Published : 12 Mar 2019 12:59 PM
Last Updated : 12 Mar 2019 12:59 PM

தமிழகத்தில் 3 தொகுகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படாதது ஆழ்ந்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது: இரா.முத்தரசன்

ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் மற்றும் அரவக்குறிச்சி சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவை ஏப்ரல் 18-ம் தேதியில் நடத்துவதற்கான அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும் என, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக இரா.முத்தரசன் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "நாடாளுமன்றத்திற்கான பொதுத் தேர்தல் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஏப்ரல் 11 முதல் மே 19 வரையிலுமான காலத்தில் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெறும் இரண்டாம் கட்ட வாக்குப் பதிவில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் காலியாக உள்ள 21 தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அரசியலமைப்புச் சட்டப்படி அதிகாரம் பெற்று, சுயேச்சையாக இயங்கி வரும் இந்திய தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை மீது அவ்வப்போது சந்தேக நிழல் படிவது அதன் நம்பகத்தன்மைக்கு குந்தகம் ஏற்படுத்தும் என்பதை தேர்தல் ஆணையர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டில் காலியாகவுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த எந்த நீதிமன்றத்திலும் தடையேதும் இல்லாத நிலையில், மூன்று தொகுதிகளின் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்காமல் நிறுத்தி வைத்திருக்கும் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை ஆழ்ந்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடந்த நேரத்தில் மழையை காரணம் காட்டி தமிழ்நாட்டில் இடைத்தேர்தல் இல்லை என்று தேர்தல் ஆணையம் அறிவித்ததையும்,  பின்னர் 'கஜா' புயல் பேரிடர் பேரழிவால் பாதிக்கப்பட்டிருந்த திருவாரூர் சட்டப்பேரவை தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு பொதுமக்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு காரணமாக கைவிடப்பட்டது என்பதையும் தேர்தல் ஆணையம் நினைவில் கொள்ள வேண்டும்.

மக்கள் பிரதிநிதித்துவத்தின் உயிராதாரமான வாக்களிக்கும் உரிமையைப் பாதுகாத்து, இடைத்தேர்தல்களை சட்ட வரம்புக்கு உட்பட்ட காலத்தில் நடத்த வேண்டியது இந்திய தேர்தல் ஆணையத்தின் கடமைப் பொறுப்பாகும்.

இதன்படி தமிழ்நாட்டில் ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் மற்றும் அரவக்குறிச்சி சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவை ஏப்ரல் 18 ஆம் தேதியில் நடத்துவதற்கான அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும்" என, இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x