Last Updated : 28 Mar, 2019 05:20 PM

 

Published : 28 Mar 2019 05:20 PM
Last Updated : 28 Mar 2019 05:20 PM

பாமகவும் விசிகவும் நேருக்கு நேர் மோதும் விழுப்புரம்: உதயசூரியனில் போட்டியிடும் வியூகம் வெல்லுமா?

பெருமளவு விவசாயப் பகுதிகளை கொண்ட இந்த தொகுதி நெல், கரும்பு சாகுபடி அதிகம் நடைபெறும் பகுதி. தென்பெண்ணை ஆற்றின் கரையோர பகுதிகள் இவை.

கரும்பு விவசாயம் நடைபெறுவதால், அதிகமான கரும்பு ஆலைகளும் இந்த பகுதியில் உள்ளன. இவற்றை தவிர பெரிய அளவில் தொழிற்சாலைகள் இங்கு இல்லை.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ராமசாமி படையாச்சி நீண்டகாலம் எம்.பி.யாக இருந்த தொகுதி இது. திண்டிவனம் மக்களவைத் தொகுதியாக இருந்த இந்த தொகுதி 2009ம்- ஆண்டுக்கு பிறகு விழுப்புரம் மக்களவைத் தொகுதியாக மாறியுள்ளது. அதுமட்டுமின்றி பொதுத்தொகுதியாக இருந்த இந்த தொகுதி தனித்தொகுதியாகவும் மாறியுள்ளது.

சமீபகாலமாக திமுக, அதிமுக நேரடியாக போட்டியிட்டு வருகின்றன. மதிமுக மூத்த தலைவர்களில் ஒருவராக விளங்கிய செஞ்சி ராமச்சந்திரன் இரண்டுமுறை எம்.பி.யாக இருந்த தொகுதி இது. பாமகவும் வென்ற தொகுதி இது.

 

2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நிலவரம்

 

கட்சிவேட்பாளர்வாக்குகள்
அதிமுக    ராஜேந்திரன்482704
திமுகமுத்தையன்289337
தேமுதிகஉமாசங்கர்209663
காங்கிரஸ்ராணி21461
சிபிஎம்ஆனந்தன்17408

 

விழுப்புரம் தொகுதியில் அதிமுகவைச் சேர்ந்த ராஜேந்திரன் எம்.பி.யாக உள்ளார். 2009-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும் இந்த தொகுதியில் அதிமுக சார்பில் ஆனந்தன் போட்டியிட்டு வென்றார்.

குறைவான வாக்குகளில் விடுதலை சிறுத்தைகள் வெற்றியை பறிகொடுத்தது. கடந்த 2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவும், திமுகவும் சமமான இடங்களை கைபற்றின.

   

2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல்

 

விழுப்புரம்சி.வி. சண்முகம், அதிமுக
வானூர் (தனி)சக்ரபாணி, அதிமுக
திண்டிவனம் (தனி)சீதாபதி, திமுக
திருக்கோயிலூர்பொன்முடி, திமுக
உளுந்தூர்பேட்டைகுமரகுரு, அதிமுக
விக்கரவாண்டிராதாமணி, திமுக

 

வரும் மக்களவைத் தேர்தலில் இந்த தொகுதியில் விசிகவும், பாமகவும் நேரடியாக மோதுகின்றன. பாமகவின் வடிவேல் ராவணனும், விசிகவின் ரவிக்குமாரும் போட்டியிடுகின்றனர். எனினும் ரவிக்குமார் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். பாமக மற்றும் விசிகவுக்கு தனிப்பட்ட வாக்கு வங்கி உள்ள தொகுதி இது.

பாமகவுக்கு அதிமுக வாக்குகளும், விசிகவுக்கு திமுக வாக்குகளும் பெரும் பலமாக உள்ளது. இருகூட்டணியிலும் மற்ற கட்சிகளுக்கு பெரிய அளவில் வாக்கு வங்கி இல்லை. பாமகவுக்கு எதிராக பொதுவான வாக்குகளை திரட்டும் நோக்குடன் விசிக இங்கு உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதாக கூறப்படுகிறது.

அதேசமயம் விசிகவுக்கு எதிராக பலதரப்பட்ட வாக்குகளை திரட்டும் விதத்தில் பாமகவும் வியூகம் வகுத்துள்ளதாக கூறப்படுகிறது. பாமக தான் போட்டியிடும் மற்ற 6 தொகுதிகளிலும் திமுகவுடன் மோதும் நிலையில் இந்த ஒரே தொகுதியில் மட்டுமே விசிகவுடன் மோதுகிறது. பாமக மற்றும் விசிகவின் வியூகங்களால் விழுப்புரம் தேர்தல் களத்தில் பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x