Last Updated : 16 Mar, 2019 08:04 AM

 

Published : 16 Mar 2019 08:04 AM
Last Updated : 16 Mar 2019 08:04 AM

கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழா தொடங்கியது

கச்சத்தீவில் இந்தியா-இலங்கை பக்தர்கள் இணைந்து கொண்டாடும் புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா நேற்று மாலை கோலாகலமாகத் தொடங்கியது.

ராமேசுவரம் ஓலைக்குடாவைச் சேர்ந்த அந்தோணிப்பிள்ளை பட்டங்கட்டி மற்றும் தொண்டியைச் சேர்ந்த சீனிக்குப்பன் பட்டங்கட்டி ஆகிய இருவரால், கடந்த 1913-ம் ஆண்டு கச்சத்தீவில் மிகச்சிறிய ஓலைக் குடிசையில் புனித அந்தோணியார் ஆலயம் நிறுவப்பட்டது. அதன்பிறகு, ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்தவர்களின் தவக்காலத்தில் (ஈஸ்டர்) அந்தோணியார் ஆலயத் திருவிழா நடைபெற்று வருகிறது.

இந்தியா–இலங்கை மக்கள் இணைந்து கொண்டாடும் புனித கச்சத்தீவு அந்தோணியார் திருவிழா நேற்று மாலை 4 மணியளவில் கச்சத்தீவில் தொடங்கியது.

யாழ்ப்பாண மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் ஆலயத்தின் கொடியை ஏற்றி விழாவைத் தொடங்கி வைத்தார். நெடுந்தீவு பங்குத் தந்தை எமில் பவுல், ராமேசுவரம் பங்குத் தந்தை தேவசகாயம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னதாக, கச்சத்தீவு திருவிழாவில் தமிழகத்திலிருந்து பங்கேற்பதற்காக 2,451 பேர் தங்கள் பெயர்களைப் பதிவு செய்திருந்தனர். விண்ணப்பித்தவர்களுக்கு ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் மூலம் சிறப்பு அடையாள அட்டைகளும், மீன்வளத் துறையின் சார்பாக ஒவ்வொருவருக்கும் லைப் ஜாக்கெட்டும் வழங்கப்பட்டன.

64 விசைப்படகு மற்றும் 15 நாட்டுப் படகுகளில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 2,229 பேர் கச்சத்தீவு புறப்பட்டுச் சென்றனர்.

இன்று தேர் பவனிஇன்று (சனிக்கிழமை) காலையில் சிறப்புத் திருப்பலி பூஜையும், அந்தோணியார் தேர் பவனியும் நடைபெறுகிறது. இலங்கையிலிருந்து சிங்கள பக்தர்களும் அதிகளவில் கலந்து கொள்கின்றனர். சிங்கள மொழியில் முதன்முறையாக திருப்பலி நடத்தப்படுகிறது. இதனைத் தொடர்ந்து கொடியிறக்கப்பட்டு விழா நிறைவடையும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x