Last Updated : 28 Mar, 2019 10:51 AM

 

Published : 28 Mar 2019 10:51 AM
Last Updated : 28 Mar 2019 10:51 AM

புதுச்சேரிக்கு `மாநில அந்தஸ்து ஒற்றை கோஷத்தை முன்னிறுத்தும் கட்சிகள்: நிறைவேற்ற முழு முயற்சி எடுப்பார்களா?

புதுச்சேரிக்கு 'மாநில அந்தஸ்து' என்ற ஒற்றை கோஷத்தை புதுச்சேரி மக்களவைத் தொகுதி வேட்பாளர்களும், கட்சிகளும் முன்னிறுத்த தொடங்கியுள்ளன. வாக்காளர்களும் இதை கூர்ந்து கவனிக்க தொடங்கியுள்ளனர்.

இந்தியாவில் உள்ள யூனியன் பிரதேசங்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டம் 239-ன் படி மத்திய அரசின் நேரடி கண்காணிப்பில் நிர்வகிக்கப்படுகின்றன. இதற்கு முன்பு சட்டப்பேரவை அமைத்து செயல்பட்ட சில யூனியன் பிரதேசங்களான கோவா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகலாந்து, சிக்கிம், திரிபுரா, அருணாசலப்பிரதேசம், இமாசலப்பிரதேசம் போன்றவற்றுக்கு படிப்படியாக மாநில அந்தஸ்து வழங்கப்பட்டன.

இன்றைய நிலையில் அந்தமான் நிக்கோபார் தீவுகள், டையூ, டாமன் தீவுகள், டாக்ராநகர் அவேலி, சண்டிகர் ஆகியவை சட்டப்பேரவை இல்லாத யூனியன். டெல்லி, புதுவை ஆகியவை சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசங்களாகவும் தொடர்ந்து வருகின்றன.

மத்திய அரசின் சொத்துமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உள்ள டெல்லி, புதுவை யூனியன் பிரதேசங்கள் சுயமாக செயல்பட முடியாத சூழலே நிலவுகிறது. 'மத்திய அரசின் சொத்துதான் புதுச்சேரி' என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்கறிஞர் சொல்லும் நிலைதான் உள்ளது. மக்கள் பிரதிநிதிகளைவிட அதிகாரிகளும், துணைநிலை ஆளுநருமே அதிக அதிகாரத்துடன் வலம் வருகின்றனர். உரிமைகளோடு சுயமாக செயல்படாமல் மத்திய அரசிடம் அடிமையாக இருக்க வேண்டிய நிலையே யூனியன் பிரதேசங்களில் நிலவுகிறது.

புதுச்சேரியில் சட்டப்பேரவை இருந்தாலும் யூனியன் பிரதேச நிர்வாகம் மத்திய அரசிடம் இருக்கிறது. அண்மைக் காலமாக புதுவை ஆட்சி நிர்வாகத்தில் மத்திய அரசும், துணைநிலை ஆளுநரும் தொடர்ந்து தலையிடுவதால் அரசியல் நெருக்கடி உருவாகியுள்ளது. இதனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல், முதல்வர்-ஆளுநர் மோதல் என்ற நிலையிலேயே இருந்து வருகிறது. இம்மோதல் தற்போது வெளிப்படையாக தெரிந்தாலும் பல ஆண்டுகளாக நடந்துதான் வருகிறது.

கண்டு கொள்ளாத காங்கிரஸ்

இதுதொடர்பாக அரசியல் வட்டாரங்களில் விசாரித்தபோது, “புதுச்சேரிக்கு சிறப்பு மாநில அந்தஸ்து அல்லது மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கை 30 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்தாலும், கடந்த 10 ஆண்டுகளாக இக்கோரிக்கை ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளது. மத்தியிலும், புதுவையிலும் தொடர்ந்து காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது சிறு சிறு உரசல்கள் வந்தபோதும் ஒரே கட்சியினர் என்பதால் பெரிய அளவில் நிர்வாக மோதல் எழவில்லை.

மத்தியில் நீண்டகாலம் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் இக்கோரிக்கையை கண்டுகொள்ளாமலேயே இருந்தது. ஆனால், காங்கிரஸில் இருந்து வெளியேறி என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை உருவாக்கிய ரங்கசாமி இக்கோரிக்கையை பெரும் முழக்கமாக வைத்து ஆட்சியை கைப்பற்றிய பின்னர் தான் காங்கிரஸ் கட்சிக்கு இக்கோரிக்கையின் உண்மையான ஆழம் புரிந்தது.

அதேநேரத்தில் 2014 முதல் 2016-ம் ஆண்டு வரை மத்திய பாஜக ஆட்சிக்கு ஆதரவு அளித்துவந்த என்.ஆர்.காங்கிரஸூம் தனது கட்சியின் பிரதான கொள்கையான புதுவைக்கு தனி மாநில அந்தஸ்து என்னும் கோரிக்கையை மோடி அரசிடம் கேட்டுப்பெற தவறிவிட்டது.

தற்போது மத்தியிலும், மாநிலத்திலும் வெவ்வேறு ஆட்சிகள் அமைந்த நிலையில் காங்கிரஸ் கட்சி இப்போது மாநில அந்தஸ்து கோரிக்கையை கையில் எடுத்துள்ளது. இக்கோரிக்கையை வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய முதல்வர் நாராயணசாமி, அனைத்துக் கட்சித் தலைவர்களையும் டெல்லிக்கு அழைத்துச் சென்று போராட்டம், முக்கிய அமைச்சர்கள் சந்திப்பு என அடுத்தகட்ட நகர்வை தொடங்கினார். பாஜகவில் அங்கம் வகித்த ரங்கசாமியோ மவுனமாகவே இருந்துவிட்டார்” என்கின்றனர்.

தற்போது திமுக, அதிமுக தேர்தல் அறிக்கையிலும் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து என்ற வாசகங்கள் இடம் பிடித்துள்ளன. புதுச்சேரியில் ஆளும் கட்சியான காங்கிரஸூம், எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரஸூம் மாநில அந்தஸ்தை வலியுறுத்தி பேசத் தொடங்கியுள்ளனர்.

11 தீர்மானங்கள்

இதுதொடர்பாக அரசு வட்டாரங்களில் விசாரித்தபோது, “புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கக்கோரி சட்டப்பேரவையில் 1987 முதல் 2012-ம் ஆண்டு வரை இதுவரை 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அக்காலத்தில் கொள்கை அளவில் இக்கோரிக்கை பரிசீலிக்கப்பட்டபோதும், இதற்கான செயல் வடிவம் முழுமை பெறவில்லை. அதன்பின்னரும் தீர்மானங்கள் பலமுறை நிறைவேற்றி அனுப்பப்பட்டுள்ளது” என்று குறிப்பிடுகின்றனர்.

தனி மாநில அந்தஸ்துக்கான அவசிய தேவை புதுவைக்கு உருவாகியுள்ள நிலையில் மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் மட்டும் முக்கியக் கட்சிகள் மாநில அந்தஸ்தை உபயோகப்படுத்தப் போகிறார்களா? அல்லது நிறைவேற்ற முழு முயற்சி எடுப்பார்களா? என்பதை வாக்காளர்கள் கூர்மையாக கவனித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x