Published : 12 Mar 2019 01:14 PM
Last Updated : 12 Mar 2019 01:14 PM

அதிகாரம் எந்த அளவுக்குக் கேவலத்தின் உச்சியை எட்டும் என்பதற்கு பொள்ளாச்சி பாலியல் சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு: கி.வீரமணி

அதிகாரம் எந்த அளவுக்குக் கேவலத்தின் உச்சியை எட்டும் என்பதற்கு பொள்ளாச்சி பாலியல் சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு என, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கி.வீரமணி இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "பொள்ளாச்சியில் கடந்த ஆறு ஆண்டுகாலமாக பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் பெண்களும், பணியாற்றும் பெண்களும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர் என்ற செய்தி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. வளர்ந்த ஒரு சமுதாயத்தில் நாம் இருக்கிறோமா என்ற கேள்வியை எழுப்பி, வெட்கமடையவும் செய்கிறது.

இதன் பின்னணியில் அரசியல்வாதிகள் இருக்கிறார்கள் என்று எண்ணும்போது, அதிகாரம் எந்த அளவுக்குக் கேவலத்தின் உச்சியையும் எட்டும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாக இச்சம்பவம் அமைந்துள்ளது.

இந்தக் கேவலமான குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனைக்கு ஆளாக்கவில்லை என்றால், பெண்களுக்கு இந்த நாட்டில் பாதுகாப்பு என்பதே இல்லையோ என்ற பேரச்சத்தைத் தான் ஏற்படுத்தும். உலக நாடுகள் மத்தியில் நாம் தலைக்குனியும் அவலத்தை உண்டாக்கும். திராவிடர் கழக மகளிரணி, மகளிர்ப் பாசறை சார்பில் சென்னையில் வரும் சனிக்கிழமை மார்ச் 16 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

கட்சிக் கண்ணோட்டம், அரசியல் நிறம் எவையும் உண்மைகளை வெளியே கொண்டுவருவதற்குக் குறுக்கே நின்று, குற்றவாளிகளுக்குக் கடும் தண்டனை அளிப்பதில் முட்டுக்கட்டை போட்டுவிடக் கூடாது.

மணியம்மையார் நூற்றாண்டு ஆண்டான இந்தாண்டில், பெண்கள் மத்தியில் இந்த வகையில் விழிப்புணர்வுப் பணி வீறுகொண்டு எழும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

வழக்கு என்ற பெயரால் பல யுக்திகளைக் கையாண்டு காலத்தை நீட்டிக் கொண்டு போகாமல், நிர்பயா வழக்கில் நடந்ததுபோல, வெகுவிரைவில் குற்றவாளிகள் தண்டிக்கப்படட்டும்.

பெண்களை மையப்படுத்தி விளம்பரங்கள், கலை என்ற பெயரால் நடக்கும் சீர்கேடுகள், ஆபாசங்கள், இருபொருள் வசனங்கள், ஊடகங்களின் பொறுப்பற்ற தன்மைகள் மறுபரிசீலனைக்கும், நடவடிக்கைகளுக்கும் உட்படுத்தப்படவேண்டும். காவல்துறையில் இதற்கென்று ஒரு தனிப் பிரிவையும் ஏற்படுத்தி, பெண்கள் மத்தியில் ஏற்படும் அச்சத்தைப் போக்கிட வேண்டும்" என கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x