Published : 05 Mar 2019 09:58 AM
Last Updated : 05 Mar 2019 09:58 AM

பகலில் தலைமை ஆசிரியர் இரவில் உடுக்கடி கலைஞர்!

உடுமலை காந்தி நகரைச் சேர்ந்த முனைவர் க.சீதாராமன்(49), தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர். இவரை வீட்டில் பார்ப்பது அரிது. பகல் நேரத்தில் பள்ளியில் சந்திக்கலாம். இரவில் என்றால், ஏதாவது ஒரு கிராமத்து ஓட்டு வீட்டில், தன்  குழுவினருடன் அரிதாரம் பூசிக் கொண்டிருக்கும்போதுதான் அவரைக் காண முடியும். கொஞ்சம் தாமதித்தால், அந்த ஊரின் முக்கிய சந்திப்பில் உடுக்கடித்து கதை சொல்லிக் கொண்டிருப்பதை கேட்கலாம்.

தொன்றுதொட்டு நம் மக்களிடையே 250-க்கும் மேற்பட்ட கதைப் பாடல்கள் புழங்கி வந்துள்ளன. அவற்றில், காத்தவராயன் கதை, சுடலைமாடன் கதை, வள்ளித் திருமணம், சீதா கல்யாணம், கண்ணகி கோவலன் கதை, நல்லதங்காள் கதை என பல்வேறு கதைப் பாடல்களை உடுக்கடித்து பாடும் இவர்,  முனைவர் பட்டம் பெற்றது  அண்ணன்மார் சுவாமி உடுக்கடி கதைப் பாடலில்தான். முனைவர் பட்டத்துடன் உடுக்கடி கதைப் பாடலைக் கைவிட்டுவிடாமல், அதையே சுவாசமாகக் கொண்டு கடந்த 20 ஆண்டுகளில் 500-க்கும் மேற்பட்ட கிராமங்களில்,  ஆயிரக்கணக்கான உடுக்கடி கதைப் பாடல் நிகழ்ச்சிகளை நிகழ்த்தியிருக்கிறார் சீதாராமன்.

கோவையில் ஒரு  கிராமத்து நிகழ்ச்சியில், குழுவினருடன் அரிதாரம் பூசிக் கொண்டிருந்தவரை  சந்தித்து, “இன்றைக்கு உடுக்கடி கதைப் பாடல் வடிவம் முற்றிலுமாய் வழக்கொழிந்துவிட்ட நிலையில், உங்களுக்குள் மட்டும் இது இந்த அளவுக்கு புகுந்தது எப்படி?”  என்ற கேள்வியுடன் அணுகினோம். உதட்டில் பூசிய சாயத்தை கண்ணாடியில் சரிபார்த்துக் கொண்டே பேசினார்.

அண்ணண்மார் சுவாமி கதை

“எனக்கு சொந்த ஊர் உடுமலை எலையமுத்தூர். அப்பா கருப்பணன், அம்மா குப்பாத்தாள். எலையமுத்தூர், குமரலிங்கம்,  குறிச்சிக்கோட்டை பகுதிகள்ல பள்ளிப் படிப்பை முடிச்சேன். உடுமலை அரசு கலைக் கல்லூரியில் பி.எஸ்சி. கணிதம் படிச்சுட்டு, டீச்சர் டிரெய்னிங்கும் படிச்சேன். எம்.ஏ. தமிழ் அண்ணாமலை பல்கலைக்கழகத்துல படிச்சேன். பாரதியார் பல்கலைக்கழகத்துல நாட்டுப்புறவியல் துறையில `அண்ணன்மார் சுவாமி` கதைப் பாடலை ஆய்வு செய்து,  பிஹெச்.டி.  பட்டம் பெற்றேன். இந்த ஆய்வுக்கு மட்டும் 8 ஆண்டுகள் உழைத்தேன்.

இந்த கதைப் பாடல்களை ஊர் ஊராக கொண்டு சென்ற பூளவாடி பொன்னுசாமி,  உடுமலை லிங்கசாமி குழுவினர்,  பூளவாடி முத்துமீனாட்சி தம்பதி, தேவனாம்பாளையம் மயில்சாமி குழுவினருடன் இரண்டற கலந்து, கலையைக் கத்துகிட்டேன்.

