Last Updated : 07 Mar, 2019 09:58 AM

 

Published : 07 Mar 2019 09:58 AM
Last Updated : 07 Mar 2019 09:58 AM

இயற்கை வேளாண் சான்று பெற ஆர்வம்!- இரு மாதங்களில் 2,000 ஏக்கர் நிலம் பதிவு

செயற்கை உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்தாமல் இயற்கை உரத்தைப்  பயன்படுத்தி விளைவிக்கப்படும் உணவுப் பொருட்களை வாங்க மக்கள் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர். இயற்கையான முறையில் சாகுபடி செய்யப்படும் உணவுப் பொருட்கள் சந்தையில் கூடுதல் விலை வைத்து விற்கப்படுகின்றன. ஆனால், இயற்கையானவை என்று கூறப்படும் உணவுப் பொருட்கள் உண்மையிலேயே இயற்கையான முறையில்  விளைவிக்கப்பட்டவைதானா என்ற சந்தேகம் பலருக்கு எழுகிறது. எனவேதான், உண்மைத் தன்மையை உறுதிப்படுத்த தமிழ்நாடு அங்கக

(ஆர்கானிக்) சான்றளிப்புத் துறை, விவசாயிகளுக்கு சான்று வழங்கி வருகிறது. இதன்மூலம் தமிழகம் முழுவதும் இதுவரை 500 விவசாயிகள் மற்றும் 5 விவசாயக் குழுக்கள் சான்று பெற்றுள்ளனர்.

இதில், 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கோவை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை  30,206 ஏக்கர் நிலம் பதிவு சான்று பெற பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, “இயற்கை வேளாண் பொருட்களுக்கு சான்று பெற்றதால் கூடுதல் வருவாய்: சாதிக்கும் கொங்கு மண்டல விவசாயிகள்” என்ற தலைப்பிலான கட்டுரை  கடந்த ஜனவரி 8-ம் தேதி `இந்து தமிழ்` நாளிதழின் ‘கொங்கே முழங்கு’ பக்கத்தில்  வெளியானது.

இந்நிலையில், தமிழக அரசின் விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்றளிப்புத் துறையின் கீழ் பதிவு செய்துள்ள இயற்கை விவசாயிகள், வணிகச் சான்று வேண்டி பதிவு செய்துள்ள நிறுவனங்கள் மற்றும் வேளாண் பொருட்கள் பதனிடும் நிறுவனங்களுக்கு அங்கக சான்றளிப்பு தரங்கள் குறித்த மாநில அளவிலான பயிற்சி முகாம், கோவையில் நடைபெற்றது. இதில், அங்கக சான்றளிப்புக்குப் புதிதாக பதிவு செய்துள்ள 100 விவசாயிகள் கலந்து கொண்டனர். இந்த பயிற்சி முகாமை, விதைச்சான்று, அங்ககச் சான்று இயக்குநர் அ.மதியழகன் தொடங்கிவைத்தார்.

விவசாயிகளுக்கு புரிதல் அவசியம்...

இந்தப் பயிற்சியில் `இயற்கை விவசாயம் ஒரு முன்னோட்டம்` என்ற தலைப்பில் விவசாயி எழிலன் பேசும்போது, “இயற்கை வேளாண் பொருட்களுக்கு வரவேற்பு அதிகரித்து வருவதை சாதகமாகப் பயன்படுத்தி சில கடைகளில் பெயரளவுக்கு மட்டும் ‘ஆர்கானிக்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தி பொருட்களை விற்கின்றனர். இதனால், உண்மையாக இயற்கை விவசாயம் செய்பவர்களுக்கு உரிய விலை கிடைப்பதில்லை. இதை முறைப்படுத்தவே சான்று அளிக்கப்படுகிறது.

நாம் பயன்படுத்தும் செயற்கை உரங்களில் பெரும்பாலானவை வெளிநாடுகளில் இருந்துதான் இறக்குமதி செய்யப்படுகின்றன. ரசாயன உரங்களால் மக்களின் உடல்நலமும் பாதிக்கப்படுகிறது. செயற்கை உரங்களைத் தவிர்த்து, இயற்கை வேளாண்மையைக் கடைப்பிடித்தால், மருத்துவச் செலவு குறைவதுடன், உர இறக்குமதி குறைந்து, பல கோடி ரூபாய் மீதமாகும்.

