Last Updated : 26 Mar, 2019 08:30 AM

 

Published : 26 Mar 2019 08:30 AM
Last Updated : 26 Mar 2019 08:30 AM

நெல்லை தொகுதி அமமுக வேட்பாளர் மாற்றம் ஏன்?- புதிய வேட்பாளராக மைக்கேல் ராயப்பன் அறிவிப்பு

திருநெல்வேலி மக்களவைத் தொகுதி அமமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த ஆர். ஞான அருள்மணி திடீரென மாற்றப்பட்டுள்ளார்.

அவருக்கு பதிலாக கட்சியின்அம்மா பேரவை இணைச் செயலாளரும், ராதாபுரம் தொகுதி முன்னாள் எம்எல்ஏவுமான மைக்கேல் ராயப்பன் புதியவேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட அமமுக சிறுபான்மையினர் அணிசெயலாளராக பொறுப்பு வகிக்கும்ஞான அருள்மணி அக்கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, அறிமுக கூட்டங்களும் நடத்தப்பட்டன. தேர்தல் பணிகளில் அவரது ஆதரவாளர்களும், கட்சியினரும் ஈடுபட்டிருந்தனர். வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று(26-ம் தேதி) கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திடீரென்று அவரை மாற்றிவிட்டு புதிய வேட்பாளரை கட்சி தலைமை அறிவித்திருக்கிறது. இதற்கு பல்வேறு காரணங்களை அக்கட்சி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

இரட்டை குடியுரிமை

தொழிலதிபரான ஞான அருள்மணி இலங்கையிலும் பல்வேறுதொழில்களில் ஈடுபட்டு வருகிறார். இதனால் அந்நாட்டு குடியுரிமையையும் பெற்றுள்ளார். ஒருவர் இரட்டை குடியுரிமைபெற்றிருந்தால் மக்களவைத் தேர்தலில் அவர்போட்டியிட முடியாது. வேட்புமனு பரிசீலனையின்போது அதிமுக உள்ளிட்ட எதிர்தரப்பு கட்சி வேட்பாளர்கள் இது தொடர்பாக பிரச்சினையை கிளப்பி, ஞான அருள்மணியின் வேட்புமனுவை நிராகரிக்கச் செய்ய வாய்ப்புள்ளது. மேலும், வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னரும் ஞான அருள்மணி தேர்தல் பணிகளில் சுறுசுறுப்பு காட்டவில்லை என்றும் புகார்கள் எழுந்தன.

இது குறித்து கட்சி தலைமைக்குநிர்வாகிகள் தெரியப்படுத்தியிருந்தோம். இதை தொடர்ந்தே வேட்பாளர் மாற்றப்பட்டுள்ளார் என்று அக்கட்சி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். திரைப்பட தயாரிப்பாளரான மைக்கேல் ராயப்பன் , திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பேரூராட்சிக்கு உட்பட்ட நந்தன்குளம் கிராமத்தை சேர்ந்தவர். நாடோடிகள், கோரிப்பாளையம், சிந்து சமவெளி உள்ளிட்ட பல்வேறுதிரைப்படங்களை, தனது குளோபல் நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார்.

2009-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் தேமுதிக வேட்பாளராக போட்டியிட்டு 94,562 வாக்குகளை பெற்றார். 2011 சட்டப் பேரவை தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் தேமுதிக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றிபெற்றார். பின்னர் தேமுதிகவில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அதிமுகவில் இணைந்தார். அதிமுகவிலிருந்து அமமுக பிரிந்தபோது அதில் இணைந்தார். இவரது மனைவி கேத்தரின். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x