

திருவண்ணாமலை: செய்யாறு அருகே 16 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி, கடந்த 19-ம் தேதி திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த பிரம்மதேசம் அருகே உள்ள தனது பாட்டி வீட்டுக்கு வந்துள்ளார்.
அப்போது, சிறுமி தனியாக அவரது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த சிலர், சிறுமியை கூட்டாக பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கூறப்படுகிறது.
இதனால், உடல்நலம் பாதித்த சிறுமி காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். மருத்துவர்கள் பரிசோதனையின்போது அவர் பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த தகவலை மருத்துவர்கள், காஞ்சிபுரம் போலீஸாருக்கு தெரிவித்துள்ளனர்.
பின்னர் சம்பவம் நடந்த திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், நேற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் தலைமையிலான போலீஸார், சம்பவ இடத்தில் தீவிர விசாரணை நடத்தினர்.
மேலும், இதுதொடர்பாக 3 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே இந்த சம்பவத்துக்கு கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: செய்யாறு அருகே சிறுமி 8 மர்ம நபர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. சட்டம் ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு, போதைப்பொருள் புழக்கம் இவை பற்றி கடந்த 5 ஆண்டு திமுக ஆட்சியில் பேசாத நாளே இல்லை.
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்: திருவண்ணாமலையில் இளம்பெண்ணை அவரது தாய் முன்பே இரு காவலர்கள் வன்கொடுமை செய்த ரணம் ஆறும் முன்பே, மற்றொரு கொடூரம் அரங்கேறி இருப்பது திறனற்ற திமுக ஆட்சியால் பெண்களுக்கு துளியும் பாதுகாப்பில்லை என்பது தெளிவாகிறது.
பாமக தலைவர் அன்புமணி: கஞ்சா போதையை கட்டவிழ்த்து விட்டு, ஆட்சி அதிகாரத்தின் கடைசி நாளில் கூட பெண்களையும், குழந்தைகளையும் பாதுகாக்க துப்பில்லாத அரசாக திமுக திகழ்வது கண்டிக்கத்தக்கது.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் அதிகளவில் நடைபெறும் மாநிலமாக தமிழகம் மாறியிருக்கிறது.