Published : 27 Mar 2019 02:13 PM
Last Updated : 27 Mar 2019 02:13 PM

கெட்டுப்போன ரத்தம் செலுத்தப்பட்டதால் 15 கர்ப்பிணிகள் மரணம்: நீதி விசாரணை கேட்கிறது மருத்துவர் சங்கம்

கெட்டுப்போன ரத்தம் செலுத்தப்பட்டதால் 15-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்கள் அரசு மருத்துவமனைகளில் பலியாகினர். தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறையின் கட்டமைப்பு சீர்குலைவே காரணம். இதற்கு தார்மீகப் பொறுப்பேற்று அமைச்சர் பதவி விலக வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

 சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அச்சங்க பொதுச்செயலாளர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் கூறியதாவது:

“தருமபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் கெட்டுப்போன ரத்தம் செலுத்தப்பட்ட கர்ப்பிணிப் பெண்கள் 15 பேர் இறந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இது அதிர்ச்சி அளிக்கிறது. ஏற்கெனவே ,சாத்தூர் அரசு மருத்துவமனையில் எச்.ஐ.வி தொற்று உள்ள ரத்தத்தை கர்ப்பிணிப் பெண்ணுக்கு செலுத்திய நிகழ்வு தமிழக மக்களை கவலைக்குள்ளாக்கியது.

இந்நிலையில் கெட்டுப்போன ரத்தத்தைச் செலுத்தியதால் 15-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்கள் இறந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறையின் கட்டமைப்பு செயலிழப்பே இதற்கு மிக முக்கியக் காரணமாகும்.  தமிழக அரசின் ரத்த வங்கிகள், ரத்தப் பரிசோதனை நிலையங்களின் சேவைகள் தரமானதாக இல்லை.

பரிசோதனைக்கு வழங்கப்படும் கிட்டுகள் (kits) தரமானதாக இல்லை. ரத்த வங்கிகள், ரத்தப் பரிசோதனை நிலையங்கள் நவீன தொழில்நுட்பம் கொண்டதாக இல்லை. ரத்தம் பொருந்துகிறதா என்பதை பரிசோதிக்க நவீன தொழில் நுட்ப வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவில்லை. எச்.ஐ.வி கிருமி தொற்று இருக்கிறதா என்பதைக் கண்டறிய, நவீன நியூக்ளிக் அமில பரிசோதனைகள் வசதி செய்து கொடுக்கப்பட வில்லை.

ரத்த வங்கிகளின் செயல்பாட்டை மேம்படுத்த மத்திய - மாநில அரசுகளின் கொள்கைகள் நடைமுறைப்படுத்தப் படவில்லை. தேசிய இரத்தம் ஏற்றுதல் கழகத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படை யில் ரத்த வங்கிகளில் மருத்துவர்கள், ஊழியர்கள் நியமிக்கப்படவில்லை.  ஒப்பந்தம் மற்றும் வெளிக்கொணர்தல் முறையிலான பணி நியமனங்கள், தரமான சேவையை அளித்தலில் பிரச்சினைகளை உருவாக்குகின்றன.

ரத்த வங்கிகளை முறையாகக் கண்காணிக்கும் ஏற்பாடு இல்லை.  ரத்தம் செலுத்துதல் மருத்துவத்தில் ( transfusion medicine) பயிற்சி பெற்ற மருத்துவர்களை ரத்த வங்கிகளில் பணி நியமனம் செய்யவில்லை. ரத்தக் கூறுகளை பயன்படுத்துவதற்குப் பதிலாக, முழுமையான ரத்தத்தை பயன்படுத்தும் முறை அதிக அளவில் தொடர்கிறது.

ரத்தத்தைச் செலுத்துவதற்கு முன்பாக ,எச்.ஐ.வி /மஞ்சள்காமாலை பி போன்றவற்றிற்கான பரிசோதனைகள் செய்யப்படுவதில்லை. இதுபோன்ற பிரச்சினைகளே இந்நிகழ்வுகளுக்குக் காரணம். எனவே, ரத்தம் செலுத்துவதற்கான தமிழக அரசின் 2018 ஆம் ஆண்டின்," மாநில ரத்தக் கொள்கை மற்றும் செயல்படுத்துவதற்கான வழிமுறை (State Blood Policy and Implementation frame work) ஐ நடைமுறைப் படுத்த வேண்டும்.

