை.  பன்னெடுங்காலமாக  இருந்து வரும் நடைமுறையாகும். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம் முஹம்மது அபூபக்கர் எம்எல்ஏ இந்திய தேர்தல் ஆணையத்தின் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹூ, தமிழ்நாடு சிறுபான்மை நலத்துறை, வக்ஃபு வாரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு அனைத்து பள்ளிவாசல்களுக்கும் நோன்பு கஞ்சிக்கு தேவையான பச்சரிசியை வழங்கிட வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு விரைவாக  நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்”

 இவ்வாறு பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x