Published : 02 Mar 2019 07:27 PM
Last Updated : 02 Mar 2019 07:27 PM

‘மறைந்த தலைவர்களுக்கு சிலை செய்வது எப்படி’ எங்களிடம் கற்றுக்கொள்ளுங்கள்: அதிமுகவினரை கிண்டலடித்த உதயநிதி

மறைந்த தலைவர்களுக்கு சிலை எப்படி செய்ய வேண்டும் என எங்களிடம் கற்றுக்கொள்ளுங்கள் என அதிமுகவினரை கிண்டலடித்தார் உதயநிதி ஸ்டாலின்.

கடந்த ஆண்டு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அதிமுக தலைமை அலுவலகத்தில் சிலை திறக்கப்பட்டது. சிலையைப் பார்த்தவர்கள் அது ஜெயலலிதா சிலைப்போல் இல்லை என்கிற விமர்சனம் எழுந்தது. சிலைப்பற்றிய விமர்சனத்தை அடுத்து அது மாற்றப்பட்டது.

இதை நேற்று நடந்த கருணாநிதி சிலை திறப்பு விழாவில் உதயநிதி ஸ்டாலின் இதனைக் குறிப்பிட்டு கிண்டலடித்தார். நேற்று சைதாப்பேட்டையில் நடந்த கருணாநிதி சிலை திறப்பு விழாவில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:

“மா.சுப்ரமணியம் அவர்கள் என்னை வைத்து நடத்தாத விழாவே கிடையாது. இன்று மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு சிலை திறக்கும் விழா நடக்கிறது. இந்த சிலைத்திறப்பு விழா இன்று நடக்கிறது. இந்த சிலையை திறக்க எனக்கு தகுதி இருக்கிறதா? என எண்ணிப் பார்க்கிறேன்.

கண்டிப்பாக  கிடையாது என நம்புகிறேன். ஆனால் உங்களில் ஒருவனாக இந்த விழாவில் நீங்கள் இந்த சிலையை திறந்தால் எப்படியோ அப்படி கலந்துக்கொள்கிறேன். தலைவரின் சிலையைப் பார்க்கும்போது ஒரே ஒரு விஷயம்தான் ஞாபகத்துக்கு வருகிறது.

அதிமுக நண்பர்களுக்கு நான் சொல்வது ஒரு மறைந்த தலைவருக்கு, ஒரு முதல்வருக்கு எப்படி சிலை செய்யவேண்டும் என எங்களிடம் வந்து கொஞ்சம் பார்த்துவிட்டுச் செல்லுங்கள். நான் கிண்டலுக்காக சொல்லவில்லை. உங்களுக்கே தெரியும். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அவர்கள் கட்சி அலுவலகத்தில் அவர்கள் சிலை என்று சொல்லி சிலை வைத்தார்கள்.

அந்த சிலைக்கு ஒரு சிறப்பு அதை யார் என்று நினைத்துப் பார்க்கிறீர்களோ அப்படியே இருக்கும் அந்த சிலை அவர்களைப்போல் இருக்கும். ரெண்டு நாள் கழித்து அந்த சிலை மறைந்த நடிகை காந்திமதி சிலையை வைத்துள்ளதாக சொன்னார்கள், அதன் பின்னர் எடப்பாடி மனைவியின் சிலையை வைத்திருக்கிறார்கள் என்று சொன்னாங்க.

அதன்பின்னர் சிலையை எடுத்துவிட்டு வேறு சிலையை வைத்தார்கள். எதற்காக இதைச் சொல்கிறேன் என்றால் கடமைக்கு சிலை வைத்தால் அப்படித்தான் இருக்கும். உணர்வுப்பூர்வமாக வைத்தால் அது சரியாக இருக்கும்.

அடுத்து ஜூன் 3 தலைவரின் பிறந்தநாளுக்குள் 30 இடங்களில் கட்சி அலுவலகம் எங்குள்ளதோ அங்கெல்லாம் வைக்கப்போகிறோம் என்று சொன்னார். அவருக்கு பாராட்டுகள். 30 என்ன தமிழகத்தில் ஒவ்வொரு மூலை முடுக்கெல்லாம் தலைவருக்கு சிலை வைக்கலாம் என்று சொன்னேன்.

மாநகராட்சி அனுமதி கிடைப்பதில் சிக்கல் உள்ளது என்று சொன்னார். நான் சொன்னேன் விரைவில் ஆட்சி மாற்றம் வர உள்ளது  நம் தலைவர் முதல்வராக அமரப்போகிறார் அப்போது அது நடக்கும் என்று சொன்னேன். விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வர உள்ளது. தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்தை தர தயாராக உள்ளனர்.” இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x