Published : 11 Mar 2019 09:53 AM
Last Updated : 11 Mar 2019 09:53 AM

வணிக பேரம் போன்ற பாஜக கூட்டணி அணுகுமுறை: தொல்.திருமாவளவன்

தமிழகத்தில் பாஜகவின் அரசியல் கூட்டணி அணுகுமுறை வணிக பேரம் போல நடக்கிறது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். ‘இந்து தமிழ்’ நாளிதழுக்கு திருமாவளவன் அளித்த சிறப்பு பேட்டி:

திமுக கூட்டணியில் நீங்கள் கேட்ட தொகுதிகள் கிடைத்ததா?

3 தொகுதிகள் கேட்டோம். 2 தொகுதிகள் கிடைத்துள்ளன.

உதயசூரியன் சின்னத்தில் விசிக போட்டியிடுகிறதா?

திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட சின்னம் இருக்கிறது. எனவே, மற்ற கூட்டணி கட்சிகள் வெற்றி பெறும் வகையில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுமாறு திமுக வலியுறுத்தியுள்ளது. கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவெடுப்போம்.

திமுக, அதிமுக ஆகிய இரு கூட்டணிகளிலும் இருந்தவர் நீங்கள். ஆனாலும், திமுகவுடன் அதிக நெருக்கம் காட்டுவது ஏன்?

சமூகநீதி, மாநில உரிமைகள், இலங்கைத் தமிழர் பிரச்சினை உள்ளிட்டவற்றில் கொள்கை ரீதியாக இணங்கிச் செல்லும் கட்சியாக திமுக இருக்கிறது. அதிமுகவோ, விடுதலைப் புலிகள் எதிர்ப்பில் தீவிரமான கட்சி. எங்களைப் போல பெரியார், அம்பேத்கர் கொள்கைகளில் திமுகவுக்கும் ஈடுபாடு இருக்கிறது. இது கொள்கை ரீதியான கூட்டணி.

விசிகவின் 19 ஆண்டுகால தேர்தல் அரசியலை எப்படி பார்க்கிறீர்கள்?

ஒரு காலத்தில் கட்சிகளும், தலைவர்களும் லஞ்சம், ஊழல் போன்ற குற்றச்சாட்டுக்கு ஆளானார்கள். இப்போது மக்களையே ஊழல்மயமாக்கும் நிலையாக மாறிவருவது வருத்தம் அளிக்கிறது. கொள்கை சார்ந்த மதிப்பீடுகள், அரசியலில் தூய்மை, நேர்மை போன்ற அணுகுமுறைக்கான மதிப்பீடுகள் குறைந்து வருகிறது. தமிழகத்தில் பாஜகவின் அரசியல் கூட்டணி அணுகுமுறை வணிக பேரம் போல நடக்கிறது. அவர்கள்கொள்கையை முன்னிறுத்தாமல், அதிகாரத்தை பகிர்ந்துகொள்ள வணிக பேரம் நடத்துகின்றனர்.

இந்த நிலை எப்படி மாறும்?

தற்போதைய தேர்தல் முறைதான் இதற்கு முக்கிய காரணம். தேர்தல் முடிவுக்கு பிறகு, வெற்றி பெற்றவருக்கு எதிராக விழுந்த வாக்குகள் மதிப்பில்லாமல் போய்விடுகின்றன. வெறும் 35 சதவீத வாக்குகள் பெறுபவர்களே வெற்றிபெறுகின்றனர். காட்டுமன்னார்குடி தொகுதியில் 87 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தேன்.

வெற்றி பெற்றவருக்கு இணையாக நான் பெற்ற வாக்குகள் வீணாகிவிட்டன. இந்த தேர்தல் முறையை மாற்றிவிட்டு, மக்கள்தொகை அடிப்படையில் விகிதாச்சார பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும். கட்சிகளின் வாக்கு சதவீதத்தின்படி உறுப்பினர்களை தேர்வு செய்யும் முறையை கொண்டுவரலாம்.

