Published : 06 Mar 2019 12:05 PM
Last Updated : 06 Mar 2019 12:05 PM

ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க தடை ஆணை பெற நீதிமன்றத்தில் வாதாடிய வைகோவுக்கு மதிமுக பாராட்டுத் தீர்மானம்

ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்குத் தடை ஆணை பெற நீதிமன்றத்தில் வாதாடிய வைகோவுக்கு மதிமுக பாராட்டுத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

மதிமுகவின் 27 ஆவது பொதுக்குழு, இன்று (புதன்கிழமை), சென்னை, அண்ணா நகர், விஜயஸ்ரீ மகாலில் கழக அவைத்தலைவர் திருப்பூர் சு. துரைசாமி தலைமையில் நடைபெற்றது. இப்பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

தீர்மானம் எண். 1:

நாடாளுமன்றத் தேர்தலில், தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் 21 சட்டப்பேரவை தொகுதிகளின் இடைத்தேர்தல்களிலும், திமுக தலைமையிலான அணி வெற்றி வாகை சூடுவதற்கு வீறுகொண்டு பணியாற்ற சூளுரைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தீர்மானம் எண். 2:

பாஜக ஆட்சியைத் தூக்கி எறியவும், மத்திய அரசுக்கு அடிமைச் சேவகம் புரியும் அதிமுக அரசை வீழ்த்தவும், நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான வெற்றிக் கூட்டணியை ஆதரித்து, மகத்தான வரலாற்று மாற்றத்திற்கு வித்திடும் வகையில் வாக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக, புதுச்சேரி வாக்காளர்களை பொதுக்குழு வேண்டிக் கேட்டுக் கொள்கின்றது.

தீர்மானம் எண்:3

பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் விடுதலைக்காக, முதல்வர் தலைமையில் தமிழக அமைச்சரவை கூடி எடுத்த முடிவைச் செயல்படுத்தாமல், ஆறு மாதங்களாக இழுத்தடிக்கின்ற, அரசியல் சட்டத்தை மதிக்காமல், தான்தோன்றித் தனமாகச் செயல்பட்டு வருகின்ற தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு இப்பொதுக்குழு கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றது; ஏழு தமிழர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்துகின்றது.

தீர்மானம் எண்:4

22 ஆண்டு காலம் சோர்வு இன்றி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்துச் சென்றும், நீதிமன்றங்களில் நேர்நின்று வழக்காடியும், ஸ்டெர்லைட் நச்சு ஆலையைத் திறப்பதற்குத் தடை ஆணை பெற்ற கழகப் பொதுச் செயலாளர் வைகோவுக்கு, மதிமுக பொதுக்குழு இதயமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கின்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x