Published : 21 Feb 2019 02:57 PM
Last Updated : 21 Feb 2019 02:57 PM

விஜயகாந்துடன் சந்திப்பு: தூதுவராக சென்றாரா திருநாவுக்கரசர்?

அதிமுக கூட்டணிக்குள் வர ஏகப்பட்ட கண்டிஷன்களை போட்டு தேமுதிக முரண்டு பிடிக்கும் நிலையில் திமுக கூட்டணியில் தேமுதிகவை இழுப்பதற்காக  திருநாவுக்கரசர் தூது சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

2019- நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக, பாஜக மேலுள்ள கடும் விமர்சனத்தால் பாமக போன்ற கட்சிகள் அதிமுக கூட்டணிக்கு போகாது என திமுக தலைமை எண்ணியது. இதனால் சற்று மெத்தனமாக இருந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பாமகவை கூட்டணிக்குள் கொண்டு வந்தது அதிமுக. பாமக கூட்டணி உறுதியானதில் 21 தொகுதிக்கான இடைத்தேர்தலை தைரியமாக சந்திக்கும் மனநிலைக்கு வந்துள்ளது அதிமுக.

தேர்தலை சந்தித்து வெற்றிபெறுவது கடந்த மாதம் இருந்தது போன்ற மலர் பாதை அல்ல என்பதை தற்போது திமுக கூட்டணி உணர்ந்துள்ளது. அதே நேரம் பாஜக கூட்டணிக்குள் செல்ல விஜயகாந்தின் முடிவில் மாற்றம் வந்ததால் சிக்கல் ஏற்பட்டுள்ளது. திமுக தலைமையும் இதை உணர்ந்தே வந்துள்ளது. அதனால் தேமுதிகவுக்கான வாசல் திறக்கப்பட்டுள்ளது என்கிற கருத்து திமுக வட்டாரத்தில் கூறப்படுகிறது.

இதை உறுதிப்படுத்தும் வகையில் திமுக தலைவர் ஸ்டாலினும் நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் தேமுதிகவுடன் கூட்டணி என்பதே இல்லை என மறுக்கவில்லை. தற்போதுள்ள நிலையில் திமுகவும் ராஜதந்திர நடவடிக்கையில் இறங்கியுள்ளது. விட்டுக்கொடுத்து தூக்குவது திமுக தலைவர் கருணாநிதியின் பாணி. அதுதான் தேர்தல் கூட்டணியில் உதவும் என்பதை யாரும் மறுக்க முடியாது.

தற்போது அதை நோக்கிய நகர்வு உள்ளதை நடைபெறும் சம்பவங்கள் எடுத்துக்காட்டுவதாக உள்ளது. 21 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேமுதிக நின்ற 8 தொகுதிகள் நிலைப்பற்றி அதிமுக கூட்டணிக்கு விஜயகாந்த் போடும் கண்டிஷன், அதிமுக மேடையில் பிரச்சாரம் செய்ய மாட்டேன் என மறுப்பது போன்ற விவகாரங்கள் கூட்டணிக்கு முட்டுக்கட்டையாக உள்ள நிலையில் திமுக கூட்டணியின் தூதுவராக விஜயகாந்தின் நண்பர் திருநாவுக்கரசர் சென்றுள்ளார் என அரசியல் வட்டார தகவல்கள் கூறுகின்றன. 

திமுக கூட்டணிக்குள் விஜய்காந்த் வர தயக்கம்காட்டுவதை திருநாவுக்கரசர் தனது பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துவைப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அப்படி இணைவதாக இருந்தால் நாடாளுமன்ற தொகுதிகளுடன் தேமுதிகவுக்கு அவர்கள் நின்ற 8 தொகுதிகளில் சில தொகுதிகளை திமுகவிடம் கேட்டுப்பெறலாம். இதன்மூலம் சட்டப்பேரவையில் தேமுதிக கணக்கு துவக்கப்படலாம்.

இதுபோன்ற கண்டிஷன்களில் திமுக தனது நிலையை விட்டுக்கொடுக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேற்கண்ட விஷயங்கள் குறித்த முதல் நகர்வுக்கான தூதுவராக திருநாவுக்கரசர் சென்றிருக்கலாம் என அரசியல் வட்டார தகவல்கள் கூறுகின்றன.

திருநாவுக்கரசரும் இதை மறுக்கவில்லை. அரசியல் பேசும் சந்திப்புத்தான் இது என அவர் பேட்டி அளித்தார். தேமுதிக பெற்ற வாக்கு சதவிகிதத்திற்கு இது கொஞ்சம் அதிகம் என்று சிலர் கூறினாலும் இன்றுள்ள நிலையில் எதையும் யாரும் முடிவு செய்ய முடியாது என்பதே நடைமுறை உண்மை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x