புதிதாக இயற்கை விவசாயம் மேற்கொள்ள விரும்புவோர், தங்கள் பகுதியில் உள்ள நிலம், தண்ணீருக்கு ஏற்பவும், காலத்துக்குத் தகுந்தவாறும் விவசாயம் செய்ய வேண்டும். இந்தப் புரிதலோடு பயிர் சாகுபடியில் ஈடுபட்டால், வெற்றி நிச்சயம்” என்றார்.

கொங்கு மண்டல விவசாயிகள் ஆர்வம்

“இயற்கை வேளாண் சான்று குறித்து ‘கொங்கே முழங்கு’ பகுதியில்  வெளியான செய்திக்குப் பிறகு, நிறைய விவசாயிகள் எவ்வாறு சான்று பெறுவது எனக் கேட்டறிந்தனர். இதையடுத்து,  கடந்த 2 மாதங்களில் கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், தருமபுரி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய கோவை மண்டலத்தில் இயற்கை வேளாண் சாகுபடிக்கு புதிதாக 2,000 ஏக்கர் நிலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் பதிவு செய்த  பெரும்பாலானோர், தென்னை, தேயிலை, காய்கறிகள், சிறுதானியங்களை விளைவிக்கும் விவசாயிகள்” என்றார் தமிழ்நாடு அங்கக சான்றளிப்புத் துறையின் உதவி இயக்குநர் பிரியதர்ஷினி. அவர் மேலும் கூறும்போது, “இயற்கையான முறையில் விளைவிக்கப்படும் மாம்பழம், தேயிலை, மஞ்சள்,  தேங்காய், இளநீர், முருங்கை இலை ஆகியவற்றுக்கு வெளிநாடுகளில் தேவை அதிகம் உள்ளது. உதாரணமாக, இங்குள்ள சந்தையில் குவிண்டால் ரூ.8 ஆயிரத்துக்கு விற்கப்படும் மஞ்சளை, இயற்கை வேளாண் சான்று பெற்று ஏற்றுமதி செய்தால் ரூ.18 ஆயிரம் வரை விற்க வாய்ப்புள்ளது. அவ்வாறு வெளிநாடுகளுக்கு வேளாண் பொருட்களை ஏற்றுமதி செய்ய `ஆர்கானிக்’ சான்று பெற்றிருப்பது கட்டாயமாகும்.

இயற்கை வேளாண்மையில் ஈடுபட்டுள்ளோர் சான்று பெற தனி நபராகவோ, குழுவாகவோ பதிவு செய்துகொள்ளலாம். இயற்கை வழி வேளாண்மை முறையில் சாகுபடி செய்திருந்தால் மட்டுமே, இந்த சான்று வழங்கப்படும். ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள், மரபணு மாற்றம் செய்யப்பட்ட மற்றும் ரசாயன நேர்த்தி செய்த விதைகளைக் கட்டாயம் பயன்படுத்தக் கூடாது.

இயற்கை உரம், தாவர பூச்சிக்கொல்லிகள் ஆகியவற்றை வெளி நிறுவனங்களிடமிருந்து வாங்கும்போது, அவை ரசாயன உரம், பூச்சிக்கொல்லி மற்றும் வேறு மாசுபடுத்தும் பொருட்கள் இல்லாதது என்பதற்கான உறுதிமொழியை, சம்பந்தப்பட்ட நிறுவனங் களிடமிருந்து எழுத்துப்பூர்வமாக வாங்க வேண்டும். இல்லையெனில், இயற்கை உரத்தை விவசாயிகளே உற்பத்தி செய்துகொள்ள வேண்டும்.

 சான்று பெற கட்டணம் எவ்வளவு?

விண்ணப்பப் படிவம், பண்ணையின் பொதுவிவரக் குறிப்பு, பண்ணையின் வரைபடம், மண் மற்றும் பாசன நீர் விவரம், ஆண்டுப் பயிர்த் திட்டம், நில ஆவணம் (சிட்டா நகல்), நிரந்தர கணக்கு எண் (PAN Number) உள்ளிட்ட விவரங்களுடன், உரிய கட்டணம் செலுத்தி சான்று பெற விண்ணப்பிக்கலாம். ஒரு விவசாயி எவ்வளவு ஏக்கர் நிலம் வைத்திருந்தாலும், முதல் முறை ரூ.3,200 கட்டணமாக செலுத்த வேண்டும். அதன்பிறகு, ஒவ்வோர் ஆண்டும் ரூ.2,450 கட்டணம் செலுத்த வேண்டும்.  இந்தக் கட்டணம் தனியார் சான்றளிப்பு நிறுவனங்களைக்காட்டிலும்  மிகவும் குறைவாகும். இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 0422-2982985, 9443448289 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x