Published : 11 Feb 2019 12:34 PM
Last Updated : 11 Feb 2019 12:34 PM

தமிழகம் முழுவதும் ஏழைத் தொழிலாளர் குடும்பங்களுக்கு தலா ரூ.2,000 சிறப்பு நிதியுதவி: விதி எண்.110-ன் கீழ் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

தமிழகம் முழுவதும் ஏழைத் தொழிலாளர் குடும்பங்களுக்கு இந்த ஆண்டு தமிழக அரசின் சிறப்பு நிதியுதவியாக தலா 2,000 ரூபாய் வழங்கப்படும் என, முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை விதி எண்.110-ன் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (திங்கள்கிழமை) வெளியிட்ட அறிவிப்பு:

"அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிதான், தமிழ்நாட்டின் வளர்ச்சியாக இருக்கும் என்பதைக் கருத்தில் கொண்டு, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் பயன் அனைத்து மக்களையும் சென்றடையும் வண்ணம் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்தினார்.

தமிழக அரசு, ஏழை, எளிய மக்களின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு, அவர்களை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல, பல்வேறு நலத் திட்டங்களையும், வளர்ச்சித் திட்டங்களையும் சிறப்பாக செயல்படுத்தி வருகின்றது.

பல மாவட்டங்களில் 'கஜா' புயலின் தாக்கத்தினாலும், பருவமழை பொய்த்ததன் காரணமாக தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியினாலும் ஏழை மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பதைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு முழுவதும் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும், குறிப்பாக விவசாயத் தொழிலாளர்கள், நகர்ப்புற ஏழைகள், பட்டாசுத் தொழிலாளர்கள், மீன்பிடி தொழிலாளர்கள், விசைத்தறி தொழிலாளர்கள், கைத்தறி தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், சலவைத் தொழிலாளர்கள், மரம் ஏறும் தொழிலாளர்கள், உப்பளத் தொழிலாளர்கள், காலணி மற்றும் தோல் பொருட்கள் தயாரிக்கும் தொழிலாளர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள், மண்பாண்டத் தொழிலாளர்கள், கைவினைஞர்கள் மற்றும் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற ஏழைத் தொழிலாளர் குடும்பங்களுக்கு இந்த ஆண்டு தமிழக அரசின் சிறப்பு நிதியுதவியாக தலா 2,000 ரூபாய் வழங்கப்படும் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இதனால், கிராமப்புறத்தில் வாழும் சுமார் 35 லட்சம் ஏழைக் குடும்பங்களும், நகர்ப்புறத்தில் வாழும் சுமார் 25 லட்சம் ஏழைக் குடும்பங்களும், ஆக மொத்தம் வறுமைக் கோட்டுக்குக்கீழ் வாழும் சுமார் 60 லட்சம் ஏழைக் குடும்பங்கள் தலா 2,000 ரூபாய் சிறப்பு நிதி உதவியைப் பெறுவர். 

இதற்கென, 1,200 கோடி ரூபாய் 2018-19 துணை மானியக் கோரிக்கையில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்".

இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x