Published : 13 Mar 2019 04:54 PM
Last Updated : 13 Mar 2019 04:54 PM

திருப்பரங்குன்றம் தேர்தல் வழக்கை திரும்பப் பெறுவதால் பயன் கிட்டுமா? - முன்னாள் நீதிபதி கே.சந்துரு விளக்கம்

திருப்பரங்குன்றத்துக்கு இடைத்தேர்தல் நடத்தக் கோரி தேர்தல் ஆணையத்துக்கு திமுகவின் சரவணன் கடிதம் எழுதியுள்ளார்.  தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரிக்கு திமுக சார்பில் போட்டியிட்ட டாக்டர் சரவணன் மனு அளித்தார்.

 

அந்த மனுவில்  “தேர்தல் நடத்த வேண்டாம் என்று நீதிமன்றம் குறிப்பிடவில்லை. வழக்குகள் இருந்தாலும் சில தொகுதிகளில் இதற்கு முன்னர் தேர்தல் நடந்துள்ளன. திருப்பரங்குன்றம் தொகுதி மக்களின் நலன் கருதி அந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டும்” என்று சரவணன் குறிப்பிட்டுள்ளார்.

 

திருப்பர்ங்குன்றம் தொகுதியில் அதிமுக எம்.எல்.ஏ. போஸின் வெற்றிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை திரும்ப பெறுவதாக சரவணம் மனு அளித்துள்ளார்.

 

இதனையடுத்து இந்த மனுவின் விளைவுகள் என்னவென்பது பற்றி முன்னாள் நீதிபதி கே.சந்துரு, வழக்கைத் திரும்பப் பெறுவது ஒரு நல்ல முடிவாக இருக்க முடியாது ஏனெனில் இதுவே பின்னடைவை ஏற்படுத்தி இந்தத் தொகுதியின் இடைத்தேர்தல் அறிவிப்பு மேலும் தாமதமாக வாய்ப்புள்ளது. மேலும் தேர்தல் வழக்கைத் திரும்பப் பெறுவதென்பது ஒரு எளிதான நடைமுறை அல்ல. அதாவது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் அப்படி சிக்கல்களைக் கொண்டுள்ளது.

 

சட்டத்தின் 109-ம் பிரிவு என்ன கூறுகிறது எனில் உயர்நீதிமன்றத்தின் சிறப்பு அனுமதியின் பேரில்தான் தேர்தல் வழக்கைத் திரும்ப பெற முடியும். ஆகவே ஏற்கெனவே திருப்பரங்குன்றம் தேர்தல் வழக்கு குறித்த உத்தரவை ரிசர்வில் வைத்துள்ள நீதிபதி பி.வேல்முருகன் எடுக்கும் தீர்மானத்தைச் சார்ந்ததே. இவர்தான் தேர்தல் வழக்கை வாபஸ் பெறும் மனுவை அனுமதிப்பதா வேண்டாமா என்பதை முடிவு  செய்ய வேண்டும்.

 

மேலும் இதே சட்டத்தின் பிரிவு 110(2) என்ன கூறுகிறது எனில், ‘தேர்தல் வழக்கு வாபஸ் மனு ஏதோ பேரத்தினாலோ அனுமதிக்க முடியாத வேறு ஏதாவது காரணங்களினாலோ தேர்தல் வழக்கு வாபஸ் மனு மேற்கொள்ளப்படுகிறது என்று உயர் நீதிமன்றம் கருதும்பட்சத்தில் தேர்தல் வழக்கை வாபஸ் பெற முடியாது, இப்படிப்பட்ட சூழ்நிலையில் நீதிபதியே வழக்கு வாபஸை அனுமதிக்க விரும்பினாலும் ரெஸ்பாண்டெண்ட்டுகளுக்கும் முன் கூட்டியே நோட்டீஸ் அனுப்புவது முக்கியமாகும்.

 

மேலும் இந்த நோட்டீஸ் அதிகாரபூர்வ அரசு கெஜட்டில் வெளியிடப்பட வேண்டும், ஏனெனில் மனுதாரருக்குப் பதில் வேறொரு தகுதி உள்ள நபர் இதே வழக்கை எடுக்கலாம்.

 

வழக்கு:

 

மே 2016-ல் அ.இ.அ.தி.மு.கவின் எஸ்.எம்.சீனிவேலு திருப்பரங்குன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொள்ளும் முன்பே இவர் இறந்தார்.  இதனையடுத்து தேர்தல் ஆணையம் நவம்பர் 2016-ல் இடைத்தேர்தல் நடத்தியது. இதில் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ், திமுக வேட்பாளர் டாக்டர் சரவணனை 42,670வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். இதனையடுத்து அவரது வெற்றியை எதிர்த்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை முடிந்த நிலையில் ஆகஸ்ட் 2, 2018-ல் எம்.எல்.ஏ. போஸ் இறந்தார். இவரது இறப்புச் சான்றிதழ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கைத் தொடர்ந்து எதிர்கொள்வதாக அதே தொகுதியிலிருந்து இருவர் மனு தாக்கல் செய்தனர்.

 

இந்த இருவர் வழக்கை எதிர்கொள்வதாக மனுதாக்கல் செய்ததையடுத்தே தேர்தல் வழக்கு தொடர்பான வாதங்கள் நிறைவு செய்யப்பட்டு தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.

 

தற்போதும், “இதே போன்ற நடைமுறைதான் வழக்கை வாபஸ் பெறும்போதும் கடைபிடிக்கப்பட வேண்டும். இதற்கு சிலகாலம் பிடிக்கும்.” என்கிறார் முன்னாள் நீதிபதி சந்துரு.

 

அவர் மேலும் கூறும்போது, உயர் நீதிமன்றம் வழக்கை வாபஸ் பெற அனுமதியளித்தாலும் கூட தேர்தல் ஆணையம் 90 நாட்கள் மேல்முறையீட்டுக்காகக் காத்திருக்க விரும்பும். அதன் பிறகே இடைத்தேர்தலை இந்தத் தொகுதிக்கு அறிவிக்கும்.

 

“ஆகவே தேர்தல் வழக்கை வாபஸ் பெறுவதால் பயன் ஏற்படாமல் போக வாய்ப்புள்ளது” என்கிறார் முன்னாள் நீதிபதி சந்துரு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x