Published : 16 Mar 2019 02:27 PM
Last Updated : 16 Mar 2019 02:27 PM

ராகுலை விமர்சிக்க எனக்கு எல்லாத் தகுதிகளும் உண்டு: கே.எஸ்.அழகிரிக்கு தமிழிசை பதில்

சொந்தக்காலில் நின்று தலைவராக உயர்ந்த தனக்கு ராகுல் காந்தியை விமர்சிக்க எல்லாத் தகுதிகளும் உண்டு என, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழிசை சவுந்தரராஜன் இன்று (சனிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "ராகுல் காந்தியை எனக்கு விமர்சிக்க தகுதிகள் உள்ளதா என்று கேட்ட தமிழக காங்கிரஸ் தலைவர் கே.ஸ்.அழகிரிக்கு என் பதில்.

நேரு குடும்ப வாரிசு என்ற ஒரே தகுதியைக் கொண்டதால் ராகுல் காந்திக்கு காங்கிரஸ் தலைவர் பதவி வழங்கப்பட்டது. யாரிடமும் சிபாரிசு கோராமல் அரசியலை சுயபுத்தியுடன் பகுத்தாய்ந்து பாதை வகுத்து சொந்தக்காலில் நின்று அடிமட்டத் தொண்டராய் இருந்து உழைப்பால் தலைவராக படிப்படியாக உயர்ந்த எனக்கு இந்தியக் குடிமகள் தமிழ்நாட்டு பிரஜை என்ற முறையில் எனக்கு எல்லாம் தகுதிகளும் உண்டு என்பது உங்களுக்குப் புரியாவிட்டாலும் மக்களுக்கு நன்றாகப் புரியும்.

காமராஜரைப் புகழ பாஜகவுக்கு  என்ன உரிமை எனக் கேட்கும் உங்களுக்கு காமராஜர் காலத்திலேயே காமராஜரைக் கைவிட்டுவிட்டு இந்திரா காங்கிரஸுக்கு ஓடிப்போன கோஷ்டியிலிருந்து வந்ததே தகுதி என தலைவரான உங்களுக்கு காமராஜரைப் பற்றி பேசத் தகுதி இருக்கிறது என நீங்கள் நினைக்கும் போது தேசிய குடும்பத்தில் பிறந்து, தேசியக் கட்சியில் பணியாற்றும் எனக்கு எல்லாத் தகுதியும் உள்ளது.

கார்த்தி சிதம்பரம், காமராஜர் பெயரைச் சொல்லி எத்தனை நாளுக்கு  அரசியல் செய்யப் போகிறீர்கள் என சத்யமூர்த்தி பவனில் பேசியபோது  உங்களுக்கு வராத கோபம் நாங்கள் காமராஜர் புகழ்பாடும் போது வருவது ஏன்?

பெயில் குடும்ப வாரிசுகளின் ஆசி பெற்றவர் என்ற தகுதியில் தலைவரான நீங்கள் என் தலைமைத் தகுதியை விமர்சிக்கிறீர்கள். இந்திரா கொண்டு வந்த அவசரகாலப் பிரகடனமே காமராஜரின் ஆயுளுக்கு எமன் ஆனது என்பது வரலாறு.

இந்திரா காந்தியை மதுரையில் கொலைவெறித் தாக்குதல் நடத்தியதோடு அவர் சிந்திய ரத்தத்தை பெண்மையின் மாண்பை ஆபாசமாக விவரித்த திமுக உடன் கூட்டு வைக்கிறது காங்கிரஸ். அதே திமுகதான் காமராஜர் தேர்தலில் போட்டயிடும் போது அவருக்கு எதிராக ஒரு மாணவனை நிறுத்தி சிறுமைப்படுத்தியது. அதே திமுகவுடன் கூட்டணி வைக்கும் நீங்கள் காமராஜரை பற்றிப் பேசலாமா?

பிரதமர் நரேந்திர மோடி பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளும் போது காமராஜர் என்னுடைய இந்தச் செயலை மிகவும்  பாராட்டியிருப்பார் என்று கூறினார். நீங்கள் கூறும் சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட காங்கிரஸ் கலைக்கப்பட்டு விட்டது. இப்போதுள்ள காங்கிரஸ் ஊழல் நிறைந்த காங்கிரஸ்" என தமிழிசை தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x