Published : 18 Sep 2014 01:01 PM
Last Updated : 18 Sep 2014 01:01 PM

தமிழக தேசிய நெடுஞ்சாலைகளின் மோசமான நிலைக்கு அரசின் அலட்சியமே காரணம்: ராமதாஸ்

தமிழகத்திலுள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் நிலைமை மோசமாக இருப்பதற்கு தமிழக அரசின் அலட்சியமே காரணம் என பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், தமிழக நெடுஞ்சாலைத்துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் உடனடியாக நிரப்ப வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "தமிழ்நாட்டில் ரூ.3,000 கோடி செலவில் விரிவான சாலை கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது. இதற்கான நிதியை ஒதுக்குவதற்கான அரசாணை (ஆணை எண்.108) கடந்த 12 ஆம் தேதி பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

இதுபோன்ற பெரிய அளவிலான சாலைத் திட்டங்களை தமிழக அரசு அறிவித்து வரும் போதிலும், தமிழகத்திலுள்ள நெடுஞ்சாலைகளின் நிலைமை, குறிப்பாக தேசிய நெடுஞ்சாலைகளின் நிலைமை மோசமாக இருப்பது கவலையளிக்கிறது.

தமிழ்நாட்டில் மொத்தம் 4974 கிலோ மீட்டர் நீளத்திற்கு தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன. இவற்றில் 2724 கி.மீ நீள சாலைகள் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், மீதமுள்ள 2250 கி.மீ. நீள சாலைகள் பராமரிப்புக்காக தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன.

இந்த சாலைகளை பராமரிப்பதற்காக தமிழக நெடுஞ்சாலைகள் துறையில் தேசிய நெடுஞ்சாலைகள் பிரிவு என்ற தனி அலகு செயல்பட்டு வருகிறது. தேசிய நெடுஞ்சாலைகளின் பராமரிப்புப் பணியை தமிழக நெடுஞ்சாலை துறை மேற்கொள்ளும் போதிலும் அதற்கான செலவை மாநில அரசுக்கு மத்திய அரசு வழங்கி விடுகிறது. ஆனால், தமிழக அரசின் அலட்சியம் காரணமாக தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள் முறையாக பராமரிக்கப்படாமல் மிகவும் மோசமான நிலைமையில் உள்ளன.

தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் செய்வதே மிகப்பெரிய சாகசம் என்று சொல்லும் அளவுக்கு அவை குண்டும் குழியுமாக மாறிவிட்டன.

ஆண்டு தோறும் சுமார் ரூ.500 கோடி மதிப்புள்ள சாலைப் பணிகளை மேற்கொள்ள வேண்டிய தமிழக நெடுஞ்சாலைத் துறையிலுள்ள தேசிய நெடுஞ்சாலைகள் பிரிவின் தலைமைப் பொறியாளர் பணியிடம் பல மாதங்களாக காலியாக உள்ளது.

தேசிய நெடுஞ்சாலைகள் பிரிவின் தலைமைப் பொறியாளர் பணிக்குத் தகுதியான பலர் நெடுஞ்சாலைத்துறையில் பணியாற்றி வரும் போதிலும், ஆட்சியாளர்களுக்கு வேண்டிய அதிகாரி ஒருவரை நியமிப்பதற்காகவே இந்தப் பணியிடம் பல மாதங்களாக காலியாக வைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

இதேபோல் மற்ற பிரிவுகளிலும் மேற்பார்வைப் பொறியாளர், துணைத் தலைமை பொறியாளர் உள்ளிட்ட பல பணியிடங்கள் நிரப்பப்படாததால் நெடுஞ்சாலைப் பணிகள் முடங்கிக் கிடக்கின்றன.

தமிழக அரசின் ஒத்துழைப்பு இல்லாததாலும், ஆளுங்கட்சியினர் கையூட்டு கேட்டு மிரட்டுவதாலும் தமிழகத்தில் ரூ.4641 கோடி மதிப்புள்ள 972.3 கி.மீ நீளத்திற்கான 8 நெடுஞ்சாலைத் திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் முடக்கப்பட்டிருப்பதாக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் தலைமைப் பொது மேலாளர் ஐ.ஜி.ரெட்டி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளிப்படையாக குற்றஞ்சாற்றியிருந்தார்.

அதன்பிறகும் அத்திட்டப்பணிகளுக்கோ அல்லது மதுரவாயல்-சென்னை துறைமுகம் பறக்கும் பாலம் திட்டத்திற்கோ தமிழக அரசு ஒத்துழைப்பு தரவில்லை என்பதுடன், மத்திய அரசு நிதி ஒதுக்கியத் திட்டங்களையும் செயல்படுத்தாமல் கிடப்பில் போட்டிருக்கிறது என்பதிலிருந்தே தமிழ்நாட்டு மக்களின் நலனில் ஜெயலலிதா அரசு எந்தளவுக்கு அக்கறைக் கொண்டிருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.

மத்திய அரசின் சாலைத் திட்டங்கள் மட்டுமின்றி மாநில அரசால் அறிவிக்கப்பட்ட பல திட்டங்களும் கிடப்பில் போடப்பட்டுள்ளன. பொறுப்பான பதவிகளில் நேர்மையான அதிகாரிகளை அமர்த்தி, அவர்களை ஊக்குவித்தால் மட்டுமே நெடுஞ்சாலைத் திட்டங்களை விரைந்து நிறைவேற்ற முடியும்.

இல்லாவிட்டால் தமிழக அரசு இப்போது அறிவித்துள்ள ரூ.3000 கோடி மதிப்புள்ள நெடுஞ்சாலைத் திட்டங்களைக் கூட செயல்படுத்த முடியாமல் போய்விடும், எனவே, தமிழக நெடுஞ்சாலைத்துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் அனைத்தையும் உடனடியாக நிரப்பி, அறிவிக்கப்பட்டுள்ள சாலைத் திட்டங்கள் அனைத்தையும் விரைவாக நிறைவேற்றி முடிக்க தமிழக அரசு முன்வர வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x