Published : 19 Feb 2019 10:01 AM
Last Updated : 19 Feb 2019 10:01 AM

சாயம் படிந்த திருப்பூர் மண்ணில் இயற்கை வேளாண்மையை முன்னெடுத்த `வெற்றி’ அமைப்பு

அடுத்த பாய்ச்சலுக்குத் தயாராகிவிட்டது திருப்பூர் வெற்றி அமைப்பு. `வனத்துக்குள் திருப்பூர்` திட்டம் பிரம்மாண்டமாக வேர்விட்டுள்ள நிலையில், தற்போது நஞ்சில்லா வேளாண்மைக்கு விதை தூவப்பட்டுள்ளது. பின்னலாடைத் துறையின் அபரிமிதமான வளர்ச்சியால் சாயம் படிந்த திருப்பூர் மண்ணை திருத்தி, விதை தூவும் பணிக்கான விழிப்புணர்வு முன்னெடுப்பைத் தொடங்கி உள்ளது `வெற்றி` அமைப்பு..

பின்னலாடை நகரம் என்பது திருப்பூரின் தற்போதைய முகவரிதான். அதற்கு முன்பு விவசாயம்தான் இங்கு பிரதான தொழில்.  இன்றைக்கு  பின்னலாடைத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் பலரும், விவசாயக்  குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதே இதற்குச்  சான்று.

திருப்பூர் மங்கலம் சாலை ஆண்டிபாளையம் பிரிவை அடுத்துள்ள ‘லிட்டில் பிளவர் கான்வென்ட்’ பின்புறம், கிளாசிக் பார்மஸில் நஞ்சில்லா மாதிரிப் பண்ணையை அமைத்துள்ளனர் வெற்றி  அமைப்பினர். மாதந்தோறும் இரு நாட்கள் இயற்கை வேளாண்மை தொடர்பாக ‘ஆதி தமிழனின் இயற்கை வேளாண்மை’ என்ற பெயரில் தன்னார்வலர்களுக்குப் பயிற்சி  அளிக்கப்படுகிறது.

மாதிரிப் பண்ணையில்  விவசாயக் கூலித் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். களைகூட முளைக்காத சாயம் படிந்த மண்ணை திருத்தியதில், தற்போது அங்கு  பூக்கள் பூக்கின்றன. காய்கறிகள் பயிரிடப்பட்டுள்ளன. குருவிகள் தஞ்சமடைகின்றன!

100 நாள் திட்டமாக, மாதிரிப் பண்ணையில் பல்வேறு முன் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இயற்கை விவசாயம் மூலம் மண்ணை மாற்றுவதால், இந்த வேளாண்மையை ‘பேராற்றல் வேளாண்மை’ என்று அழைப்பதாக சொல்கிறார் இங்கு பயிற்சி தரும் இயற்கை வேளாண் பயிற்சியாளர் எம்.ரேவதி.

உலக அளவில்  பல்வேறு வேளாண் பல்கலைக்கழகங்களால் அங்கீகரிக்கப்பட்டு, சிறப்பு  பேராசிரியராகப் பணிபுரியும் இவர், நாகை மாவட்டத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை மீண்டும் அதே தன்மையுடன் விவசாய நிலங்களாக மாற்றியவர்.

“விதை தூவுவது தொடங்கி அறுவடை வரை அனைத்தும் 100 நாட்களிலும்,  துளி நஞ்சுமின்றி,  விவசாயம் செய்யத் திட்டமிட்டுள்ளோம். மண்ணில் ரசாயனத்தைக் கொட்டியதால்,  மண் அதன் தன்மையை இழந்த நிலையில், அந்த மண்ணை முறைப்படி திருத்தினால் 100 நாட்களில் நஞ்சில்லா பூமியாக மாற்ற முடியும் என்பதை நிரூபிக்க உள்ளோம். நீர்ச்சத்து குறைந்த நிலங்களில் முன் மாதிரி விவசாயத்தை முன்னெடுப்பதுதான் எங்களின் நோக்கம்.

இயற்கை விவசாயத்தை நாடிவருபவர்களுக்கு இரண்டு நாட்கள் பயிற்சி அளிக்கிறோம். அதன் ஒரு பகுதியாக, வெறும் வகுப்பறைப் பயிற்சியாக இல்லாமல், களப் பயிற்சியையும் இந்த மாதிரிப் பண்ணையில் வழங்குகிறோம்.

ஐந்து ஏக்கர் நிலத்தில் இந்த திட்டத்தை தொடங்கியுள்ளோம். நீர்மேலாண்மை,  மரங்கள், தாவரங்கள் மற்றும் பறவைகளுக்கான உகந்த சூழலாக ஒருங்கிணைந்த பண்ணை வளாகம், நாட்டுக்கோழி வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, பால் பண்ணை, தேனீ வளர்ப்பு, வான்கோழி வளர்ப்பு, மீன் பண்ணை, வாத்து வளர்ப்பு, மூலிகைப் பண்ணை, பெண்களுக்கு வீட்டுத்தோட்டம், மாடித்தோட்டம் என பல்வேறு விஷயங்களைக் கற்றுத்தருகிறோம்.

பயிர்களில் பூச்சிகள் தாக்குதல், களை போன்றவற்றை நீக்க ’கிளிபோசேட்’ எனும் ரசாயன பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்தப்படுகிறது. இந்த பூச்சிக்கொல்லியை அமெரிக்காவைச் சேர்ந்த மான்சான்டோ என்ற நிறுவனம் உற்பத்தி செய்கிறது. இந்த மருந்தை தெளிப்பதன் மூலம் களைகள் கட்டுப்படுத்தப்பட்டு, பூச்சிகளும் அழியும். ஆனால், `கிளிபோசேட்’ பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கப்பட்டு, விளைவிக்கப்பட்ட பயிர்வகைகளைச்  சாப்பிடும் மனிதர்கள் புற்றுநோய், சிறுநீரகப் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர்.

இந்நிலையில், இந்தியாவில் ஆந்திராவைத் தொடர்ந்து, கேரள மாநிலமும் கடந்த சில நாட்களுக்கு முன்பு கிளிபோசேட்டுக்கு தடை விதித்தது. 

மண்ணை மலடாக்கும் உரங்கள் கேரளாவில் தடை செய்யப்படுகின்றன. நாமும் மாற்றத்தைத் தொடர வேண்டிய நிலை உள்ளது. களைக்கொல்லியில்கூட காலாவதியான மருந்துகளை தமிழகத்தில் டன் கணக்கில் பறிமுதல் செய்கிறார்கள்.   இதை வாங்கிப்  பயன்படுத்தும் விவசாயிகள், விளைச்சலையும் எடுக்க முடியாமல்,  மண்ணையும் நாசம் செய்யும் நிலை ஏற்படுகிறது.

வெற்றி அமைப்பின் மாதாந்திர  இயற்கை வேளாண்  பயிற்சிக்காக, திருப்பூர் மட்டுமின்றி, கோவை, ஈரோடு, சேலம் என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இயற்கை விவசாயத்தில் பேரார்வம் உடைய முதியவர்கள் தொடங்கி, இயற்கை வேளாண்மையில் நம்பிக்கை வைத்திருக்கும் இளைஞர்கள் வரை பலரும் வந்து பயிற்சி எடுக்கிறார்கள். இதற்காக இரண்டு நாட்கள் உணவு வசதியுடன், குறிப்பிட்ட கட்டணமும் வசூலிக்கப்படுகிறது” என்றார் எம்.ரேவதி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x