Last Updated : 22 Mar, 2019 05:42 AM

 

Published : 22 Mar 2019 05:42 AM
Last Updated : 22 Mar 2019 05:42 AM

நாளிதழ் அலுவலக எரிப்பு தொடர்பான சிபிஐ மேல்முறையீட்டு வழக்கில் மதுரை உயர் நீதிமன்ற கிளை தீர்ப்பு; அட்டாக் பாண்டி உட்பட 9 பேருக்கு 3 ஆயுள் தண்டனை: பாதிக்கப்பட்டோரின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு தர அரசுக்கு உத்தரவு

மதுரையில் நாளிதழ் அலுவலகத் தில் பெட்ரோல் குண்டு வீசி 3 பேர் கொல்லப்பட்ட வழக்கில் அட்டாக் பாண்டி உட்பட 9 பேருக்கு தலா 3 ஆயுள் தண்டனை வழங்கி உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பளித் தது. சம்பவம் நடந்தபோது உரிய பாதுகாப்பு வழங்கத் தவறிய டிஎஸ்பி ராஜாராம் குற்றவாளி என்றும், அவருக்கான தண்டனை மார்ச் 25-ல் அறிவிக்கப்படும் எனவும் நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.

திமுகவில் மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி ஆகியோரில் யாருக்கு செல்வாக்கு அதிகம் என்பது தொடர் பாக நாளிதழ் ஒன்றில் கடந்த 2007-ல் மாவட்டம் வாரியாக கருத்துக்கணிப்பு வெளியானது. மதுரை மாவட்ட கருத்துக்கணிப்பில் மாவட்டத்தில் ஸ்டாலினுக்கு அதிக ஆதரவு இருப்பதாகத் தெரிவிக்கப் பட்டிருந்தது.

இதையடுத்து அழகிரி ஆதர வாளர்கள் கருத்துக்கணிப்பு வெளி யிட்ட நாளிதழின் மதுரை அலுவல கம் முன் 9.5.2007-ல் அடுத்தடுத்து போராட்டம் நடத்தினர். அப்போது நாளிதழ் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இதில் ஊழியர்கள் கோபிநாத், வினோத், காவலாளி முத்துராமலிங்கம் ஆகி யோர் உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக மு.க.அழகிரியின் ஆதரவாளர் அட்டாக் பாண்டி, அப்போதைய ஊமச்சிக்குளம் டிஎஸ்பியாக இருந்த ராஜாராம் உட்பட 17 பேர் மீது ஒத்தக்கடை போலீஸார் வழக் குப் பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கை மதுரை சிபிஐ நீதிமன்றம் விசாரித்து, ‘சாட்சிகள் அனைவரும் பிறழ்சாட்சியாக மாறி விட்டனர். எதிரிகள் மீதான குற்றச் சாட்டுகள் ஆதாரங்களுடன் நிரூபிக் கப்படவில்லை’ என்று கூறி, அட்டாக் பாண்டி உட்பட 17 பேரையும் விடுதலை செய்து 9.12.2009-ல் தீர்ப்பளித்தது.

உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு

இந்த உத்தரவை ரத்து செய்து அனைவருக்கும் தண்டனை வழங் கக் கோரி சிபிஐ சார்பில் 2011-ல் உயர் நீதிமன்றக் கிளையில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப் பட்டது.

சிபிஐ நீதிமன்றத் தீர்ப்பை மறுசீராய்வு செய்யக்கோரி, பெட் ரோல் குண்டு வீச்சில் கொல்லப்பட்ட வினோத்தின் தாயார் பூங்கொடி உயர் நீதிமன்றக் கிளையில் மனுத் தாக்கல் செய்தார்.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி அமர்வு நேற்று 137 பக்கங்கள் கொண்ட தீர்ப்பை வாசித்தனர்.

அதில் கூறியிருப்பதாவது:

மதுரையிலுள்ள நாளிதழ் அலு வலகத்தில் பெட்ரோல் குண்டு வீசி 3 பேர் கொல்லப்பட்ட சம்பவத் தில் சாட்சிகள் பிறழ் சாட்சியாக மாறியபோதும், சம்பவத்தில் தொடர்புடைய வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்களைக் கவ னிக்க கீழமை நீதிமன்றம் தவறிவிட் டது. அந்த ஆதாரங்களைப் பார்க் கையில் அட்டாக் பாண்டி உள்ளிட்ட 9 பேருக்கு குற்றத்தில் தொடர்பு இருப்பது சந்தேகத்துக்கு இடமில் லாமல் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இதனால் அட்டாக் பாண்டி, பிரபு என்ற ஆரோக்கியபிரபு, விஜய பாண்டி, கந்தசாமி, ராமையா பாண்டியன், சுதாகர், திருமுருகன், ரூபன், மாலிக்பாட்சா ஆகியோரை விடுதலை செய்து கீழமை நீதிமன் றம் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.

அட்டாக் பாண்டி உட்பட 9 பேருக்கும் தலா 3 ஆயுள் தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது. இவர்கள் மீதான இபிகோ 449, 436 உடன் இணைந்த 149, வெடி மருந்துச் சட்டம் பிரிவு 4, பிரிவு 5 மற்றும் பொது சொத்துகள் சேதம் தடுப்புச் சட்டப் பிரிவுகளில் ஒவ்வொரு பிரிவுகளுக்கும் தலா 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை யும், தலா ரூ.5 ஆயிரம் அபராத மும் விதிக்கப்படுகிறது. இந்தத் தண்டனையை 9 பேரும் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும்.

