Last Updated : 16 Mar, 2019 07:44 AM

 

Published : 16 Mar 2019 07:44 AM
Last Updated : 16 Mar 2019 07:44 AM

கோவை எஸ்பி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்; பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

பாலியல் விவகாரத்தில் பாதிக்கப் பட்ட இளம் பெண்ணுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கவும், பாதிக்கப்பட்ட பெண்ணின் அடை யாளங்களை வெளியிட்ட கோவை எஸ்பி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றி பிறப்பித்த அரசாணையை திரும்ப பெற்று, பாதிக்கப்பட்டவரின் அடை யாளங்கள் இல்லாமல் புதிய அரசாணை வெளியிடவும் நீதிபதி கள் உத்தரவிட்டுள்ளனர்.

திருச்சியைச் சேர்ந்த இளமுகில், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த பொதுநலன் மனு:

பாலியல் உட்பட பல்வேறு குற்ற வீடியோக்கள், ஒலிப்பதிவுகள் பொதுவெளியில் அதிகம் பரப்பப் படுகின்றன. பாலியல் வழக்குகளில் முதல் தகவல் அறிக்கை மற்றும் நீதிமன்ற ஆவணங்கள், பாதிக்கப் பட்டவர்களின் பெயர் உள்ளிட்ட அடையாளங்களை ஊடகங்களில் வெளியிடக் கூடாது என உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை மீறுவோருக்கு 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கவும் சட்டத்தில் வழிவகை உள்ளது.

பாலியல் வழக்கில் விசார ணையை விரைவில் முடிக்கவும், விசாரணையில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த வழிகாட்டுதல்களை பின்பற்றவும், சமூக வலைதளங் களில் பாலியல் தொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள், ஒலிப்பதிவுகளை வெளியிடத் தடை விதித்தும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப் பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் என். கிருபாகரன் எஸ்.எஸ். சுந்தர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் கள் என்.செந்தில்குமார், ஏ.கே.மாணிக்கம் வாதிடும்போது, “பாலி யல் வன்முறை வழக்குகளில் பாதிக்கப்பட்டவரின் அடையா ளத்தை வெளிப்படுத்தக் கூடாது என்ற உச்ச நீதிமன்ற உத்தரவு பின்பற்றப்படவில்லை. இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையிலும் பாதிக்கப்பட்டவரின் பெயர் மற்றும் அடையாளங்கள் குறிப்பிடப்பட் டுள்ளன. இது அப்பட்டமான சட்ட மீறலாகும்” என்றனர்.

வீடியோவுக்கு தடை

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

பாலியல் வன்முறையால் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிய வந்துள்ளது. பாலியல் வன்முறை நீண்ட காலமாக நடைபெற்று வந் துள்ளது. அதில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் துணிச்சலாக முன் வந்து புகார் அளித்துள்ளார். அப் பெண்ணின் அடையாளங்களை வெளியிட்டால், மற்றவர்கள் எப்படி புகார் அளிக்க முன்வருவர்? பாலியல் சம்பவம் தொடர்பான வீடியோக்களை வெளியிடவும், பகிரவும் தடை விதிக்கப்படுகிறது. இந்த வீடியோக்களை வெளியிடு வது, பகிர்வது குற்றம் என தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.

மொபைல் போன்கள்

குடும்பத்தில் பெண் குழந்தை களின் மீது போதிய அன்பு, அக் கறை, கண்காணிப்பு இல்லாததே இது போன்ற பிரச்சினைகளுக்கு காரணம். இந்த சம்பவம் பெற் றோர்கள் பெண் குழந்தைகளிடம் அன்பாக இருக்க வேண்டியதன் அவசியத்தையும், அவர்களை கண்காணிக்க வேண்டியதன் அவ சியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பொள்ளாச்சியை தவிர்த்து வேறு பகுதியில் வைத்து யாருக்கும் தெரியாமல் கவுன்சலிங் வழங்க வேண்டும்.

இணையதளத்தின் நன்மை, தீமை குறித்து விழிப்புணர்வு ஏற் படுத்த வேண்டும். மொபைல் போன் கள் பொதுமக்களின் வாழ்வில் ஒரு அங்கமாக இருப்பதால், அது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பாடத் திட்டங்களை கொண்டு வர வேண்டும். பாலியல் விவகாரம் தொடர்பான வீடியோக்களை தடை செய்ய வேண்டும். இதற்காக இணைய சேவை வழங்குவோர் சங்கச் செயலாளரை நீதிமன்றம் தாமாக முன்வந்து இவ்வழக்கில் எதிர் மனுதாரராக சேர்க்கிறது.

புதிய அரசாணை

மேலும் பாலியல் வழக்கை சிபிஐக்கு மாற்றி பிறப்பித்த அர சாணையை தமிழக அரசு திரும்பப் பெற்று, பாதிக்கப்பட்டவரின் அடையாளம் இல்லாமல் புதிய அரசாணை பிறப்பிக்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்துடன் அரசாணை வெளியிட்டதால் அப்பெண்ணுக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்தப் பெண்ணுக்கு தமிழக அரசு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.

பாலியல் விவகாரம் தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்களை இணையதளங்களில் இருந்து நீக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளங்களை வெளியிட்ட கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரின் செயல்பாடும் கடும் கண்டனத்துக் குரியது. அவர் மீது தமிழக அரசு துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த மனுதாரர் கேட்டுள்ள இடைக்கால நிவாரணம் உயர் நீதிமன்ற கிளையின் வரம்புக்கு உட்படாத பகுதியில் நடந்ததால், சென்னை உயர் நீதிமன்ற முதல் அமர்வுக்கு மாற்றப்படுகிறது.

இவ்வாறு நீதிபதிகள் உத்தர விட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x