இதுல இந்த அளவுக்கு ஆர்வம் வரக் காரணம்,  சின்னவயசு தேடல்தான். எங்க வீட்டுப் பக்கம் உள்ள மதுரை வீரன்சாமி கோயிலில் உடுக்கையடித்து சாமி அழைப்பாங்க.  கிராமத்தில் மாசாணி அம்மன் கோயிலில் அண்ணன்மார் சுவாமி கதையும் படிப்பாங்க. அதுல உடுக்கடி கதை கேட்கிறதுல எனக்கு கொள்ளை ஆர்வம். அப்ப எனக்கு அஞ்சு வயசுதான்.

டிகிரி முடிச்ச பின்னாடி பூளவாடி பொன்னுசாமி கூடவேயிருந்து, உடுக்கடி கதை பாடல் நிகழ்ச்சிகளைப் பார்க்கும்போது,  அதையே பிஹெச்.டி. செய்யலாமுன்னு தோணுச்சு. ரொம்ப கஷ்டப்பட்டு, முனைவர் பட்டம் பெற்றேன்.

தொழில்முறைக் கலைஞர்களோட பேசினது மட்டுமல்ல, இது சம்பந்தமான ஆய்வு நூல்களையும் படிச்சேன். முத்துக்குமாரசாமி எழுதிய `அண்ணன்மார் சுவாமி கதை பன்முக பார்வை’, கனகராஜின் கதைப் பாடல், சக்திக்கனல் எழுதிய `அண்ணன்மார் சுவாமி’ கதை, கனடா நாட்டுப் பெண்மணி பிருந்தாபெக்,  10 ஆண்டுகள் பொன்னர்-சங்கர் கதையை ஆய்வு செஞ்சி எழுதிய ‘யெல்டர்ஸ் பிரதர்ஸ்’  ஆங்கில நூல்னு தேடித் தேடிப் படிச்சேன்.

கதை சொல்லிக் கொண்டே, அதைப் பாடலாக பாடுவது, கதையிலேயே பாடல் பொதிந்து வருவதுனு எல்லாத்தையும் புரிஞ்சிக்கிட்டேன்.  அதிலிருந்து, எந்த கதையானாலும் நானே பாடலாக்கி, உடுக்கடித்து பாடும் திறனையும்  பெற்றேன்.

பொதுவா, வில்லிசை, தவில், நாதஸ்வரக்  கலைஞர்களுக்கு இருக்கும் மரியாதை, உடுக்கடி கதை பாடல் கலைஞர்களுக்கு இல்லை. ஓர் ஊருக்குபோய், நாட்டாமை, ஊர்ப் பெரியவங்களை சந்திச்சு, ‘ஐயா, நாங்க உங்க ஊருக்கு வந்திருக்கோம். பாட்டுப் படிக்கிறோம். உதவி செய்யுங்க’னு கேக்கணும். அதுமட்டுமில்லாம, அந்த கலைஞரே ஒரு தெருவைத் தேர்ந்தெடுத்து, துடைப்பம் கொண்டு சுத்தம் செஞ்சி,  தெரு விளக்கு அடியில், அவரே சூடம் கொளுத்தி, தேங்காய்-பழம் வச்சு பூஜை செஞ்சி,  இந்த கதைப் பாட்டை பாடணும். மக்களாக கூடி, கதைப் பாடலில் லயித்து ஏதாவது காணிக்கை போட்டால்தான் உண்டு.

இந்த நிலையை மாத்தணும். தெருவில் இல்லாம, மற்ற கலைகளைப் போலவே மேடையேற்றணும்னு  ஆர்வம் ஏற்பட்டது.

சொந்த செலவில் மேடை!

2001-ல  என் பி.எஃப். பணம் ரூ.25 ஆயிரத்தை எடுத்துக்கிட்டு, உடுமலை மாரியம்மன் கோயில் தேர்த் திருவிழாவுல சொந்த செலவில் மேடை அமைச்சி, கதைப் பாடல் பாடினேன். ஜனங்க நல்லா ரசிச்சாங்க. அதைப் பார்த்துட்டு திருமூர்த்தி மலை கோயில் அதிகாரி, சிவராத்திரி திருவிழாவுக்கு அங்கே வாய்ப்புக் கொடுத்தார். அங்கேயும் நல்ல வரவேற்பு. அதுக்குப் பின்னாடி, கோவை தண்டு மாரியம்மன் கோயில், ஆனைமலை மாசாணியம்மன் கோயில் அதிகாரிங்க உதவியுடன்,  அங்கெல்லாம் அண்ணன்மார் சுவாமி கதை அரங்கேற்றமாச்சு.