தண்டனை விதிக்கப்பட்டவர் களில் அட்டாக் பாண்டி (பொட்டு சுரேஷ் வழக்கில் பாளை சிறையில் உள்ளார்) தவிர்த்து எஞ்சிய 8 பேரையும் உடனடியாக கைது செய்து போலீஸார் சிறையில் அடைக்க வேண்டும்.

இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற எதிர் மனுதாரர்களில் சரவண முத்து இறந்துவிட்டார். எஞ்சிய 6 பேரை விடுதலை செய்து சிபிஐ நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு உறுதி செய்யப்படுகிறது.

இந்தச் சம்பவத்தில் வினோத், கோபிநாத், முத்துராமலிங்கம் ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களின் உயிரைப் பாதுகாக்க போலீஸார் தவறிவிட்டனர். இதற் குப் பொறுப்பேற்று கொலையான 3 பேரின் குடும்பத்துக்கு மூன்று மாதங்களில் தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.

சிபிஐ மேல்முறையீடு மனு மீது உத்தரவு பிறப்பிக்கப்பட்டி ருப்பதால் பூங்கொடி தாக்கல் செய்த மனு மீது தனியாக உத்தரவு பிறப்பிக்க வேண்டியதில்லை.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

இந்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள அட்டாக் பாண்டி, கூட்டாளிகள் பிரபு, விஜயபாண்டி, திருமுருகன் ஆகியோருக்கு பொட்டு சுரேஷ் கொலையில் தொடர்புள்ளது குறிப்பிடத்தக்கது.

முடிவுக்கு வந்த 8 ஆண்டு வழக்கு

மதுரையில் நாளிதழ் அலுவலக எரிப்பு வழக்கில் சிபிஐ நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து சிபிஐ 2011-ல் உயர் நீதிமன்றக் கிளையில் மேல்முறையீடு செய்தது. இந்த மனு கடந்த 8 ஆண்டுகளில் 6 அமர்வுகளில் விசாரிக்கப்பட்டும் முடிவடையாமல் இருந்தது.

குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் வழக்கை இழுத்தடிக்க ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு காரணங்களாகச் சொல்லி ஒத்திவைப்பு கோரப்பட்டது. பல முறை இறுதி விசாரணைக்கு நாள் குறிக்கப்பட்ட போதும் விசாரணை இழுத்தடிக்கப்பட்டது.

ஒரு கட்டத்தில் எதிர்மனுதாரர்கள் சார்பில் ஆஜராகி வந்த வழக்கறிஞர்கள் திடீரென தங்களது வக்காலத்துகளைத் திரும்பப் பெற்றனர். இதையடுத்து அட்டாக் பாண்டி கூட்டாளிகள் 12 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி அமர்வு, 2011 முதல் நிலுவையில் இருக்கும் சிபிஐ மேல்முறையீட்டை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

அப்போதும் வழக்கை ஒத்திவைக்குமாறு சிபிஐ தரப்பிலும், குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பிலும் கேட்டுக்கொள்ளப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், வழக்கறிஞர்கள் வைக்காதவர்களுக்காக ஆஜராக நீதிமன்றமே வழக்கறிஞரை நியமித்தும், சிபிஐ தரப்பில் நீதிமன்றத்துக்கு உதவ தனி வழக்கறிஞரை நியமித்தும் விசாரணையைத் தொடர்ந்தனர்.

இறுதி விசாரணை மார்ச் 4-ல் தொடங்கி தொடர்ந்து 4 நாட்கள் நடைபெற்றது. மார்ச் 8-ல் பூட்டிய அறைக்குள் விசாரணை நடைபெற்றது. அன்று சம்பவம் தொடர்பான வீடியோ பதிவுகள், புகைப்படங்களை நீதிபதிகள் பார்வையிட்டனர். பின்னர் தீர்ப்பை ஒத்திவைத்த நீதிபதிகள் நேற்று தீர்ப்பளித்தனர்.

டிஎஸ்பி ராஜாராம் குற்றவாளி

நாளிதழ் அலுவலக எரிப்புச் சம்பவம் நடந்தபோது அலுவலகத்துக்கு வெளியே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டவர் அப்போது ஊமச்சிக்குளம் டிஎஸ்பியாக இருந்த வி. ராஜாராம். இந்த வழக்கு ஒத்தக்கடை போலீஸில் இருந்து சிபிஐக்கு மாற்றப்பட்டதும் டிஎஸ்பி ராஜாராம் 17-வது எதிரியாக வழக்கில் சேர்க்கப்பட்டார். இவரை  சிபிஐ நீதிமன்றம் விடுதலை செய்தது.

மேல்முறையீடு வழக்கில் ராஜாராமை விடுதலை செய்து கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்பட்டது. அவர் இபிகோ 217 பிரிவின் கீழ் (பொது ஊழியராக இருக்கும் நபர் சட்டத்துக்குக் கீழ்ப்படியாத நபர்களை உள்நோக்கத்துடன் காப்பாற்றுதல்) 221 பிரிவு (பொது ஊழியராக இருந்து கொண்டு வேண்டும் என்றே ஒருவர் தப்பிக்க துணையாக இருத்தல்) குற்றவாளி என தீர்மானிக்கப்படுகிறது. அவரது தண்டனை குறித்து முடிவு செய்ய அவர்  மார்ச் 25-ல் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.  சம்பவம் நடந்தபோது டி.எஸ்.பி.யாக இருந்த ராஜாராம் ஏடிஎஸ்பியாக பதவி உயர்வு பெற்று பணி ஓய்வு பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x