Last Updated : 08 Mar, 2019 02:06 PM

 

Published : 08 Mar 2019 02:06 PM
Last Updated : 08 Mar 2019 02:06 PM

வண்ணத்துப்பூச்சி பூங்காவின் புதுவரவு ‘காமன் நவாப்’: ‘சிறகடிக்கும் வகைகளின் எண்ணிக்கை 101 ஆனது

ஸ்ரீரங்கம் வண்ணத்துப்பூச்சி பூங்காவுக்கு புதுவரவாக ‘காமன் நவாப்' வகை வண்ணத்துப்பூச்சி வந்துள்ளது. இதனால், இங்குள்ள வண்ணத்துப்பூச்சி வகைகளின் எண்ணிக்கை 101-ஆக உயர்ந்துள் ளது.

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே மேலூரில், 2015-ம் ஆண்டில் 38 வகையான வண்ணத்துப்பூச்சி இனங்களுடன் வண்ணத்துப்பூச்சி பூங்கா தொடங்கப்பட்டது. இங்கு, குழந்தைகளுக்கான விளையாட்டு சாதனங்கள், செயற்கை நீருற்றுகள், நட்சத்திர வனம், சிறு மரப்பாலங்கள் உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

ஆசியாவின் மிகப்பெரிய வண்ணத்துப்பூச்சி பூங்காக்களுள் ஒன்றாக விளங்குவதால், இங்கு வரக்கூடிய வண்ணத்துப்பூச்சி வகைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்வதற்கான முயற்சிகளை வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இதன்படி வண்ணத்துப்பூச்சிகள் மிகவும் விரும்பக்கூடிய எருக்கு, கறிவேப்பிலை, எலுமிச்சை, ஆமணக்கு, வில்வம், செண்பக மரம், தலைவெட்டிப்பூ, நாயுருவி உள்ளிட்ட தாவரங்களை அதிகள வில் வளர்க்கத் தொடங்கினர்.

இதனால் பிற பகுதிகளில் இருந்து சில்வர் ராயல், கிராஜுவல், கிரிம்ன்ஸன் ரோஸ், சதர்ன் பேர்டு விங், ப்ளு மார்மன், காமன் டெசிபல் போன்ற முக்கியமான வகைகள் உட்பட ஏராளமான வண்ணத்துப்பூச்சி இனங்கள் இங்கு வரத் தொடங்கின. இவற்றை, வனத்துறையினரும், வண்ணத்துப்பூச்சி ஆராய்ச்சி யாளர்களும், மாணவர்களும் இணைந்து படம்பிடித்து ஆவணப்படுத்தி வருகின்றனர்.

இதன்படி, கடந்தாண்டு மே மாதம் 100-வது வகை வண்ணத்துப்பூச்சியாக ‘கூரான பிசிருயிர் நீலன்’ என்ற வகை வண்ணத்துப்பூச்சியை படம்பிடித்து ஆவணப்படுத்தினர். அதன்பின் தற்போது ‘காமன் நவாப்’ வகை வண்ணத்துப்பூச்சியை வனத்துறையினர் அடையா ளம் கண்டு, ஸ்ரீரங்கம் வண்ணத்துப்பூச்சி பூங்காவுக்கு வந்த 101-வது வகையாக ஆவணப்படுத்தியுள்ளனர்.

இதுகுறித்து வண்ணத்துப்பூச்சி பூங்கா வன சரகர் முருகேசன் கூறும்போது, ‘‘இந்த பூங்காவுக்கு வரக்கூடிய வண்ணத்துப்பூச்சி வகைகளின் எண்ணிக்கை படிப் படியாக அதிகரித்து வருகிறது. தற்போது 101-வது வகையாக ‘காமன் நவாப்' வகை பதிவாகி யுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த எண்ணிக்கையை அதிகப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படும்’’ என்றார்.

ஆராய்ச்சியாளர்கள் நியமிக்கப்படுவார்களா?

இந்த வண்ணத்துப்பூச்சி பூங்கா, பல்லுயிர் பெருக்க ஆராய்ச்சி களமாகவும் பயன்படுத்தப்படுகிறது. எனவே இங்கு, வண்ணத்துப்பூச்சிகள் விரும்பக்கூடிய தாவர இனங்களை தட்வெப்ப நிலைக்கேற்ப வளர்ப்பது, பல்வேறு வகையான வண்ணத்துப்பூச்சி வகைகளை இனப்பெருக்கம் செய்வது, இவை தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொள்வது போன்றவற்றுக்காக, தோட்டக்கலை, பூச்சியியல், தாவரவியல், விலங்கியல் ஆகிய 4 துறைகளின் கீழ் தலா ஒரு இளம்நிலை ஆராய்ச்சியாளர் பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், இங்கு தாவரவியல், தோட்டக்கலைக்கு மட்டும் இளம்நிலை ஆராய்ச்சியாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். இவர்களும் பணி மாறுதல் பெற்றுச் சென்றுவிட்டதால், தற்போது அந்த பணியிடங்களும் காலியாக உள்ளன. இதனால், கடந்த 6 மாதமாக பூங்காவில் எவ்விதமான ஆய்வு பணிகளும் மேற்கொள்ளப்படாமல் இருப்பதாகவும், இதனால் பூங்காவின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x