Published : 29 Sep 2014 09:06 AM
Last Updated : 29 Sep 2014 09:06 AM

தமிழக சட்டம் ஒழுங்கு நிலை குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் நிலவும் சட்டம் - ஒழுங்கு நிலவரம் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, வழக்கறிஞர் என்.ராஜாராமன் மற்றும் மனித உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர் ஜிம்ராஜ் மில்டன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர பொதுநல மனுக்களை தனித்தனியாக தாக்கல் செய்துள்ளனர்.

டிராபிக் ராமசாமி மற்றும் என்.ராஜாராமன் ஆகியோரது மனுவில், ‘சமீபத்தில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், தற்போது ஜெயலலிதா மீதான வழக்கின் தீர்ப்பு வந்தவுடன் பல்வேறு இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்த நிலையில், தடை உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை. போலீஸார் வன்முறை சம்பவங்களை வேடிக்கை பார்க்கின்றனர். எனவே, நீதிமன்றம் தலையிட்டு சட்டம் - ஒழுங்கை காக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என கூறியுள்ளனர்.

ஜிம்ராஜ் மில்டன் தாக்கல் செய்த மனுவில், ‘தமிழகத்தில் பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் தொடர்கின்றன. அரசு பஸ்கள் எரிக்கப்படுகின்றன. சட்டம் - ஒழுங்கைக் காக்கவும், வன்முறைச் சம்பவங்களை தடுத்து, அமைதியான இயல்பு வாழ்க்கை திரும்பவும் நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த அவசர மனுக்கள், நீதிபதிகள் எஸ்.வைத்யநாதன், ஆர்.மகாதேவன் ஆகியோரைக் கொண்ட பெஞ்ச் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில் அட்வகேட் ஜெனரல் ஏ.எல்.சோமையாஜி, மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர் ஜி.புருஷோத்தமன், ராஜாராமன், டிராபிக் ராமசாமி ஆகியோர் ஆஜராகினர்.

வழக்கறிஞர் ஜி.புருஷோத் தமன் வாதிடும்போது, ‘‘தமிழகத் தில் அசாதாரண சூழல் நிலவு கிறது. அரசியலமைப்பு ரீதியாக வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. தற் போது முதல்வர் இல்லாத நிலை யில், அமைச்சரவையும் இல்லை. அனை வரும் எம்எல்ஏக்களாகவே கருதப்படுகின்றனர். இந்நிலையில், ஆளுநர் ஆட்சியும் அமலுக்கு வரவில்லை என்றால், தலைமைச் செயலரும் டிஜிபியும் யாரிடம் உத்தரவு பெற வேண்டும். நிலைமையை விளக்க வேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது. எனவே, நீதிமன்றம் தலையிட்டு, டிஜிபி மற்றும் தலைமைச் செயலருக்கு உத்தரவுகள் பிறப்பிக்க வேண்டும்’’ என்றார்.

அட்வகேட் ஜெனரல் சோமை யாஜி கூறும்போது, ‘‘தமிழகத்தில் சனிக்கிழமை மாலை 6 மணிக்கு மேல் எந்தப் பிரச்சினையும் இல்லை. அரசு பஸ்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் இயக்கப்படுகின்றன. சட்டம் - ஒழுங்கைப் பாதுகாக்க தேவை யான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. மாவட்டங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் பஸ் எரிப்பு வழக்கில் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தாராபுரம் அருகே நடந்த வன்முறை சம்பவத்தில் திமுகவைச் சேர்ந்தவர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆளுநரை சந்தித்து டிஜிபியும் தலைமைச் செயலரும் ஆலோசனை நடத்தியுள்ளனர்’’ என்றார்.

இதைக் கேட்ட நீதிபதிகள், ‘‘தமிழகத்தில் நிலவும் சட்டம் - ஒழுங்கு நிலவரம் குறித்து அரசுத் தரப்பில் ஒரு வாரத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’’ என்று உத்தரவிட்டு, விசாரணையை அக்டோபர் 6-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x