Last Updated : 15 Mar, 2019 11:38 AM

 

Published : 15 Mar 2019 11:38 AM
Last Updated : 15 Mar 2019 11:38 AM

கேட்டது 8; கிடைத்தது 4: அதிமுகவுக்கு ஓகே சொல்ல பாஜகவே காரணம்- சுதீஷ் பளிச்

அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைய பாஜக அளித்த வாக்குறுதியே காரணம் எனக் கூறுகிறார் கட்சியின் துணை பொதுச் செயலாளர் சுதீஷ்.

அதிமுக கூட்டணியில் தேமுதிக நீண்ட இழுபறிக்கு பின்னரே இணைந்தது. ஒரே நேரத்தில் திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுடனேயும் பேச்சுவார்த்தை நடத்தியதாக சர்ச்சைகள் எழுந்த நிலையில்தான் கடைசியாக பியூஷ் கோயல் மத்தியஸ்தம் செய்ய அதிமுக கூட்டணியில் இனைந்தது தேமுதிக.

இந்நிலையில், சீட் குறைந்தாலும்கூட அதிமுகவுக்கு ஓகே சொன்னது ஏன், எப்படி என 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் விவரித்திருக்கிறார் தேமுதிகவின் துணை பொதுச் செயலாளரும் விஜயகாந்தின் மைத்துனருமான எல்.கே.சுதீஷ்.

பேட்டியிலிருந்து..

அதிமுக, பாஜகவுடன் கூட்டணி உடன்பாடு எட்டப்படுவதில் தேமுதிக மிகப்பெரிய அரசியல் வியாபாரமே நடத்தியது. பாமகவுக்கு ஒதுக்கப்பட்ட 7 தொகுதிகளைவிட அதிகமாக சீட் பெறுவதே இலக்கு என்றிருந்த நீங்கள் எப்படி 4 சீட்டுக்கு ஒப்புக் கொண்டீர்கள்?

தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவதில் எந்த சிக்கலுமே இல்லை. ஆனால், சீட் எண்ணிக்கை மட்டும்தான் எங்களுக்குப் பிரச்சினையாக இருந்தது. நாங்கள் 8 தொகுதிகளும் ஒரு ராஜ்யசபா சீட்டும் கேட்டோம். ஆனால், அவர்கள் எங்களுக்குத் தருவதாக சொன்னதில் திருப்தியில்லை.

இருந்தாலும் எங்களுக்கு 4 சீட் தான் கொடுக்கப்பட்டிருக்கிரது. அதில் ஒரே ஆறுதல் எங்களுக்கு விருப்பமான வடசென்னை, கள்ளக்குறிச்சி, திருச்சி, விருதுநகர் தொகுதிகள் ஒதுக்கப்பட்டதே.

ஆனால், அதிமுக கூட்டணியில் இணைய பாஜக எங்களுக்கு சில வாக்குறுதிகளைக் கொடுத்திருக்கிறது. ஆட்சி அமைந்த பிறகு அதனை நிறைவேற்றுவதாக பாஜக தரப்பு உறுதியளித்திருக்கிறது. அதனால்தான், எங்களுக்கு தகுந்த இழப்பீடு கிடைத்ததாக நாங்கள் உணர்கிறோம்.

ஒரே நேரத்தில் அதிமுக, திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை மேற்கொண்டதால், நீங்கள் சமரசம பேச்சை முதிர்ச்சியுடன் அணுகவில்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறதே?

தேமுதிகவின் கூட்டணி முடிவு எடுக்கும் குழுவின் தலைவர் என்ற ரீதியில் என் மீது பாராட்டுகளும் விமர்சனங்களும் கடந்த காலங்களிலும் வந்திருக்கின்றன.

எல்லா கட்சிகளைப் போலவும்தான் நாங்களும் தேசிய கட்சிகள், மாநில கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினோம். என் கட்சி மீது எனக்கு அதீத அக்கறை இருப்பது இயல்புதானே. ஆனால் ஏனோ அது ஊதிப் பெரிதாக்கப்பட்டுவிட்டது.

