Published : 10 Sep 2014 11:48 AM
Last Updated : 10 Sep 2014 11:48 AM

காஷ்மீர் வெள்ள நிவாரணம்: விஜயகாந்த் ரூ.10 லட்சம் நிதியுதவி

ஜம்மு - காஷ்மீர் பேரழிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் பிரதமரின் தேசிய பேரிடர் நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் வழங்குவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த அறுபது ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு திடீர் மழை பொழிவால் வெள்ளப் பெருக்கும், நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. அம்மாநிலத்தின் கிராமங்கள் மட்டுமல்லாமல், நகரங்களிலும் வெள்ளம் சூழ்ந்து பெருத்த உயிர் சேதங்களும், பொருள் சேதங்களும் ஏற்பட்டு அம்மாநிலமே ஸ்தம்பித்துள்ளது.

உண்ண உணவின்றி, உடுக்க உடையின்றி, இருக்க இடமின்றி தங்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடுமோ என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர். இதை மத்திய அரசு தேசிய பேரிடராக அறிவித்து முப்படைகளையும் கொண்டு மீட்புபணிகளை முடுக்கிவிட்டுள்ளது. இந்த மழை வெள்ளம் மிகப்பெரிய பேரழிவை ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஏற்படுத்தி உள்ளது.

வெள்ள பாதிப்பினாலும், நிலச்சரிவாலும் தீவுகளுக்குள் சிக்கிய மனிதர்கள் போல் அம்மாநிலத்தில் இலட்சக்கணக்கான மக்கள் சிக்கி தவிக்கின்றனர். அவர்களை மீட்பதற்கு அந்த மாநில அரசும், மத்திய அரசும் போர்க்கால நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளனர்.

இந்த இயற்கை சீற்ற பேரழிவில் இறந்தவர்களுக்கும், அவர்களின் குடும்பத்தார்களுக்கும் தே.மு.தி.க. சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

காஷ்மீர், நமது நாட்டின் முக்கிய எல்லை பகுதியாகவும், எப்போதும் விழிப்புடன் பாதுகாப்புபணியை மேற்கொள்ளும் மாநிலமாகவும் உள்ளது. அண்டைநாடுகளிடம் இருந்து இந்தியாவை பாதுகாக்கும் மாபெரும் பணியை அங்கே உள்ள ராணுவ வீரர்கள் செய்துவருகிறார்கள்.

இந்த பேரழிவில் அவர்களும் பாதிக்கப்பட்டு, இந்திய நாட்டின் பாதுகாப்பிற்கே இயற்கை பேரழிவு சவாலாக அமைந்துள்ளது. எனவே பணக்காரர்களும், முதலாளிகளும், வியாபாரிகளும், இளைஞர்களும் மட்டும் அல்ல, தேசநலனில் அக்கறை கொண்டுள்ள அனைவருமே பாதிக்கப்பட்ட ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு தங்களால் இயன்ற நிதிஉதவியோ, பொருள் உதவியோ, செய்திட முன்வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இயற்கை பேரழிவில் இருந்து பாதிக்கப்பட்ட மக்களை காத்திடவும், அவர்களுடைய வாழ்வாதாரத்தை பாதுகாத்திடவும், அவர்களுக்கு உதவுகின்ற வகையில் எனது சொந்த பணத்தில் இருந்து, பாரத பிரதமரின் தேசிய பேரிடர் நிவாரண நிதிக்கு ரூபாய் 10 லட்சம் நிதியாக வழங்குகிறேன்" இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x