

கோப்புப் படம்
மாடம்பாக்கம்: மாடம்பாக்கம் யஷ்வந்த் நகர், ஏஎல்எஸ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களில் 16 தெருநாய்கள் அடுத்தடுத்து உயிரிழந்து கிடந்ததாக கூறப்படுகிறது. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் நாய்களுக்கு விஷம் வைத்து கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகம் தெரிவித்தனர்.
இதுகுறித்து தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதுடன், சேலையூர் காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகளும், போலீஸாரும் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உயிரிழந்த நாய்களின் உடல்களை கால்நடைத் துறையினர் கைப்பற்றி, உடற்கூறாய்வு மற்றும் மருத்துவப் பரிசோதனை மூலம் இறப்புக்கான காரணத்தைக் கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பரிசோதனை முடிவுகளுக்குப் பின்னரே நாய்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டதா அல்லது நோய் தாக்குதல் காரணமா என்பதை உறுதிசெய்ய முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் சம்பவம் நடைபெற்ற பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளையும் போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.