அன்றைய தினம் நான் பியூஷ் கோயலை சென்று சந்தித்தபோது, பிரதமர் நிகழ்ச்சியில் நாங்கள் இம்முறை கலந்து கொள்ள முடியாது ஆனால் தேமுதிக நிச்சயமாக கூட்டணியில் இடம்பெறும் என்று தெரிவித்தேன். நான் அங்கு அவருடன் ஹோட்டலில் இருந்தபோது இங்கு நடந்தது என்னவென்று எனக்கு முழுமையாககூட தெரியாத நிலையே இருந்தது.

உங்களுக்கு பாமகவுடன் பழைய விரோதம் இருக்கிறது. அப்படியிருந்தும் இந்த கூட்டணி சரிப்படும் என நினைக்கிறீர்களா?

பாமக நிறுவனர் ராமதாஸும், அவரது மகன் அன்புமணி ராமதாஸும் நேற்று கேப்டன் விஜயகாந்தையும், பொர்ருளாளர் பிரேமலதாவையும் சந்தித்தனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த சந்திப்புக்குப் பின், இரண்டு கட்சிகளின் அடிமட்ட தொண்டர்களும் ஒன்றுபட்டு வெற்றிக்காக பாடுபடுவார்கள் என நம்புகிறேன்.

2014-ல் பாமக கடைசி நேரத்தில்தான் தேஜகூட்டணியில் இணைந்தது. அதனாலேயே களத்தில் தொண்டர்கள் மத்தியில் பிணைப்பு ஏற்படவில்லை.

கடந்த இரண்டாண்டுகளில் அதிமுக மீது முன்வைக்கப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள், கூட்டணி கட்சிகளின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் என நினைக்கிறீர்களா?

நாங்கள் கூட்டணி பேச்சுவார்த்தையை பாஜக தலைவர் அமித் ஷாவிடமிருந்துதான் தொடங்கினோம். பின்னர் பியூஷ் கோயலிடம் பேசினோம். தமிழகத்தில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி என்று பாஜகவே சொன்ன பிறகுதான் நாங்கள் அதிமுகவுடன் பேச்சுவார்த்தையையே தொடங்கினோம்.

இதுதான் தாமதத்துக்கான காரணம். ஆனாலும், நாங்கள் தொடர்ந்து ஊழல் குறித்து கேள்வி எழுப்புவோம்.

அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்ததன் மூலம் அதிமுகவை மூத்த கட்சியாக ஏற்றுக்கொண்டுள்ளீர்கள். இது '2தமிழகத்தின் மாற்று சக்தி தேமுதிக' என்ற உங்கள் முழக்கத்தை குறைத்துவிடாதா?

இப்போதும் சொல்கிறேன் நாங்கள் மாற்று சக்திதான். இது பிரதமரை தேர்வு செய்யும் தேர்தல். 2011 மாநிலத் தேர்தலைப் போலவே 2019 மக்களவைத் தேர்தலில் பாஜக - அதிமுக கூட்டணியில் நாங்கள் இடம்பெற வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர்.

அரசியலில், அடுத்த தேர்தலுக்கான கொள்கை என்னவென்பதை நாங்கள் இப்போதே பேச முடியாதல்லவா? இது மாறலாம் மாறாமலும் இருக்கலாம்.

நாங்கள் கட்சி தொடங்கியதே கேப்டனை முதல்வராக்கத்தான். அந்த நிலைப்பாட்டில் இப்போதும்கூட எந்த மாற்றமும் இல்லை.

பாஜக மீது பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து விமர்சனங்கள் வருகின்றன. தேமுதிகவின் பார்வை என்ன?

மோடி அரசை பிரச்சினைகளின் அடிப்படையில் தேமுதிகவும் கூட விமர்சித்தும் ஆதரித்தும் பேசியிருக்கிறது.

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். இந்த முறை தமிழகத்திலிருந்து நிறைய எம்.பி.க்கள் மத்திய அரசில் இடம்பிடிப்பார்கள் .

- தமிழில்: பாரதி ஆனந்த்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x