ரத்த சோகை சிகிச்சையை அறிவியல் ரீதியாக முறைப்படுத்த வேண்டும். அவசியமின்றி ரத்தம் செலுத்தப்படுவதை தடுத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும். மக்கள் நல்வாழ்வுத்துறை கட்டமைப்பு சீர்குலைவிற்கு தார்மீகப் பொறுப்பேற்று தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

இந்நிகழ்வுகள் குறித்து ,எய்ம்ஸ் மற்றும் ஜிப்மர் உள்ளிட்ட மருத்துவ நிறுவனங்களின் நிபுணர்களைக் கொண்டு நேர்மையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அரசு மருத்துவமனைகளின் மெத்தனப் போக்கால் ,இறந்துவிட்ட கர்ப்பிணிப் பெண்களின் குடும்பத்திற்கு தலா , ரூ 1 கோடிக்கும் குறைவில்லாமல் நிவாரணம் வழங்கிட வேண்டும்”

இவ்வாறு ஜி.ஆர்.ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ’இந்து தமிழ்திசை’ சார்பில் டாக்டர். ஜி.ஆர்.ரவீந்திரநாத்திடம் கேட்டபோது அவர் கூறியதாவது:

15 பேர் உயிரிழந்ததாக எந்த அடிப்படையில் கூறுகிறீர்கள்? உங்களிடம் என்ன ஆதாரம் உள்ளது?

பிரபல ஆங்கில நாளிதழ்களில் வந்துள்ளது. அதேபோன்று மெடர்னல் ஆடிட்டில் செய்தி வந்துள்ளதாக கூறுகிறார்கள்.

அந்த ஆடிட் அறிக்கையை நீங்கள் பார்த்தீர்களா?

இல்லை, அதுவும் செய்தித்தாளில் வந்த அடிப்படையில்தான் அதைப் பற்றி தெரிந்தது.

செய்தித்தாள் தகவலை அடிப்படையாகக் கொண்டு கோரிக்கை வைக்க முடியுமா?

நேர்மையான விசாரணையில் எத்தனைபேர் இறந்துள்ளார்கள் என வந்துவிடும். விசாரணை என்றால் தமிழ்நாடு அரசு மருத்துவர்களை வைத்து செய்யக்கூடாது. அவர்கள் உண்மையைக் கொண்டுவந்தாலும் அவர்களுக்கு தரும் பிரஷர் மூலமாக உண்மை வெளிவராமல் தடுக்கப்பட்டுவிடும் அல்லவா? அதனால்தான் ஜிப்மர், எய்ம்ஸ் போன்ற வெளி மருத்துவர்கள் வைத்து விசாரணை நடத்தவேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம்.

இதில் என்ன பிரச்சினையால் மரணம் ஏற்பட்டது என்கிறீர்கள்?

லைசிஸ் பிளட் ஏற்றினார்கள் என்று அந்த ஆங்கில செய்தித்தாளில் சொல்கிறார்கள். அது ரத்தம் ஏற்றப்பட்ட பின்னர்கூட வரலாம். தேவையில்லாமல் மருத்துவர்கள், செவிலியர்களைக் குற்றவாளிகளிகள் ஆக்கிவிட முடியாது.

என்ன பிரச்சினை அதனால் வரும்?

ஆகவே ரத்தம் ஏற்றப்படும் ஒருவர் உடலில் கொடுக்கப்படும் ரத்தம் சரியாகப் பொருந்துமா என்பதை பார்க்க  ஸ்லைட் டெஸ்ட், டியூப் டெஸ்ட் என்று உண்டு. ஸ்லைட் டெஸ்ட்டைவிட டியூப் டெஸ்டு தான் சிறந்தது.

