Published : 20 Mar 2019 08:25 PM
Last Updated : 20 Mar 2019 08:25 PM

நீதிபதி வீட்டின் பாதுகாப்பு காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை முயற்சி: காக்கி உடையை கழற்றாமல் உடலை புதைக்க வேண்டுகோள்

அடையாறில் நீதிபதியின் வீட்டில் பாதுகாப்பு பணிக்கு நின்றிருந்த போலீஸ்காரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்று உயிருக்கு போராடி வருகிறார். மரணத்திற்கு பின் எரித்தாலோ, புதைத்தாலோ காக்கி உடையை கழற்றக்கூடாது என்று கடிதம் எழுதிவைத்தவர் பெற்றோரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

சென்னை அடையாறு கிரீன்வேஸ் சாலையில் அமைச்சர்கள், நீதிபதிகள் குடியிருப்பு உள்ளது. இங்கு உயர் நீதிமன்ற நீதிபதி முரளிதரன் வீடும் இங்கு உள்ளது. இவர் தற்போது மணிப்பூருக்கு மாறுதலாகி விட்டார். ஆனால் அவரது குடியிருப்பு இங்கு உள்ளது.

அவரது வீட்டின் பாதுகாப்பு பணியில் ஆயுதப்படையை சேர்ந்த காவலர் சரவணன் ஈடுபட்டிருந்தார்.  கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த சரவணன் சென்னை ஆயுதப்படை காவலராக பணியாற்றுகிறார். நேற்று காலையில் இருந்தே சரவணன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.

இந்நிலையில், மாலையில் நீதிபதி வீட்டிலேயே இருக்கும் காவலர்களுக்கான அறைக்கு சென்ற சரவணன் திடீரென தான் வைத்திருந்த துப்பாக்கியை வைத்து நெற்றியில் சுட்டுக் கொண்டார்.

துப்பாக்கிச் வெடித்தச் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தவர்கள் ஓடிச்சென்று பார்த்தபோது, சரவணன் ரத்த வெள்ளத்தில் அவர் உயிருக்கு போராடியப்படி கிடந்தார். உடனே அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் ராயப்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ராஜுவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

சரவணன் சுயநினைவை இழந்த நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறார். சரவணன் தற்கொலை முயற்சி குறித்து அபிராமபுரம் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது சரவணன் எழுதிய ஒரு கடிதத்தை கைப்பற்றினர்.

அதில், ”எனக்கு வாழப்பிடிக்கவில் சாகப்போகிறேன் எனது தற்கொலைக்கு யாரும் காரணமில்லை. எனது அம்மா, அப்பாவை நல்லப்படியா பார்த்துக்கொள்ளுங்கள். நான் இறந்த பின்னர் வரும் இன்சூரன்ஸ் தொகையை எனது பெற்றோரிடம் கொடுத்து விடுங்கள்.

என்னை புதைத்தாலோ அல்லது எரித்தாலோ எனது காக்கி கழற்றாதீர்கள், இது எனது கடைசி ஆசை. அம்மா, அப்பா என்னை மன்னித்து விடுங்கள்” என எழுதியுள்ளார்.  போலீஸ் பணியை இந்த அளவுக்கு நேசிக்கும் நபர் எதனால் தற்கொலை செய்ய முடிவு எடுத்தார் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x