பொருளாதாரத்தில் நலிந்த பொதுப்பிரிவினருக்கு வழங்கப்படும் 10 சதவீத  இடஒதுக்கீடு, ஏற்கெனவே உள்ள இடஒதுக்கீட்டை பாதிக்காது என்று அறிவித்தும், எதிர்ப்பது ஏன்?

இடஒதுக்கீடே கூடாது என்றவர்கள் தற்போது பொருளாதார அளவு கோல் கொண்டு 10 சதவீத இடஒதுக்கீடு கொண்டு வந்துள்ளனர். இது சமூகநீதி கோட்பாட்டை காலப்போக்கில் அழித்துவிடும். எல்லா சாதிகளிலும் ஏழைகளுக்கு இடஒதுக்கீடு அளித்தால் போதும் என்ற நிலை உருவாகிவிடும்.

இந்த தேர்தல் தமிழகத்தில் எது போன்ற தாக்கத்தை ஏற்படுத்தும்?

முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா போன்ற பெரிய தலைவர்கள் இல்லாத தமிழகத்தில் வெற்றிடத்தை யார் நிரப்புவது என்பதற்கு இந்த தேர்தல் முடிவு சொல்லும். திராவிடக் கட்சிகளின் சமூகநீதி கொள்கைகளை திமுக தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. இந்த கூட்டணியை மக்கள் அங்கீகரிப்பார்கள்.

மத்திய பாஜக ஆட்சியில் நீங்கள் ஆதரிப்பது, எதிர்ப்பது எதை?

வரவேற்கக்கூடிய அளவில் பெரிய விஷயங்கள் இல்லை. வலதுசாரி பயங்கரவாதம் நன்கு வெளிப்படுகிறது. மதவாதம் தலைவிரித்து ஆடுகிறது. சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. ஆணவக் கொலை அதிகரித்துள்ளது. திடீரென எல்லையோர பதற்றம் ஏற்படுகிறது. மக்களை பிளவுபடுத்தி அரசியலில் ஆதாயம் பார்க்கின்றனர்.

காங்கிரஸ் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு எப்படி?

கருப்பு பணம் மீட்பு, விவசாயிகள் பிரச்சினை, ஒரு கோடி வேலைவாய்ப்பு போன்றவை தொடர்பான வாக்குறுதிகளை பாஜக நிறைவேற்றவில்லை. பண மதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி வரி விதிப்புகளால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், நாடு முழுவதும் மோடிக்கு எதிரான அலை இருக்கிறது. இதனால், காங்கிரஸ் அதிக அளவில் வெற்றி பெறும்.

விசிகவுக்கு வாக்கு சதவீதம் எவ்வளவு இருக்கிறது?

போட்டியிடும் தொகுதிகளில் பெறும் வாக்குகள் மட்டுமே கணக்கிடப்படுகின்றன. நாங்கள் போட்டியிடும் தொகுதிகள் குறைவு. நாங்கள் போட்டியிடாத தொகுதிகளிலும் எங்களுக்கு கணிசமான வாக்குவங்கி இருக்கிறது. அது தோழமை கட்சிகளுக்கு சென்றுவிடுகிறது. நாங்கள் தனித்துப் போட்டியிடும்போது, உண்மையான வாக்கு சதவீதம் தெரியவரும்.

வருங்காலத்தில் தனித்துப் போட்டியிட வாய்ப்பு உண்டா?

அதற்கான காலம் கனியவில்லை. சூழலும் அமையவில்லை.

முதல்வராக ஆகவிடாமல் தலித் தலைவர்கள் ஒடுக்கப்படுவதாக கர்நாடக துணை முதல்வர் பரமேஸ்வர் கூறியது பற்றி.

இதை ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டாக பார்க்க முடியாது. அதற்கான சூழல் இந்த சமூகத்தில் இருக்கத்தான் செய்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x