டியூப் டெஸ்ட் செய்யாமல் ஸ்லைட் டெஸ்ட் பண்ணும்போது உண்மையில் ரத்தம் சரியாகத்தான் தெரியும். ஆனால் ரத்தம் ஏற்றப்பட்ட பிறகு ரத்தத்தில் உள்ள ஏராளமான சப் குரூப்ஸ் என்று சொல்வார்கள் அது உடலில் ரத்த குரூப்களுடன் ஒத்துப்போகாது. ரத்த தட்டுணுக்களில் சிவப்பணுக்கள் உள்ளது அல்லவா? அது அழிய ஆரம்பிக்கும். அதைத்தான் லைசிஸ் என்கிறோம்.

இது மருத்துவத் தவறா? அல்லது உடல்நிலை ஏற்றுக்கொள்ளவில்லையா?

மருத்துவத் தவறு அல்ல, டெக்னாலஜியைத்தான் சொல்லவேண்டும். ஸ்லைட் டெஸ்ட் எடுத்தவுடன் ரத்தம் சரியாக இருக்கு என்று ஏற்றுவோம். ஆனால் மேற்சொன்னதுபோல் சப் குரூப்ஸ் ஏற்றுக்கொள்ளாது. அதன் பின்னர் சிவப்பணுக்கள் அழிய ஆரம்பித்து அந்த பெண்கள் இறக்க வாய்ப்பு அதிகம்.

சாதாரண மனிதர்களைவிட கர்ப்பிணிகளுக்கு எதிர்வினை அதிகமாக இருக்கும். அவர்களுடைய தாங்கும் திறன் சாதாரண நிலையைவிட அதிகமாக் ஹைபர் ரியாக்டிவாக இருக்கும். அதனாலேயே உயிரிழப்பு சாதாரணமாக நிகழும். இதுபோன்ற காரணங்களால், இதுகுறித்த நேர்மையான விசாரணை நடைபெற்றால்தான் உண்மை வெளிவரும் என்று கேட்கிறோம்.

நீங்கள் சொல்லும் தருமபுரி, ஓசூர், கிருஷ்ணகிரியில் உயிரிழப்பு ஏற்பட்டதை நீங்கள் விசாரித்து உறுதிப்படுத்தினீர்களா?

விசாரித்தேன், அது நடந்திருப்பதாக சொல்கிறார்கள், சேலத்திலும் இதுபோன்று நடந்துள்ளதாக கூறுகிறார்கள், அதுபற்றி இன்று இந்து ஆங்கில நாளிதழில் வந்துள்ளது. ஆகவே விசாரணை கமிஷன் அமைத்து நடுநிலையான நேர்மையான விசாரணை நடத்தவேண்டும். டெக்னாலஜிதான் காரணம் என்கிறோம்.

இதில் அமைச்சரை ராஜினாமா செய்யச் சொல்வது எப்படி சரியாக இருக்கும்?

அமைச்சர் இதுபோன்ற நவீன விஷயங்களைக் கண்காணித்து அதை மாற்றும் நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட வேண்டும். நவீன ஹைடெக் வரவுகளை அமைச்சரவையில் பேசி அதை நவீனப்படுத்த அறிமுகப்படுத்தும் கடமை அவருக்கு உண்டு. அதனால்தான் அமைச்சரை ராஜினாமா செய்யவேண்டும் என்கிறோம்.

சாத்தூர் எச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரத்தில் அந்த இளைஞரை 2016 ஆண்டே எச்.ஐ.வி இருப்பது தெரிந்தும் அவரை போன் செய்து வரச்சொல்லியும் வரவில்லை. அதன்பின்னர் அவர் இரண்டு ஆண்டுகள் கழித்து ரத்தம் தந்து கர்ப்பிணி பாதிக்கப்பட்டார்,. அந்த இளைஞர் தற்கொலை செய்துகொண்டார். ஆகவே அதை தடுத்திருக்கலாம் அல்லவா? இதுபோன்ற அலட்சியங்களுக்காகத்தான் நாங்கள் அமைச்சரை குற்றம் சாட்டுகிறோம்.

இவ்வாறு ஜி.ஆர்.ரவீந்திரநாத் தெரிவித்தார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x