Last Updated : 06 Feb, 2019 08:10 AM

 

Published : 06 Feb 2019 08:10 AM
Last Updated : 06 Feb 2019 08:10 AM

தமிழக அரசியலில் தொடரும் கூட்டணி குழப்பம்; கூட்டணியை இறுதி செய்ய முடியாமல் திணறும் அதிமுக, திமுக

மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் கூட்டணியை இறுதி செய்ய முடியாமல் அதிமுகவும், திமுகவும் திணறி வருகின்றன.

மக்களவைத் தேர்தலுக்கான தேதி மார்ச் முதல் வாரத்தில் அறிவிக்கப்படவுள்ளது. அதற்கு இன்னும் ஒரு மாதம்கூட இல்லாத நிலையில் தமிழகத்தில் கூட்டணிக் குழப்பம் தொடர்ந்து வருகிறது. திமுகவைப் பொறுத்தவரை ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்து காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணியை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த அணியில் மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் உள்ளன.

தொகுதிப் பங்கீடு குறித்து பேச திமுகவில் குழு அமைக்கப்பட்டு 2 வாரங்களுக்கு மேல் ஆகியும் இதுவரை எந்தக் கட்சியுடனும் பேச்சு நடத்தப்படவில்லை. தங்கள்கூட்டணியில் எந்தெந்த கட்சிகள்உள்ளன என்பதையும் திமுக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

இதுதொடர்பாக ‘இந்து தமிழ்' நாளிதழிடம் பேசிய திமுக முக்கிய நிர்வாகி ஒருவர், ‘‘திமுக - காங்கிரஸ் கூட்டணியில் மொத்தம் 8 கட்சிகள் உள்ளன. எண்ணிக்கை பெரிதாக தெரிந்தாலும் காங்கிரஸ் தவிர மற்ற கட்சிகளுக்கு குறிப்பிடும்படியான வாக்கு வங்கி இல்லை. இதனை கருத்தில் கொண்டுதான் கூட்டணியில் மேலும் சிலகட்சிகள் இணைய வாய்ப்பிருப்ப தாக ஏற்கெனவே ஸ்டாலின் கூறினார். பாமகவை திமுக கூட்டணியில் சேர்க்க வேண்டும் என வட மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகளும், சில மூத்த தலைவர்களும் ஸ்டாலினிடம் வலியுறுத்தியுள்ளனர். விசிக இருப்பதால் பாமகவை சேர்ப்பதில் நெருடல் இருக்கிறது. அதிக கட்சிகளை சேர்த்தால் திமுக போட்டியிடும் தொகுதிகள் குறைந்து விடும். இதனால்தான் கூட்டணியை இறுதி செய்ய முடியவில்லை'' என்றார்.

பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸிடம் திமுகநிர்வாகிகள் சிலர் பேசி வருவதாகக் கூறப்படுகிறது. அதனால்தான் கூட்டணியை இறுதி செய்வதில் திமுகவுக்கு தாமதம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அதிமுக எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி அமைக்கப் போகிறது என்பதுதான் தமிழக அரசியலில் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. அதிமுக - அமமுகவை இணைத்து பாமக, தேமுதிக, புதிய தமிழகம், கொமதேக ஆகியவற்றுடன் கூட்டணியை அமைக்க வேண்டும் என்பது பாஜக தேசியத் தலைவர் அமித்ஷாவின் திட்டம்.

இதுதொடர்பாக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருடன் அமித்ஷா பேச்சு நடத்தியுள்ளார். அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனிடம் அமித் ஷா தரப்பில் அதிமுக இணைப்பு தொடர்பாக பேசியதாகக் கூறப்படுகிறது. ஆனால், தினகரன் மறுத்து விட்டதால் அதிமுக இணைப்பு சாத்தி யப்படவில்லை.

தினகரன் இல்லாமலேயே கூட்டணியை உறுதிப்படுத்தலாம் என்றால் பாஜக கூட்டணிக்கு மு.தம்பிதுரை, சி.பொன்னையன் போன்ற மூத்த தலைவர்களும், பல அமைச்சர்களும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதனால் கூட்டணி தொடர்பாக எந்த முடிவையும் எடுக்க முடியாமல் அதிமுக திணறி வருகிறது. இருப்பினும் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோரிடம் அமித் ஷா தொடர்ந்து பேசி வருவதாக பாஜக மூத்த தலைவர் ஒருவர் 'இந்து தமிழ்' நாளிதழிடம் தெரிவித்தார்.

அதிமுகவுக்குள் எழுந்துள்ள பாஜக எதிர்ப்புக் குரல்கள் குறித்து அமித் ஷாவிடம் எடுத்துக் கூறிய முதல்வர் பழனிசாமி, கூட்டணி அமைக்க தயக்கம் தெரிவித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் பாமக, தேமுதிக, புதிய தமிழகம் ஆகிய கட்சிகளுடன் அதிமுக கூட்டணி பேச்சு நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

ஆளும் கட்சியான அதிமுகவும், பிரதான எதிர்க்கட்சியான திமுகவும் கூட்டணியை இறுதி செய்ய முடியாமல் திணறி வருவதால் தமிழக அரசியலில் கூட்டணி குழப்பம் தொடர்ந்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x