ஆறு வருஷமா, ஒரு மாச சம்பளத்தைக்கூட வீட்டு செலவுக்குக் கொடுக்காம, நிகழ்ச்சிக்கு செலவு செஞ்சிருந்தேன்னா எப்படினு யோசிச்சுப் பாருங்க! என் படிப்புக்கும், திறமைக்கும் ஒரு கல்லூரியில்  பேராசிரியராகப் பணியாற்றி, நல்ல சம்பளம் பெறமுடியும். ஆனா,  ஒன்றை இழந்தால்தான் இன்னொன்றைப் பெற முடியும். அதுதான்,  தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர் பணியிலேயே இருந்துட்டேன்” என்றார் சீதாராமன் பெருமிதத்துடன்.

அண்ணன்மார் சுவாமி கதை,  ஒரு கிராமத்தில் 30, 35 நாட்களுக்கு தொடர்ந்து நடத்தப்படும் பெரும் கதை. அதில், பொன்னர்-சங்கர் திருக்கல்யாணம் முக்கியமான பகுதி. அசல் திருமணம்போலவே நடத்துவது இவர்களது வழக்கம். பொன்னர்-சங்கர் திருமணத்தில் கலந்துகொண்டால் திருமணத்தடை, குழந்தையின்மை நிவர்த்தியாகும் என்பது கொங்கு மக்களிடையே நிலவும் ஐதீகம். இதனால், இந்த நிகழ்வுக்கு பல கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் திரள்வார்கள்.

அதனால், திருமணத்தை மட்டும் ஆடி மாதத்தில் ஒரு நாள், ஒவ்வொரு ஊரிலும் கல்யாண மண்டபத்தைப் பிடித்து நடத்துகிறார் சீதாராமன்.  மூன்று ஆண்டுகளாக இப்படி நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.

“ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் 10 ஆயிரம் பேருக்கு மேல் கூடினார்கள். அன்னதானம், திருமணச்  செலவு, மண்டப வாடகை என ரூ.10 லட்சம் தாண்டியது. அந்த செலவு முழுக்க எங்களுடையதுதான். மக்கள் மனமுவந்துபோடும் காணிக்கைதான் வருமானம். பெரும்பாலும் கையைக் கடித்தாலும், துளியும் வருத்தமில்லை. ஆனால்,  அங்கீகாரம்தான் இல்லை. கெளரவமாவது தரலாமே?” என்கிறார் சீதாராமன்.

சீதாராமன் குழுவில் இருக்கும் சிவகுமார், காங்கயம் அரசு கலைக் கல்லூரியில் கெளரவ விரிவுரையாளர்.  14 ஆண்டுகளாக சீதாராமன் குழுவில் இணைந்துள்ளார். அதேபோல, தொழில்முறைக் கலைஞர் மாரிமுத்து, 5 ஆண்டுகளாக குழுவில் அங்கம் வகிக்கிறார்.

உடுக்கடி கலைஞர்களை அரசு கண்டு கொள்ளுமா?

“தமிழக அரசின் கலை, பண்பாட்டுத் துறை, ஆண்டுதோறும் இயல்,  இசை, நாடகத் துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு கலைமாமணி விருதுகள் அளிக்கிறது.  உடுக்கடி கதைப் பாடலுக்கு இந்த விருது தரப்பட்டதேயில்லை. விருதுப் பட்டியலில் உடுக்கடி பாடல் கலையே இல்லை.அண்ணன்மார் சுவாமி கதையில் ஈடுபாடு கொண்டவர்கள், மகா சிவராத்திரியன்று பொன்னர்-சங்கர் படுகளம் கண்ட பொன்னிவள நாட்டில் கூடுகிறார்கள். பொங்கல், படையல் வைத்து வழிபாடும் நடத்துகிறார்கள். சிலர் உடுக்கடிக் கலைஞர்களையும் அழைத்து, வழிச் செலவுக்கு பணம் கொடுத்து, சோறு போட்டு,  நாலு நாள் உடுக்கடித்து பாடச் சொல்லி கதை கேட்கிறார்கள். அதோடு சரி. கலைஞர்களை வேறு யாரும் கண்டுகொள்வதில்லை. இப்படியிருந்தால், இந்த கலை எப்படி வளரும்?” என்று கேள்வி எழுப்புகிறார் முனைவர் சீதாராமன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x