Published : 04 Mar 2019 11:33 AM
Last Updated : 04 Mar 2019 11:33 AM

திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதி: ஒப்பந்தம் கையெழுத்தானது

திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.

 

கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் அதிமுக ஒரு அணியாகவும், திமுக ஒரு அணியாகவும், மக்கள் நல கூட்டணி ஒரு அணியாகவும் தனியாக பிரிந்து நின்று போட்டியிட்டனர். இதுதவிர பாஜக, பாமக தனியாக போட்டியிட்டனர்.

 

மக்கள் நலக் கூட்டணியில் தேமுதிக, மதிமுக, இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இருந்தன. மக்கள் நலக் கூட்டணியை உருவாக்குவதிலும் அந்த கூட்டணிக்கு கட்சிகளைக் கொண்டு வருவதிலும் திருமாவளவன் முனைப்புடன் இணைந்து செயலாற்றினார்.

 

ஆனால் சட்டமன்றத் தேர்தலில் இரண்டு பெரிய கட்சிகள் இடையே சிக்கிய மக்கள் நலக்கூட்டணி படுதோல்வியை சந்தித்தது. நூற்றுக்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் திருமாவளவனை தோல்வியை தழுவினார். தேர்தலுக்குப் பின்னர் மக்கள் நல கூட்டணிக்கு உள்ளே கருத்து வேறுபாடுகள் தோன்ற ஆரம்பித்தன.

 

திமுக தலைவர் கருணாநிதி வயோதிகம் காரணமாக அரசியலில் இருந்து ஒதுங்கும் நிலை ஏற்பட, திமுக, ஸ்டாலின் தலைமையில் செயல்படும் நிலை ஏற்பட்டது. அப்போது திமுக நடத்திய பல்வேறு போராட்டங்களுக்கு மக்கள் நல கூட்டணியில் இருந்து தாமாக முன்வந்து திருமாவளவன் ஆதரவு கொடுத்தார்.

 

மக்கள் நலக் கூட்டணியில் இருந்துக்கொண்டு முதலில் திமுகவுக்கு ஆதரவு கொடுத்த கட்சி என்றால் அது விடுதலை சிறுத்தைகள் கட்சிதான். மக்கள் நல கூட்டணி முற்றிலுமாக உடைந்தது. அதன் பின்னரே மதிமுக, இடதுசாரி கட்சிகள் காலப்போக்கில் போராட்ட களத்தில் திமுகவுடன் இணைந்தனர்.

 

நாடாளுமன்றத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுக கூட்டணியில் நீடிக்குமா என்ற நிறைய கடந்த சில வாரங்களுக்கு முன்பு இருந்தது. பாட்டாளி மக்கள் கட்சி திமுக கூட்டணிக்கு வருவதற்கு திமுக தலைமை முயற்சி எடுத்தபோது விடுதலை சிறுத்தைகள் கட்சி வெளியேறும் நிலை உருவாக இருந்தது.

 

ஆனால் திடீரென அதிமுக கூட்டணியில் பாமக இணைந்தது. இதனால் விசிகே, திமுக கூட்டணியில் தொடர்ந்தது. நாடாளுமன்ற தேர்தலில் தோழமைக் கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்வதில் தொடர்ந்து திமுக கூட்டணியில் பின்னடைவு ஏற்பட்டு வருகிறது.

 

தலா இரண்டு தொகுதிகளை, இடதுசாரிகள், விசிகே கேட்கும் நிலையில் ஒரு தொகுதி மட்டுமே கொடுக்க முடியும் என திமுக பேசிவருவதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் திமுக தனது அணிக்குள் தேமுதிக வருவதற்காக கூட்டணி கட்சி பேச்சுவார்த்தையை தள்ளி வைத்துவந்தது.

 

 நாட்கள் கடப்பதால் இன்று மற்றும் நாளைக்குள் பேச்சுவார்த்தையை முடித்து 6-ம் தேதி கூட்டணியை அறிவிக்க திமுக முடிவு செய்துள்ளது. இந்நிலையில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியுடன் திமுக  இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையை தொடங்கியது.

 

இன்று நடந்த பேச்சு வார்த்தையில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகளை திமுக  வழங்கியது. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. ஏற்கனவே விடுதலை சிறுத்தைகள் கட்சி நின்ற சிதம்பரம் தொகுதி மற்றும் விழுப்புரம் தொகுதிகள் மீண்டும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்படலாம் என தெரிகிறது.

 

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திருவள்ளூர் தொகுதியையும், சிதம்பரம் தொகுதியையும் கேட்பதாக கூறப்படுகிறது. திருவள்ளூர் தொகுதியை காங்கிரஸும் கேட்பதால் யாருக்கு ஒதுக்கப்படும் என்பது பின்னர் தெரியவரும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x