Published : 31 Mar 2019 02:05 PM
Last Updated : 31 Mar 2019 02:05 PM

முகிலன் மீது பாலியல் பலாத்கார புகார் அளித்த பெண்: போலீஸ் வழக்குப்பதிவு

சுற்றுசூழல் ஆர்வலர் முகிலன் காணாமல்போய் மாதக்கணக்காகிவிட்ட நிலையில் அவர்மீது பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் அளித்ததன்பேரில் போலீஸார் 3 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி 2018 மே 22-ல் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தின்போது காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். தூத்துக்குடியில் கலவரம் செய்தவர்கள் பொது மக்கள் அல்ல, திட்டமிட்டு ஏவப்பட்ட குண்டர்கள்தான் என்பதை சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை ஆதாரமாகக் காட்டி தெளிவாக விளக்கியிருந்தார் முகிலன். 

கடந்த பிப்ரவரி 15- அன்று  தூத்துக்குடி படுகொலை தொடர்பான காணொளியை வெளியிட்ட அவர் அன்று இரவு எழும்பூர் ரயில் நிலையம் சென்றவர் அதன்பின்னர் காணவில்லை.

அன்று இரவு முதல் காணவில்லை. இதையடுத்து, எழும்பூர் ரயில்வே காவல் நிலையத்தில் தமிழ்நாடு மாணவர் மற்றும் இளையோர் கூட்டமைப்பினர் புகார் அளித்தனர். வழக்கறிஞர் சுதா ராமலிங்கம், மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் ஆகியோர் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ததைத் தொடர்ந்து, இதுகுறித்து விளக்கமளிக்க காவல் துறையினருக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தொடர்ந்து அந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டுள்ளது. ஆனால், அவர் காணாமல்போய் 40 நாட்களுக்குப் பிறகும் அவர் எங்கு இருக்கிறார் என்பதை போலீஸாரால்கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில் முகிலன் மீது கரூர்   மாவட்டம், குளித்தலை  தாலுகா, குளித்தலை  அனைத்து மகளிர்   காவல் நிலையத்தில் பெண் ஒருவர் பாலியல் பலாத்கார புகார் கொடுத்ததன்பேரில் அவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அவரது புகாரில் தான் முகிலனுடன் இணைந்து பல போராட்டங்களில் ஈடுபட்டதாகவும், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 27-ம் தேதி நெடுவாசல் பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு தங்கும் விடுதியில் தன்னை முகிலன் பலவந்தப்படுத்தியதாகவும் தான் மறுத்தபோது திருமணம் செய்துக்கொள்வதாக கூறி நம்ப வைத்து பல முறை உறவு கொண்டதாக தெரிவித்துள்ளார்.

தான் உறவுக்கு மறுத்தும் பலமுறை கட்டாயப்படுத்தி தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகாரில் தெரிவிததன் அடிப்படையில் அவர்மீது, குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலைத்தில் ஐபிசி பிரிவு 417 (ஏமாற்றுதல்), 376 (பாலியல் பலாத்காரம்) மற்றும் 4(H) பெண் வன்கொடுமை சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

முகிலன் காணாமல்போன நிலையில் அவரை சிபிசிஐடி போலீஸார் தேடி வரும் நிலையில், அவர் மீது பெண் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார் என வதந்திகள் இருந்த சூழ்நிலையில் தற்போது அந்தப்பெண்ணே புகார் அளித்து வழக்கும் பதிவு செய்யப்பட்டிருப்பது சூழலியல் ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x